உணர்வோசை

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

ஈரான் நாட்டின் தளபதியை படுகொலை செய்துள்ள அமெரிக்கா அந்நாட்டின் கலாச்சார சின்னங்கள் மீது குறிவைத்து உலகப்போருக்கு அச்சாரமிட்டுள்ள விவகாரம் உலக அமைதியை குலைத்து வருகிறது.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனிக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்கவராக வலம் வந்தவர், குவாசெம் சுலைமானி. 62 வயதான சுலைமானி, Quds Force என்றழைக்கப்படும் ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவர்.

ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ம் தேதி ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குவாசெம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈராக்கில் இயங்கி வரும் ஹசீத் பயங்கரவாத குழுவின் முக்கிய தளபதியான அபு மகாதி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர்

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நிச்சயமாக பழிவாங்கப்படுவார்கள் என இரான் அதிபர் அயதுல்லா கோமேனி எச்சரித்தார். இந்த நடவடிக்கை "மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது" என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறினார்.

1980- ஆம் ஆண்டுகளில் ஈரான், ஈராக் போரில் களம் கண்ட குவாசெம் சுலைமானி, சதாம் உசேனுக்கு எதிராக ஷியா மற்றும் குர்து படைகளை திரட்டி கடுமையான போர் பயிற்சியை அளித்தவர்.

அவரின் அதிரடி நடவடிக்கைகள், ஈரான் அரசை மிகவும் கவர்ந்தது. ஷியா மக்களால் சுலைமானி கடவுளாகவே பார்க்கப்பட்டார். ஆனால் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பவர் என்றும் அவரை அமெரிக்கா குற்றம்சாட்டியது.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

இந்நிலையில், சுலைமானி கடந்த 1998- ஆம் ஆண்டு புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரான் நாட்டு அதிகாரபூர்வ ராணுவத்திற்கு இணையாக தொடங்கப்பட்ட, இந்த புரட்சிகர ராணுவ படையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இதற்கு தனியாக தரைப்படை, விமான மற்றும் கடற்படை உள்ளது.

அமெரிக்காவின் வற்புறுத்தல்களை தொடர்ந்து, 2007 - ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் அமைப்பு பட்டியலில் சுலைமானியின் அமைப்பை சேர்த்தது ஐக்கிய நாடுகள் சபை.

ஆனால், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, ஈராக் ராணுவத்துடன் இணைந்து போர் புரிந்தார் சுலைமானி. இந்த நிலையில்தான் அமெரிக்கா ராணுவம் அவரை பாக்தாத் விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்துள்ளது.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

சுலைமானியின் இறுதி ஊர்வலமும் , இறுதிச் சடங்கும் ஈரானில் நடைபெற்றது. அதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சுலைமானியின் இறுதிச் சடங்கில் அந்நாட்டின் தலைவர் அலி காமெனெனி கதறி அழுதார்.

சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வு அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலில் வெளியானது. அந்த நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் வழங்கப்படும். ஈரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், அதனைக் கணக்கில் கொண்டு 80 மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவை ஈரான் மிரட்டினால், "ஈரானிய கலாச்சாரத்திற்கு" முக்கியமான 52 கலாச்சார தளங்கள் அமெரிக்க இலக்குகளின் பட்டியலில் உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு அமெரிக்காவில் உள்ள பிரதான எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

"நீங்கள் போர்க்குற்றங்களைச் செய்வதாக அச்சுறுத்துகிறீர்கள்" என்று ஜனநாயகக் கட்சியினரில் ஒருவரான செனட்டர் எலிசபெத் வாரன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக் தேர்தலில் டிரம்புக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்துபவராக கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் ஈரானுடன் போரிடவில்லை. அமெரிக்க மக்கள் ஈரானுடனான போரை விரும்பவில்லை." என்கிற வாசகங்களும் அதிபர் டிரம்பிற்கு எதிராக இணையத்தில் வலம் வருகின்றன.

