
முரசொலி தலையங்கம்
18.07.2026
போலீஸ் ராஜ்யம் நடத்தும் விஜய்!
முதலமைச்சர் விஜய் கையில் லத்தி இல்லையே தவிர போலீஸ் ஆட்சியைத்தான் அவர் நடத்தி வருகிறார். எதிர்க் கருத்துச் சொல்கிறவர்கள் அனைவரையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைப்பதில் குறியாக இருக்கிறது குதிரை பேர அரசு.
100 கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோவில் சொத்தை 2 கோடிக்கு தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, மாட்டிக் கொண்டதும் பேய்முழி முழிக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். அதுகுறித்து சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்கிறவர்களை, 'வழக்குப் போட்டுவிடுவேன்' என்றும் மிரட்டுகிறார்.
பழனி கோயில் நிலத்தை மோசடியாக விற்ற விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினார் என்று வினோத் சூர்யா குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வினோத் சூர்யா குமார் மீது பொது அமைதியைக் குலைப்பது, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவது என விஜய் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. சாதாரணமாக ஒரு விமர்சனத்தை அமைச்சர் மீது வைத்ததற்காக அவதூறு வழக்கு எனப் பதிவு செய்யாமல் கலவரத்தைத் தூண்டுவதாக வழக்குப் போடுகிறார்கள். இதனைத் தான் போலீஸ் ராஜ்யம் என்கிறோம்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யா குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, “சமூக வலைதளப் பதிவுக்கு அவதூறு வழக்குதானே தொடர முடியும்?” என்று மிகச் சரியான கேள்வியை எழுப்பினார்.
தவறான பிரிவில் வழக்குப்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதி அறிவுறுத்தினார். வழக்கு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கு மாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தன் மீதான விமர்சனங்களைத் தாங்க முடியாமல் இதுபோல மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளது விஜய் அரசு.

விஜய் அரசின் போலீஸ் ராஜ்யத்துக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.
* யூடியூப்பில் விஜய் அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்று ஜூன் 8 ஆம் தேதியன்று மதுரையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தது.
* கிருஷ்ணகிரி மாவட்டம் - ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் அன்பானந்தம் (28). தி.மு.க.வின் ஜென்-சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தமிழக முதல்வர் விஜய், நடிகை த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து விமர்சனம் செய்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். உடனே இவரைத் தேடி போலீஸ் வந்துவிட்டது.
இதை அறிந்த அன்பானந்தம் தேன்கனிக்கோட்டை நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் சரணடைந்தார். அவரை விசாரிக்க நீதிபதி அனுமதித்தார். ஒரு நாள் போலீஸ் விசாரணையில் இருந்த அன்பானந்தத்தை நீதிபதியே நிபந்தனை ஜாமீனில் விடுவித்துவிட்டார்.
முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை படுத்திய பாடு நாடறியும். முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாகப் பேசியதாக ஆத்தூர் காவல்துறையினரால் தூத்துக்குடி மாவட்டம் - ஆத்தூரில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். கைது செய்யப்பட்ட அன்றே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
‘பவுடர்” அடித்து மாட்டிக் கொண்டார் அமைச்சர் சரத்குமார். அந்த வீடியோவை வெளியிட்டார் என்று தாம்பரத்தைச் சேர்ந்த சரண் ஜெயராமன் தேடப்பட்டார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று பேட்டியே கொடுத்தார் சரண் ஜெயராமன். அவரை வேறு ஒரு வழக்கில் திடீரென கொளத்தூர் போலீஸார் கைது செய்தார்கள்.

வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நடுவர், போலீசார் சட்டப்படியான சரியான நடைமுறைகளைப் (legal process) பின்பற்றாமல் இந்தக் கைதை மேற்கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். காவல்துறை தரப்பின் ரிமாண்ட் (Remand) கோரிக் கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், சரண் ஜெயராமனின் கைதை உடனடி யாக ரத்து செய்து (Cancel) அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. எந்தளவுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது நடவடிக்கைகள் விஜய் அரசால் செய்யப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.
'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் விவாதங்கள் நடத்தும் ஊடகவியலாளர் விஜயனை, விசாரணை என்ற பெயரால் மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள். குதிரை பேரத்தால் உருவான விஜய் ஆட்சி, மற்றவர்கள் மீது குதிரை பேர குற்றச்சாட்டை வைத்து திசை திருப்பி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர், ஊடகவியலாளர் விஜயனிடம் பேசியதாகச்சொல்லி, அவரை திருவல்லிக்கேணி காவல்துறை விசாரணைக்கு அழைத்து மிரட்டி உள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றப் பொதுச்செயலாளர் அசீப் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "விஜயனை இரவு 10 - 12 மணி வரையும் விசாரணை செய்துள்ளார்கள். அவர் வீட்டிற்குச் சென்றவுடன் மீண்டும் 2 மணிக்கு வரச் சொல்லி விசாரணை செய்துள்ளனர். மீண்டும் காலை 11 மணிக்கு வர வைத்து 11 - 5 மணி வரை விசாரணை என்று அலைக்கழித்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்து மொபைல் போனையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விசாரணையில், 'யார் பெயரையாவது சொல்லுங்கள்' என்று தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அடிப்படை உரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரான செயல்" என அவர் சொல்லி இருக்கிறார்.
குற்றங்கள் அதிகமாகிவிட்டன. த.வெ.க. நிர்வாகிகள் செய்யும் குற்றச் செயல்களும் அதிகமாகிவிட்டன. ஊழல்கள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு அமைச்சராக அம்பலப்பட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் மறைக்கவே போலீஸ் பாணியை கையில் எடுத்து அராஜக ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய்.






