
முரசொலி தலையங்கம்
16.07.2026
நாகர்கோவில் சிறையில் நடத்த கொலை!
‘தூயசக்தி' ஆட்சியில் கொலைகொலையாய் கொலைகள் நடப்பதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் எப்போதும் 'சைலண்ட்' மோடில் இருப்பதால் சிறைக்குள்ளும் கொலைகள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன.
‘இதோ இந்த நிமிடம் முதல் எந்தத் தவறும் நடக்க விடமாட்டேன்' என்று விஜய் தனது பதவி ஏற்பின் போது சொன்னார். அந்த நிமிடம் முதல் தான் அதிகமான தவறுகள் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக அவரது உள்துறையில் தான் அதிகப்படியான தவறுகள் நடக்கின்றது.
மாற்றுத்திறனாளியான சபரி வர்மன் கொலை த.வெ.க. ஆட்சி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதற்கு உதாரணம் சொல்லத்தக்கதாக நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன். 35 வயதான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் செந்தாமரைக்குளம் காவல் நிலையத்திற்கு மாமூல் கொடுக்காத காரணத்தால் குட்கா விற்பனை செய்ததாக அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளார்கள். கடந்த 9 தேதி நாகர்கோவில் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி காலையில் அவர் சிறையில் உயிரிழந்ததாகக் கூறி ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். உடல் பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சாவு குறித்து நாகர்கோவில் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உடற்கூறாய்வில் சபரி வர்மனை சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ‘உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சபரி வர்மன் குடும்பத்துக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பிரச்சினையில் தொடர்புடையது காவலர்கள் என்பதாலும், சிறையில் மரணம் அடைந்துள்ளதால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்பதாலும் இதனை மறைக்க முயற்சி செய்தது த.வெ.க. அரசு.
சபரி வர்மனின் மனைவி ஆனந்தவல்லியிடம் புகார் மனு பெற்று நேசமணி நகர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரச்சினை பெரிதானால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிவிட்டோம் என்று சொல்லி பிரச்சினையை அமுக்கப் பார்த்தது த.வெ.க. அரசு.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையான அறிக்கையை வெளியிட்டார். தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்காகவே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
‘விசாரணைக்கைதியான சபரி வர்மன் மரணத்தை த.வெ.க. அரசு கண்டுகொள்ளவில்லை. சிறையில் கைதியை அடித்தே கொலை செய்துள்ளார்கள். கைதி கொல்லப்பட்ட நாளில் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், பெரம்பூரில் சூட்டிங் நடத்திக் கொண்டு இருந்தார். எங்களுக்கு ரீல்ஸ் வேண்டாம். நீதி வேண்டும்' என்று சொன்ன வழக்கறிஞர் பரந்தாமன், இதில் தொடர்புடைய காவலர்கள் யார் யார் என்பதையும் அம்பலப்படுத்தினார். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். இல்லாவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கேட்டு நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார். இது த.வெ.க. அரசுக்குகடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது.

மூன்று மணி நேர ஆலோசனைக்குப் பிறகு தொடர்புடைய காவலர்களை கைது செய்யும் முடிவை த.வெ.க. அரசு எடுத்தது. சபரி வர்மன் கொலை சம்பவம் தொடர்பாக தலைமை சிறைக் காவலர் சுரேஷ், சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தே ஆக வேண்டியநெருக்கடிக்கு உள்ளானது த.வெ.க. அரசு.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறிக்கை, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் பரந்தாமன் பேட்டி ஆகியவை வராமல் இருந்தால் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் கொலைக்கு நீதி கிடைத்திருக்காது. 'இயற்கைக்கு மாறான மரணம்' என்றே மூடி மறைத்திருப்பார்கள். மாற்றுத்திறனாளியான சபரி வர்மன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். உடற்கூறு அறிக்கையின் படி அவரது உடலில் 19 இடங்களில் படுகாயம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
1. வலதுகையில் 6 இடங்களில் காயம்
2. வலது கால் மற்றும் மூட்டுப் பகுதியில் காயம்.
3. இடது கால் மற்றும் மூட்டுப் பகுதியில் காயம்
4. இடது நெஞ்சின் கீழ் பகுதியில் 7 CM அளவில் காயம்.
5. தலையில் இரண்டு இடங்களில் காயம்.
6. மண்டை ஓடு சேதம்.
7. பின்னங்கழுத்தில் பலத்த காயம்.
8. பின்னந் தலையில் பலத்த காயம்.
- இப்படி உடல் முழுக்க காயங்கள். அதாவது அடித்தே கொன்றுள்ளது த.வெ.க. ஆட்சியில் சிறைத் துறை அதிகாரிகள். யார் கொடுத்த தைரியத்தில் இவை நடக்கிறது?
ஒரு பக்கம் குற்றங்களைக் கண்டு கொள்ளாத, தடுக்க முடியாத போலீஸ். இன்னொரு பக்கம், சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதியை அடித்துக் கொள்ளும் போலீஸ். இதுதான் விஜய் ஆட்சிக் கால போலீஸ். ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது விஜய் ஆட்சி.