"பொதுமக்கள் மற்றும் கலாச்சார தளங்களை குறிவைப்பது பயங்கரவாதிகள் செய்யும் செயல். இது ஒரு போர்க்குற்றம்" என்று மற்றொரு செனட்டர் கிறிஸ் மர்பி கூறியுள்ளார்.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

இதனிடையே ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்க அதிருபருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். "எங்கள் கலாச்சார பாரம்பரியத்தை குறிவைப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் போர்க்குற்றங்களைப் பின்பற்றத் துடிப்பவர்களுக்கு ஒரு நினைவூட்டல்: வரலாற்றின் பத்தாயிரமாவது ஆண்டில், காட்டுமிராண்டிகள் வந்து எங்கள் நகரங்களை அழித்தனர், எங்கள் நினைவுச்சின்னங்களை இடித்தனர், எங்கள் நூலகங்களை எரித்தனர். அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம், உயரமாக நிற்கிறோம்." என்று பதிலடி தந்துள்ளார்.

"ஈரானிய கலாச்சார தளங்களை அழிக்க டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 2347 இன் கீழ் ஒரு போர்க்குற்றமாக இருக்கும் என்று உலக அமைதி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபரின், கலாச்சாரத் தளங்கள் மீதான தாக்குதல் குறித்த ட்விட்டர் பதிவை, தலிபான்கள் 2001 ல் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை அழித்த நிகழ்வு ஒப்பிட்டு உலகெங்கிலும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏற்பட்ட மோதலில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக்கைதிகளை நினைவுப்படுத்துவதற்காகவே, ஈரானின் 52 கலாச்சார தளங்களை குறிவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!
www.mehrnews.com

இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈராக் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், “பல பில்லியன் டாலர் மதிப்பிலான விலை உயர்ந்த விமான தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை ஈராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்க படைகள் அந்த நாட்டிலிருந்து வெளியேறாது. எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் நாங்கள் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திராத வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம்” என்றார்.

இதுஇப்படி இருக்க, சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களில் இருந்து விலகிக் கொள்வதாக ஈரான் கூறியிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுலைமானியின் படுகொலைக்கு அமெரிக்க விலை கொடுத்தாக வேண்டும் என்றும், இனிவரும் கருப்பு தினங்களை அமெரிக்கா சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட சுலைமானியின் மகள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் இடையேயான போர், உலகப்போராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக உலகளாவிய அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, இரு நாடுகளும் எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது என்று எச்சரித்துள்ளது.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

அமெரிக்க-ஈரான் போர் உக்கிரம் அடைந்து வரும் வேளையில் உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வேகவேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 6 நாட்களாக எரிபொருளின் விலை உச்சத்தை தொட்டவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், போர் பதட்டம் எதிரொலியாக உலக நாடுகளில் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்து 40,676 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்கு சந்தையில் 233 புள்ளிகள் குறைந்தது.

சென்செக்சை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தது. வங்கிகளின் பங்குகளும் சரிவை சந்தித்தன. இது பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்குகளின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை ரூ.157 லட்சம் கோடியாக இருந்தது. நேற்று அது ரூ.154 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று ஒரே நாளில் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய இழப்பாகும் என்று முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

முதல் உலகப்போர் தொடங்கி இன்றுவரை ஈரான் எந்தநாட்டின் மீதும் தாமாக முன்வந்து தாக்குதல் நடத்தியது இல்லை. அமெரிக்கா 50க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று சமாதான கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

போரின்போக்கு உச்சநிலையை அடைந்தால், அரபுநாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈரானை ஆதரிக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அமெரிக்காவிலேயெ அதிபர் டிரம்ப் செயல்பாடுகளுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல்கள் விடுக்க வேண்டாம் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரித்துள்ளார்.

‘52 என்ற எண்ணை குறிப்பிடுபவர்களுக்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும். ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்க வேண்டாம். #ஐஆர் 655’ என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’52’ என மிரட்டும் அமெரிக்கா, ’290’ என எச்சரிக்கும் ஈரான்: உலகை அச்சுறுத்தும் போர் சூழல்!

கடந்த 1988ம் ஆண்டு ஜூலை மாதம் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் (ஈரான் ஏர் 655) அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர்.

இதை குறித்தே தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

உலக அமைதியை குலைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் செயல் தீவிரமானால் அது உலக அளவில் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பது உறுதி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

banner

Related Stories

Related Stories