
முரசொலி தலையங்கம் (03-11-2026)
அரசு வேலையே இனி அவ்வளவு தானா?
ஏதாவது ஒரு மோசடித்தனம் செய்வது, அதை மறைக்க ஏதாவது ஒரு பசப்புச் செய்தியை வெளியிடுவது இதுதான் விஜய் அரசின் பாணியாகும்!
அரசு துறைகளில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப் போகிறது விஜய் அரசு. அதை மறைக்க, ‘அரசுப் பணிக்கான வயது வரம்பு மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு' என்ற வாய்ஜாலம் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
போட்டித் தேர்வாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம் விஜய். அதனால் குரூப் 1,2,4 ஆகிய தேர்வுகளில் பங்கெடுப்பவர்களின் வயது வரம்பை அதிகரித்துள்ளாராம். அரசுப் பணிக்கே ஆள் எடுக்கப் போவது இல்லை. பிறகு ஏன் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்? 32 வயது வரை மட்டும் காத்திருக்காதே, 37 வயது வரை காத்திருந்து ஏமாந்து போ என்கிறாரா விஜய்?
அரசுத் துறைகளில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்ற செய்திக்கு பின்னால், வயது வரம்பு உயர்வு என்ற செய்தியும் வருகிறது என்றால் இதை விட பித்தலாட்டம் இருக்க முடியுமா?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதேபோன்ற பிற துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் வழங்குவதற்கானநிறுவனமாக தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவளக் கார்ப்பரேஷனைநியமித்து ஆளுநர் ஆணையிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைநிலைப் பணியாளர்கள், நகல் எந்திரத்தை இயக்குபவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஓட்டுநர், உதவியாளர், அலுவலக கண்காணிப்பாளர், அலுவலக மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்படும் வழக்கம் கைவிடப்பட்டு, அந்தப் பணிகளுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமிக்கப்பட இருப்பது இதன்மூலம் தெரிகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க த.வெ.க. அரசு முடிவெடுத்து இருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தின், மாணவர் சமுதாயத்தின் தலையில் பாறாங்கல்லைப் போடுவது ஆகும்.
அரசு வேலைக்காக கனவுகளோடு படித்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களை, தேர்வு எழுதி வரும் இளையசமுதாயத்தை, அவர்களது வாழ்க்கையைச் சிதைக்கும் செயலைத் தான் முதலமைச்சர் விஜய் செய்துள்ளார்.
நிரந்தரப் பணி அல்லாமல், ஒப்பந்த முறையில் பணிகளை வழங்கு வதால் அரசுப் பணி என்ற மரியாதையும் போய்விடும். ஊழியர்களின் பணி உரிமையும் பறிபோய்விடும். பணிப்பாதுகாப்பு போய்விடும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதி அளவுகோல் முற்றிலுமாக பாதிக்கப்படும்.
காலம் காலமாக நாம் வளர்த்தெடுத்து வரும் தேர்வு வாரியங்கள் காலப் போக்கில் செயல் இழந்துவிடும்.
அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், நிரந்தரமாக்கப்படுவர் என வாக்குறுதி கொடுத்தாரே விஜய். அது என்ன ஆனது?
5 வருட பணி அனுபவம் பெற்றவர்கள், நிரந்தரமாக்கப்படுவர் என தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றினாரா விஜய்? அது தொடர்பாக ஏதாவது அறிவிப்பு இதுவரை வெளியானதா? இல்லை. இது எதையும் செய்யாமல் வயது வரம்பை மட்டுமே உயர்த்துவதால் என்ன பயன்?

புதிதாக எத்தனை பேருக்கு அரசு வேலை தரப்போகிறோம் என்று சொன்னால் விஜய் அரசைப் பாராட்டலாம். அப்படி அவர் ஏதாவது சொன்னாரா என்றால் இல்லை.
இதைத் தான் அரசு ஊழியர் அமைப்புகளும் மிகச் சரியாகச் சொல்லிஇருக்கின்றன. ஜாக்டோ ஜியோ மிகக்கடுமையாக இதனை எதிர்த்துள்ளது. அடிப்படைப் பணியாளர்களை முற்றிலுமாக ஒழிக்கும் செயல் என்று சொல்லி இருக்கிறது இந்த அமைப்பு.
‘“வயது வரம்பை உயர்த்துவதால் பெரிய அளவில் மாற்றம் வந்து விடாது. அரசு துறைகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கின்றன. ஆனால் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 5-10 ஆயிரங்கள் என்ற அள- வில் தான் காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகப்படியான இடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் த.அமிர்தகுமார் கூறி இருக்கிறார். “ அரசு துறைகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் போது அவற்றை நிரப்பாமல் வெறுமனே வயது வரம்பை அதிகரிப்பதால் என்ன பயன்? குரூப் சி, குரூப் டி பணி இடங்களை அவுட் சோர்சிங் மூலம் நியமிக்க அரசு முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம்?” என்று கேட்டுள்ளார் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன்.
‘வயது வரம்பு உயர்வால் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்' என்கிறது அரசாங்கத்தின் அறிக்கை. அதிகப்படியான வேலைக்கு பணியாளர்களை எடுத்தால் தான் போட்டித் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பணியாளர்களை எடுக்காமல், வயது வரம்பை உயர்த்துவதால் எந்த லாபமும் இல்லை.
அவுட்சோர்சிங் மூலமாக அரசுப் பணிக்கு ஆட்களை எடுப்பது அரசு வேலை என்ற கனவையே சிதைக்கும் முயற்சியாகத்தான் முடியும்.






