உணர்வோசை

கொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை

கொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எளிதில் பாதிக்கப்படக்கூடிய, பாதிக்கப்பட்டு மரணம் வரை போகிற பிரிவினரிடம் பகுதிவாரியாக சோதனையை மேற்கொள்ள முடியும்.

சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி..!

இன்றைய நாளின் காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 15, 413 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். மொத்தம் 4, 10, 461 பேருக்கு கொரோனா தொற்று என்று பதிவாகியுள்ளது.

தொற்று ஏற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55.5%) குணமடைந்து வீடு திரும்பினாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்திய அளவில் 13, 254 பேர் அதாவது 3.2% பேர் இந்தக் கொள்ளை நோய்க்கு பலியாகியிருக்கின்றனர்.

நாடளவில் தொற்றுப் பரவலின் வீச்சு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஐரோப்பிய நாடுகளைப் போல இல்லாமல், ஒரு இலட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு இந்தியாவில் 111 நாள்கள் ஆகின. ஆனால், அடுத்த 15 நாள்களில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் பேர் அதாவது இரண்டு மடங்கு. அதையடுத்த 18ஆவது நாளான இன்று 4 இலட்சம் பேரைத் தொற்றியிருக்கிறது, கொரோனா கொள்ளை நோய்.

கொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆயிரங்களில் இருந்த அன்றாடத் தொற்று பாதிப்பின் அளவானது, நான்கு நாள்களாக 2 ஆயிரத்துக்கும் மேல் தொடர்கிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த உயிரிழப்பும் இரட்டை இலக்கமாகி, பல பத்துகளாகப் பெருகியபடி இருக்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுப் பரவல் வேகமும் வீச்சும் மளமளவெனப் பெருகி வருகிறது. குறைந்த வருவாய்ப் பிரிவினர் அதிகமாகவும் அடர்த்தியாகவும் வசிக்கும் குறிப்பிட்ட பகுதிகளில்தான் தொற்று பரவும் என கூறப்பட்டுவந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னரே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது எனக் கூறிய நிலையில், ஆள் அடையாளம், வசிக்கும் பகுதி, வயது, பால், இனம், வசதி, சாதி, மதம் பார்க்காமல் தலைநகர் சென்னையில் எல்லா தரப்பினரையும் கொரோனா தொற்று தாக்கி வருகிறது.

உயர் வருவாய்ப் பிரிவினரான தொழில்துறை, மருத்துவத் தொழில்துறை, பொறியியல் துறை பிரபலங்கள் பலரும் கொரோனாவால் உயிரிழந்திருப்பது, ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது என உறுதியாகக் கூறமுடியும். அதன் தொடர்ச்சியாக, தலைநகர் சென்னையிலும் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களிலும் அரசாங்கம் மீண்டும் பொது முடக்கத்தைக் கடுமையாக்கியது. உலக அளவில் இத்தகைய பொதுமுடக்கம் மட்டும் கொரோனாவைத் தடுக்குமா என்பதில் மாற்றுக்கருத்துகள் உண்டு என்பது ஒரு புறம்.

95 நாள்களுக்கு முன்னர் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சொன்ன முத்திரை வாசகம், இன்றைக்கும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. ‘சோதனை, சோதனை, சோதனை...’ - இதுதான் டாக்டர் டெட்ரோஸ் சொன்னது.

இந்திய மைய அரசுகூட சோதனைகளைப் பற்றி அதிகமாகப் பேசிக்கொள்வது இல்லை. தமிழ்நாடு அரசுத் தரப்பிலோ, இந்தியாவிலேயே இங்குதான் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். அதில் குளறுபடிகள் தொடர்ச்சியாக இருந்தாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது முன்னேற்றம்தான்; ஆனால், அதன் விளைவுகள் என்ன எனப் பார்ப்பதுதான் இந்த அளவு செய்யப்படும் சோதனைகளின் பயனாக இருக்கமுடியும்.

கொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை

முதலமைச்சரோ சுகாதார அமைச்சரோ அதிகாரிகளோ பெருமிதப்பட்டுக்கொள்ளும் சோதனை விவரங்களின் சாரம் என்ன? ”கேரளத்தைவிட டெல்லியைவிட மகாராஷ்டிரத்தைவிட குஜராத்தைவிட தமிழ்நாட்டில் சோதனைக்கூடங்கள், சோதனைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது; உலகளாவிய அளவுகோல்படி, இலட்சம் பேரில் இத்தனை பேருக்கு சோதனை செய்திருக்கிறோம் என்கிற எண்ணிக்கையிலும் இங்கு கூடுதலே.” என்பதுதான் அரசாங்கத்தின் வாதம். இந்த இரண்டு நிலைமைகளும் ஒரே சீராக இருப்பதில்லை; அவ்வப்போது மாறக்கூடும் என்பதை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அதிகாரபூர்வ ஆவணங்கள் மூலம் நிரூபிக்கமுடியும். அது தனி!

சோதனைகளின் எண்ணிக்கையைத் தாண்டி, யாருக்கு, எந்த கட்டத்தில், என்னவகை சோதனை செய்யப்படுகிறது என்பதே முக்கியம் என்கிறார்கள், மருத்துவ வல்லுநர்கள். இப்போது யாருக்கெல்லாம் சோதனை செய்யப்படுகிறது? கோவிட் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டால் அந்தத் தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு பெரும்பாலும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இப்படித்தான் வழிகாட்டியுள்ளன. சரி!

எந்தக் கட்டத்தில் இந்த சோதனை பொருத்தமானது, பயனுள்ளது என உ.சு.அமைப்பு சொல்கிறது? குறிப்பிட்ட தனி நபர்கள் மூலம் தொற்று பரவுகின்ற கட்டத்தில், இது சாத்தியம் என்கிறது. இப்போது இங்கு என்ன கட்டம்? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வதைப்போல, ஆண்டவனுக்குத்தான் தெரியும் எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடக்கூடிய காரியம் அல்ல, இது. எந்தக் கட்டம் என்பதைப் பொறுத்து சோதனைகளின் முறைமையை, அளவை மாற்றியமைக்க வேண்டிய தேவை உருவாகும்.

சோதனையின் வகையைப் பொறுத்தவரை, ஆர்டிபிசிஆர் எனப்படும் சோதனைதான் இந்திய அளவில் இப்போதைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்தில் வினைக்குள்ளாக்குவதன் மூலம் ஒருவருக்கு தொற்று உண்டா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் சோதனை இது. மாதிரியை எடுத்து சோதனை முடிவு வருவதற்கு ஏறத்தாழ ஒரு நாள் ஆகிவிடுகிறது.

கொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை

இதைத் தவிர, வேறு பல நாடுகளில் செய்யப்படும் ஆண்டிபாடி சோதனையைச் செய்வதற்கு ஒப்புதல் அளித்த மருத்துவ ஆய்வுக் கழகம், அதற்கான கருவிகளையும் இறக்குமதி செய்ய வைத்தது. ஆனால் அதில் குறைபாடு இருப்பதாகவும் ஊழல் புகாரும் எழுந்ததால் தென்கொரியாவிலிருந்து வந்த கருவிகளை, தமிழ்நாடு உள்பட்ட மாநிலங்கள் திருப்பியனுப்பிவிட்டன. அவை என்ன ஆகின என்பது ஒரு புறம் இருக்க, மீண்டும் வேறு வகை சோதனைக்கு மருத்துவ ஆய்வுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. சர்ச்சைக்கு உள்ளான முன்னைய முறை என்பது, ஆன்டிபாடி சோதனை; இது ஆன்டிஜென் சோதனை. இந்த சோதனைக்கான கருவிகளும் தென்கொரியா நிறுவனம் ஒன்றிலிருந்துதான் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த வெள்ளி முதல் இந்தக் கருவிகளைக் கொண்டு டெல்லியில் கூடுதலாக சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதைப்போல, கோவா மாநிலத்தில் தயாரிக்கப்படும் ட்ரூநேட் எனப்படும் கருவியையும் கொரோனா சோதனை செய்யப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு பல அடிப்படை வசதிகள் இருப்பது கட்டாயம் எனும் நிலையில், இந்த சோதனை அதைவிட எளிதாக இருப்பது வரவேற்புக்குரியதாக இருக்கிறது. குறிப்பாக, தொலைதூர கிராமங்களுக்குகூட ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பதும் 10 மணி நேரம்வரை தாக்குப்பிடிக்கும் பேட்டரி வசதியும் இதன் சாதக அம்சங்கள். காசநோய்க் கண்டறிதலில் பயன்படுத்தப்பட்ட இந்தக் கருவியின் மூலம் ஆந்திர மாநிலத்தில் மட்டும் இதுவரை 2.5 இலட்சத்துக்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பீகார், உ.பி., ஒதிசா ஆகிய மாநிலங்கள் இவற்றை கொள்முதல் செய்துள்ளன.

வெவ்வேறு வகையான சோதனை முறைகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என மரு. ஆய்வுக் கழகம் கூறிய பின்னரே, இத்தகைய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. (எந்த சோதனையாக இருந்தாலும் அதன் ஒப்புதலைப் பெறுவது நிர்வாகக் கட்டாயம்) இந்த பின்னணியில் தமிழ்நாட்டில் சோதனை முறைமையை நிலைமைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும். முறைகேடு இல்லாமல் மோசடி செய்யாமல் நல்ல கருவியைக் கொள்முதல் செய்வது அரசின் முன்னுள்ள அவசரக் கடமை.

மேலும், யாருக்கு சோதனை எனப் பார்த்தால், உயிரிழக்கும் நபர்களின் விவரமே அதற்கான பதிலாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு தொடக்கம் முதல் வலியுறுத்திவரும் இன்னுமொரு முக்கியமான வழிகாட்டல், எளிதில் நோய் தொற்றக்கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். அதன்படி, எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், கர்ப்பினிகள், சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வேறு நாள்பட்ட உடல்நலக் கோளாறு உடையவர்கள், இதய, நெஞ்சக, கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், உடலுறுப்பு மாற்று அறுவை செய்துகொண்டவர்கள், வயதானவர்கள் ஆகியோர் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு சத்துணவு மையங்கள், கிராமப்புற, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசி நகர்நல மையங்கள், மாவட்டநிலை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், உடலுறுப்புதான அங்கீகார அமைப்பு, சமூக நலத் துறை, சுகாதாரத் துறையின் பல அமைப்புகள் ஆகியவற்றில் ஆவணங்களில் இந்த விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளிலும் சில விவரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

தொற்றின் தொடக்க காலத்திலேயே இப்படி திட்டமிட்டு செய்யவேண்டும் என தொற்றுநோயியலாளர்களும் கிருமியியலாளர்களும் அறிவுறுத்திவருகின்றனர் என்றாலும், இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. எளிதில் பாதிக்கப்படக்கூடிய/ பாதிக்கப்பட்டு மரணம்வரை போகிற பிரிவினரிடம் பகுதிவாரியாக சோதனையை மேற்கொள்ள முடியும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் உறுதிபடச் சொல்கிறார்கள்.

நோய்க்கிருமிக்கு எதிராக மனித உடலில் உண்டாக்கப்படும் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்புசக்திப் பொருளைக் கண்டறியும் சோதனையானது, பிசிஆர் சோதனையைவிட செலவு குறைவானதும் எளிமையானதும் ஆகும். முதல் கட்டமாக இதில் தொற்று உறுதியானவர்களுக்கு ஆர்டிபிசிஆர் முறையில் அடுத்ததாக உறுதிப்படுத்தும் சோதனையும் செய்யவேண்டும். ஆனால் இதில் கூடுதலான சாதகம், முன்னரே ஒருவருக்கு கொரோனா தொற்று வந்துவிட்டுப் போயிருந்தாலும் அதையும் இதன் மூலம் கண்டறிய முடியும். அதாவது அறிகுறி இல்லாமல் இருப்பவருக்குத் தெரியாமலே நோய்த்தொற்று வந்துபோயிருந்தால் அதையும் இந்தக் கருவி காட்டிவிடும். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் நடத்தப்படும் சோதனையில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தொற்று வந்துவிட்டுப் போய்விட்டது என்றால், அந்தப் பகுதியில் பொதுமுடக்கம் போன்றவற்றை அதற்கேற்ப தீர்மானிக்கமுடியும். தேவையில்லாத இடங்களில் முடக்கத்தை முழுவதும் விலக்கவும் முடியும் என்பதே!

இது, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பல நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டுவரும் நடைமுறைதான். எனவே, சோதனையை சோதனையாக மேற்கொண்டு மக்களின் மாதக்கணக்கான வேதனையைத் தீர்ப்பதும் தீர்க்காமல் இருப்பதும் அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories