முரசொலி தலையங்கம்

பஞ்சராகும் பஞ்ச் டயலாக்... பழனிக்கே மொட்டை போடும் விஜய் ஆட்சி! - வறுத்தெடுத்த முரசொலி!

அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு பெரிய வேலையையும் பார்த்துவிடுவார் என்பதற்கு உதாரணம் தான் பழனியில் நடந்த மெகா ஊழல் ஆகும் என்று முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

பஞ்சராகும் பஞ்ச் டயலாக்... பழனிக்கே மொட்டை போடும் விஜய் ஆட்சி! - வறுத்தெடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

17.07.2026

‘அரசாங்கப் பணத்தைத் தொடமாட்டேன், தொட்டால் விட மாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன்’ என்று முதலமைச்சர் விஜய் விட்ட பஞ்ச் டயலாக் தினந்தோறும் பஞ்சர் ஆகி வருகிறது.

• அவர் யோக்கியராக இருந்தால், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பல லட்சம் பணம் விளையாடியதாகக் குற்றம் சாட்டப்படும் அமைச்சர் ஆனந்த் பதவியைப் பறித்திருப்பார்.

• அவர் யோக்கியராக இருந்திருந்தால், ‘பவுடர்’ பயன்படுத்தி மாட்டிக் கொண்ட அமைச்சர் சரத்குமார் பதவியைப் பறித்திருப்பார்.

• அவர் யோக்கியராக இருந்திருந்தால், தனது ரசிகையால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் பதவியைப் பறித்திருப்பார்.

• அவர் யோக்கியராக இருந்திருந்தால், பழனிக்கே மொட்டை போட்ட அமைச்சர் ரமேஷ் பதவியைப் பறித்திருப்பார்.

- இவை எதையும் முதலமைச்சர் விஜய்யால் செய்ய முடியாது. ஏனென்றால் இத்தகைய துர்நாற்ற சக்திகள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தால்தான் அவரால் முதலமைச்சராக இருக்க முடியும்.

‘யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை’ என்ற டைப் ஆள்தான் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் ரமேஷ் என்பதை அவரை அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள். இப்படி ஒரு ஆளுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் என்ன செய்வார்? அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு பெரிய வேலையையும் பார்த்துவிடுவார் என்பதற்கு உதாரணம் தான் பழனியில் நடந்த மெகா ஊழல் ஆகும்.

பஞ்சராகும் பஞ்ச் டயலாக்... பழனிக்கே மொட்டை போடும் விஜய் ஆட்சி! - வறுத்தெடுத்த முரசொலி!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை 2 கோடி ரூபாய்க்கு யாரோ ஒருவருக்கு எழுதிக் கொடுத்து விட்டார் அமைச்சர் ரமேஷ். ‘மாட்டிக் கொண்டதும்’ திருட்டு முழி முழிக்கிறார். ஊடகங்களின் முன்னால் மட்டுமல்ல; சட்டமன்றத்திலும் தெனாவெட்டாகப் பேசும் அமைச்சர் ரமேஷுக்கு இப்போது மீடியாக்களைச் சந்திக்கும் போது மட்டும் ஏன் வேர்க்கிறது?

இதில் தொடர்புடைய பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு – இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்து பரிகாரம் செய்துள்ளார் அமைச்சர் ரமேஷ்.

ரூ.100 கோடி நிலம் கைமாறியவுடன் இணை ஆணையருக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? கேட்டால், ‘அதற்காக வழக்கமாக வரும் பதவி உயர்வைத் தராமல் இருக்க முடியுமா?’ என்று மீடியாக்களிடம் கேட்கிறார் அமைச்சர் ரமேஷ். வழக்கத்துக்கு மாறாக, முறைகேடாக நடந்து கொண்ட ஒருவருக்கு எப்படி பதவி உயர்வு வழங்கலாம் என்பதுதான் நமது கேள்வி. முறைகேடான பத்திரப் பதிவுக்கு உடந்தையாக இருந்த அவருக்கு மூன்றே நாளில் இந்தப் பதவி உயர்வை வழங்கியது அமைச்சர் ரமேஷுக்கு தெரியாமல் நடந்ததா?

‘சார் பதிவாளர் தெரியாமல் செய்து விட்டார், சார் பதிவாளரை சஸ்பெண்ட் செய்துவிட்டோம்’ என்கிறது விஜய் அரசு. 100 கோடி சொத்தை 2 கோடிக்கு பதிவு செய்வதற்கான தண்டனை, ஒரு சார்பதிவாளரின் சஸ்பெண்டோடு முடிந்து விட்டதா? ஒரு சார்பதிவாளர் நினைத்தால் எத்தனை ஆயிரம் கோடி சொத்தையும் யாருக்கும் எழுதிக் கொடுத்து விட முடியுமா? யார் கொடுத்த தைரியத்தில் சார்பதிவாளர் இப்படி நடந்து கொண்டார்? அதுதான் விசாரிக்க வேண்டியது ஆகும்.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து தலைமைச் செயலகத்தில் வைத்து பேட்டி கொடுத்தார்கள். ஒருவர் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ். இன்னொருவர் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரும் இருவேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் சொன்னார்கள்.

பஞ்சராகும் பஞ்ச் டயலாக்... பழனிக்கே மொட்டை போடும் விஜய் ஆட்சி! - வறுத்தெடுத்த முரசொலி!

‘‘சார் பதிவாளர் பணியில் இருந்தவர் விடுமுறையில் சென்றதால் ஜூலை 6 ஆம் தேதி கூடுதல் பொறுப்பாக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் சார்பதிவாளர் பொறுப்புக்கு வருகிறார். அவருக்கு நிலம் குறித்த தகவல் சரிவரத் தெரியாததால் அந்த நிலத்தை அவர் ஜூலை 6 ஆம் தேதி பதிவு செய்து கொடுத்துவிடுகிறார்’’ என்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

‘எல்லாம் தெரிந்தே நடந்துள்ளது’ என்கிறார் பத்திரப்பதிவு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன். ‘‘பழனியில் தவறு நடந்ததை ஏற்றுக் கொள்கிறேன். நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையிலேயே கிரயம் செய்ததாக சார்பதிவாளர் கூறினார். அந்தப் பதிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளோம். சார்பதிவாளருக்கு மேல் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்கிறார் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன்.

இருவரது பேட்டிக்குள் எவ்வளவு முரண்பாடுகள். ‘நிலத்தைப் பற்றியே தெரியாது’ என்கிறார் ஒரு அமைச்சர். ‘தெரிந்தே செய்துள்ளார்கள்’ என்கிறார் இன்னொரு அமைச்சர். மாட்டிக் கொண்டதும் உளறுகிறார் அமைச்சர் ரமேஷ் என்பது இதன் மூலம் தெரிகிறது.

பழனி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு போட்டுள்ளது.

‘‘பத்திரப்பதிவுத் துறையும் தனி நபர்களும் உரிய எதிர் மனுதாரர்களைச் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் முறைகேடாக நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்றுள்ளனர்’’ என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். ‘‘பத்திரப் பதிவுத்துறை விதிகளை முறையாகப் பின்பற்றாமல் பத்திரப்பதிவு அலுவலர்கள் எவ்வாறு இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

“மதம், வழிபாடு சம்பந்தமான இடங்களை பதிவு செய்யும் போது பிரச்சினைகள் இருந்தால் அனைத்துத் தரப்பு விசாரணையும் முடித்த பின்பு பதிவு செய்ய வேண்டும்” என்ற விதி உள்ளது. அதனை முற்றிலும் அதிகாரிகள் மீறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது யார்? அமைச்சர் ரமேஷுக்குத் தெரியாமல் இந்தப் பதிவு நடந்திருக்காது. அவர் இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

banner

Related Stories

Related Stories