உணர்வோசை

“கூண்டிலிடப்பட்ட குருவி” இயற்கையின் காதலன் அறிஞர் அண்ணாவின் சிறைக் குறிப்பு!

அறிஞர் அண்ணா மானுட சமுதாயத்தின் மீதும், தமிழினத்தின் விடியலுக்காகவும்பாடுபட்டவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அவர் இயற்கையின் காதலர், பறவைகளின் தோழர் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?!

“கூண்டிலிடப்பட்ட குருவி” இயற்கையின் காதலன் அறிஞர் அண்ணாவின் சிறைக் குறிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

அறிஞர் அண்ணா தன்னுடைய பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் இயற்கையை எடுத்துக்காட்டாக கொள்வார்.

“இயற்கை படைப்புகளிலே சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும். சில கனிந்த பிறகே பயன்தரும். சிலவற்றை உதிர்த்தெடுக்க வேண்டும். சிலவற்றை பறித்தெடுக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும் போதுதான் இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள. கற்றோம் இல்லை என்ற தெளிவு பிறக்கும்”

இவ்வாறு இயற்கை பற்றிய புரிதலை விளக்குவதில் வல்லவர் அண்ணா. அதேசமயம் விலங்குகள், பறவைகள் மீது அன்புபாராட்டும் கருணை மனதிற்கும் சொந்தக்காரர் அண்ணா. அவர் ஒரு மயில் ஒன்றை வளர்த்தார். ஆம்.. பாசத்துடன் வளர்த்தார்.

அண்ணா வரைந்த இயற்கை ஓவியம்
அண்ணா வரைந்த இயற்கை ஓவியம்

இதைப்போன்று சிட்டுக்குருவிகளும் அவர் கண்ட தோழைமையை அவரே எழுதியிருக்கிறார்.

அண்ணா தனது சிறைச்சாலை குறிப்புகளில்….

இன்று எனக்கு ஒரு புதிய நட்பு கிடைத்தது - எதிர்பாராத முறையில். நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் இங்கு உள்ளன என்பதுபற்றி முன்பு குறிப்பிட்டேன். அந்தக் குருவிகளில் ஒன்றை, பக்குவமாகப் பறந்து தப்பித்துக்கொள்ள முடியாததை, ஒரு காக்கை கொத்திவிட்டது. –

இங்குள்ளவர்கள் காக்கையை விரட்டி குருவியைக் காப்பாற்றினார்கள் - என்னிடம் வந்து சேர்ந்தது. எனக்குத்தான், பறவைகள் வளர்ப்பதிலே மிகுந்த விருப்பமாயிற்றே, குருவி கிடைத்ததாலே மிகுந்த மகிழ்ச்சி. அதை எப்படி வளர்ப்பது என்பதுபற்றி நெடுநேரம் பேசி, நாளையத் தினம் ஒரு கூண்டு செய்வது என்று முடிவு செய்து, இன்றிரவு மட்டும் ஒரு பெரிய கூடையில் குருவியைப் போட்டு வைக்கலாம் என்று திட்டமிட்டோம்.

பகலெல்லாம் குருவியைப் பார்ப்பதிலேயும், அதற்குத் தீனி தருவதிலேயும் தனியான மகிழ்ச்சி பெற்றேன். மாலை, அறை பூட்டப்படுகிறபோது பெரிய ஏமாற்றம் என்னைத் தாக்கிற்று, குருவி எப்படியோ எங்கேயோ பறந்துபோய்விட்டது. தேடிப் பார்த்துப் பலன் காணவில்லை. அந்தக் கவலையுடன் இன்றிரவைக் கழிக்கவேண்டியதாகிவிட்டது.

இன்று பிற்பகல், மதியை பெரிய மருத்துவமனைக்கு நாளையத்தினம் அனுப்பப்போவதாக, டாக்டர் கூறிவிட்டு சென்றார்; என் கை வலிக்கும் ஊசி போட்டார்.

குருவி காணாமற் போய்விட்டதுபற்றி நான் மிகுந்த கவலையாக இருப்பது தெரிந்த நண்பர்கள், இன்று விடிந்ததும், குருவியைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குருவி, தப்பிச் சென்றதே தவிர, நீண்டதூரம் பறந்துபோக முடியாததால், காக்கைக்குப் பயந்துகொண்டு, என் அறைக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் மாமரத்தில் பதுங்கிக்கொண்டிருக்கிறது.

விடுவார்களா! பிடித்துக்கொண்டு வந்து கொடுத்தார்கள் - மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதை மீண்டும் ஒரு முறை இழந்துவிடலாமா? ஆகவே உடனே, கூண்டு தயாரிக்கும் வேலையைத் தொடங்கினோம். தோழர்கள் கே. டி. எஸ். மணியும், ஏகாம்பரமும், இரண்டு அட்டைகளை, மூங்கில் குச்சிகள், தென்னை ஈக்குகளைக் கம்பிகளாக்கி, கூண்டாக மாற்றிவிட்டார்கள்.

உள்ளே குருவி உட்கார, ஊஞ்சல்போன்ற அமைப்பு - தீனிக்கு ஒரு சிறு குவளை - பல்பொடி டப்பா - மற்றோர் குவளை தண்ணீருக்கு! இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்துக் கொடுத்தார்கள் - குருவி கூண்டிலே, முதலில் கவலையுடன் இருந்தது - ஆனால் மெல்ல மெல்ல இரை தின்னத் தொடங்கிற்று.

அதை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே, நீண்ட நேரம் ஈடுபட்டிருந்தேன் என்ன இருந்தாலும் தன்னிச்சையாக பறந்து திரிந்து மகிழ்ந்து கொண்டிருந்த குருவியைப் பிடித்துக் கூண்டிலிட்டு இம்சிக்கலாமா; பாபம் அல்லவா என்று கேட்கத் தோன்றும் பலருக்கும். இந்தக் குருவி, இப்போதுள்ள நிலையில் வெளியே விட்டால், காக்கையால் கொத்தப்பட்டுச் சின்னாபின்னமாகி விடும். ஆகவே இப்போது அதைக் கூண்டிலே போட்டிருப்பது, அந்தக் குருவிக்கே நல்லதுதான்.

இவ்வாறு அவர் தனது சிறைச்சாலை அனுபவத்தில் குருவி வளர்த்த அனுபவத்தையும் எழுதியுள்ளது பறவைகள் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories