
முரசொலி தலையங்கம் (21-10-2026)
அறிவுலகம் உருவாக்கிய தி.மு.க!
திராவிட மாடல் ஆட்சியில் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களால் கோவையில் உருவாக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தை த.வெ.க. அரசு திறந்து வைத்துள்ளது. திறந்து வைப்பதன் மூலமாகக் கிடைக்கும் பெருமையை இந்த அரசு அடைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அது அறிவியக்கம். அதனால்தான் தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு‘அறிவகம்'என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தலைமைக் கழக அலுவலகத்துக்கு அண்ணா அறிவாலயம்' என்று பெயர் சூட்டினார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை'சென்னையில் உருவாக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.
தலைவர் கலைஞரின் வழித்தடத்தில் இரண்டாம் கலைஞராகவே செயல்பட்ட திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைக் கட்டி எழுப்பினார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ. 120.75 கோடியில் திட்டமிடப்பட்டு, ரூ.215 கோடி மதிப்பீட்டில், சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளது. 3.56 ஏக்கர் நிலப்பரப்பில், 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 தளங்- களுடன் (மொத்தம் 7 தளங்கள்) இந்த பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும்நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், தமிழ் நூல்கள்பிரிவு, ஆங்கில நூல்கள், போட்டித் தேர்வர்களுக்கான நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம்,மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் என ஆறு தளங்கள் உள்ளன மதுரையில். ‘பார்த்து பார்த்துக் கட்டினோம்' என்பார்களே அது போல சிந்தித்து சிந்தித்து உருவாக்கப்பட்டது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

அத்தோடு நிற்கவில்லை அறிவுப்பணி. இதே போல் கோவையிலும் ஒரு நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். கோவையிலும் கலைஞர் பெயரால் அமைய வேண்டும்என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ‘மதுரையில் தலைவர் கலைஞர் பெயரால் அமைந்துவிட்டது, சென்னையில் பேரறிஞர் அண்ணா பெயரில் அமைக்கப்பட்டு விட்டது, கோவையில் அமைவது தந்தை பெரியார் பெயரில் அமையும்' என்றும் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்.
‘அறிவை விரிவு செய்’, ‘அறிவை மட்டுமே நம்பு' ‘அதுவும் உனது அறிவை மட்டுமே நம்பு' என்று சொன்ன தந்தை பெரியார் பெயரை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்தது தனிச் சிறப்பு ஆகும். தந்தை பெரியார் சிந்தனைகளை உலகம் முழுக்க பரப்பும் பெரும் பணியையும் திராவிட மாடல் ஆட்சியானது செய்தது.
திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் பெயரிலும் நெல்லையில் அமையும்நூலகம் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் பெயராலும் அமையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இது அவரது கட்சி சார்பற்ற பரந்த உள்ளத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
கோவையில் உருவாகி உள்ள அறிவுலகம் 300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 6.78 ஏக்கர் பரப்பளவில் இதன் ஒட்டுமொத்த வளாகமும் அமைந்துள்ளது. 1.98 லட்சம் சதுர அடியில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்- துடன் சேர்த்து 7 அடுக்குகளைக் கொண்டது இது. ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்டதாக இக்கருவூலம் அமைக்கப்பட்டுள்ளது. கருத்தரங்குகள் நடத்த அரங்கமும் இருக்கிறது. கோவை மட்டுமல்ல மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் அறிவுப் புதையலாக இருக்கப் போகிறது.
திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக் காலம் என்பது அறிவுலகம் உருவாக்கும் காலமாகவே அமைந்திருந்தது. மாணவ, மாணவியர், இளைஞர்கள் அனைவரையும் அனைத்துக்கும் தகுதிப்படுத்தும் ‘நான் முதல்வன்' திட்டம். அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு வரும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம். உயர் படிப்பை வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க அண்ணல் அம்பேத்கர் பெயரில் திட்டம் . இப்படி அறிவை விரிவு செய்யும் திட்டங்களைத் தொடங்கினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தின் கீழ் உலகத் தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சான்றிதழுடன் கட்டணமின்றி பல்வேறு துறைகளிலும் குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 வயது முதல் 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திறன் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயிற்சியளிக்க தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் பயிற்சித் தொகையினை அரசே முழுவதுமாக ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.
இவை எல்லாம் இளைய சமுதாயத்தின் மேல் திராவிட முன்னேற்றக் கழக அரசு வைத்திருந்த பெருமதிப்பின் வெளிப்பாடு ஆகும்.
இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை, இது போன்ற அறிவுப்பணிகளுக்கு தடை போடாமல் ஆட்சி செய்யுங்கள் என்பதுதான்.
‘கோவையில் கட்டினார்கள் என்றால் அவர்கள் சொந்தப் பணத்திலா கட்டினார்கள்?’ என்ற அறிவற்ற கேள்வியை ஒரு அமைச்சர் கேட்டுள்ளார். யாரும், எந்தக் கட்சியும் தங்கள் சொந்தப் பணத்தில் கட்டுவதற்கு பெயர் அரசாங்கம் அல்ல. அரசாங்கத்தின் பெயரால் கட்டுவதற்கு பெயர்தான் அரசாங்கம்.
அரசாங்கப் பணத்தில் குழந்தைக்கு மோதிரம் போட்டு விட்டு தாய்மாமன் தங்க மோதிரம் என்றும், அரசாங்கம் சார்பில் சீர் அனுப்பி விட்டு அண்ணன் சீர் என்றும் பேர் வைத்துக் கொள்ளும் மூடர் கூட்டத்துக்கு யார் வகுப்பு எடுப்பது? வாக்களித்த மக்கள்தான் வகுப்பெடுக்க வேண்டும்!






