முரசொலி தலையங்கம்

‘நேபாள வெள்ளப் பேரழிவு.. உலகையே உலுக்கிய சோக நிகழ்வு.. இயற்கையின் எச்சரிக்கை’ - முரசொலி தலையங்கம்!

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் என்பது இமயமலைப் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளதாக முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

‘நேபாள வெள்ளப் பேரழிவு.. உலகையே உலுக்கிய சோக நிகழ்வு.. இயற்கையின் எச்சரிக்கை’ - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

நேபாளப் பேரழிவு!

முரசொலி தலையங்கம் (செப்டம்பர் 01)

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ளது. 320 வெளிநாட்டினர் உள்பட 2,502 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உலகையே உலுக்கிய சோகமாக இது அமைந்துள்ளது.

திபெத் எல்லையையொட்டிய நேபாளப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் அடித்துச் செல்லப் பட்டன. 8 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் காணாமல் போனார்கள்.

சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங் டாங் லிங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தன. 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதன் காரணமாக ஏரி உடைந்து திபெத் பகுதியின் போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற பெருவெள்ளம், பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம் என்றழைக்கப்படுகிறது.

திபெத்தின் போய்கு நதி நேபாளத்தில் போடே கோசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திபெத்தில் இருந்து சீறிப் பாய்ந்த வெள்ளம் நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் நேபாளத்தின் பல மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின. இரு மாவட்டங்களில் உள்ள 13 நீர் மின் நிலையங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நேபாள நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்ததால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் சிக்கிய 275 இந்தியர்கள் மற்றும் 128 இந்திய வம்சாவளியினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், 108 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திபெத்தில் 49 இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் மாயமாகி உள்ளனர்.

சிதாவன் மாவட்டத்தில் 264 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. சித்வானில் மருத்துவமனைகளில் போதிய இடவசதி மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாததால், உடல்களைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதுடன், அவை தொடர்ந்து அழுகி வந்ததால் தொற்று அபாயம் அதிகரித்து வருகிறது.

உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு DNA மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்துவமான அடையாள எண் மற்றும் சடலம் மீட்கப்பட்ட இடம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. உடல்கள் பின்னர் எளிதாகத் தோண்டி எடுக்கப்படும் வகையில் 1.5 மீட்டர் ஆழத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு உடலுக்கும் இடையே 40 செ.மீ. இடைவெளியும் விடப்படுகிறது.

‘நேபாள வெள்ளப் பேரழிவு.. உலகையே உலுக்கிய சோக நிகழ்வு.. இயற்கையின் எச்சரிக்கை’ - முரசொலி தலையங்கம்!

பேரிடர் நிகழ்ந்த போடே கோஷி ஆற்றில் மேலும் ஒரு ஏரி உருவாகி இருப்பதும், அது எந்த நேரத்திலும் உடைந்து மேலும் ஒரு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. போடேகோஷி ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்தது. எனவே பதற்றம் தொடர்கிறது.

தேசியப் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRA) வெளியிட்ட தகவலின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 933 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அரசின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “இமயமலைப் பகுதியில் 4.4 ரிக்டர் அலகில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பனிமலைகள் உடைந்து நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் தீவிர ஆய்வில் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனிமலை உடைந்தே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சியாளர் விஷால் நாத் கூறும்போது, "இமயமலைச் சிகரத்தில் சுமார் அரை கி.மீ. தொலைவு அகலம் கொண்ட பனிமலை உடைந்து சுமார் 20 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் சுனாமி அலையாக சீறிப் பாய்ந்திருக்கிறது.

பல அடி உயரத்துக்கு போடே கோசி, திரிசூலி நதிகளில் அலைகள் எழுந்துள்ளன. இது இமய மலையில் உருவான சுனாமி ஆகும். பருவநிலை மாறுபாட்டால் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நேரிடுகின்றன” என்று தெரிவித்தார்.

நேபாள் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால், "சீனா, நேபாளம், இந்தியாமற்றும் பூடான் ஆகிய நாடுகள் சூழலியல் ரீதியாக

இணைக்கப்பட்டுள்ளன. இமயமலைச் சூழலியலைப் பாதுகாப்பதில்தான் நமது கூட்டு வாழ்வும் எதிர்காலமும் இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக பாதிக்கப்படும் பிராந்தியம் இமயமலைப் பகுதி என்பதால், நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

நில நடுக்கம் காரணமா, பனிப்பாறை வெடிப்பு காரணமா என்ற முடிவுக்கு இன்னும் உலக நாடுகள் வரவில்லை. எதுவாக இருப்பினும் இந்தப் பேரழிவுஉலகத்தையே உன்னிப்பாக கவனிக்கச் சொல்கிறது. குறிப்பாக இமயமலைப் பகுதி பாதுகாப்பு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆறு மாநிலங்களை உள்ளடக்கியது இமயமலைப் பகுதி. இந்தியாவின் காலநிலையை தீர்மானிப்பதில் இமயமலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆறுகள் உற்பத்தி யாகும் பகுதியாகவும் இது அமைந்துள்ளது. எனவே இமயமலைப் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நேபாள பேரழிவு எச்சரிக்கிறது.

banner

Related Stories

Related Stories