முரசொலி தலையங்கம்

ஆளுநர் சொன்னதற்கு எல்லாம் தவெக தலையாட்டி விட்டது : பிறகு எதற்கு முரண்டு பிடிக்கப் போகிறார்? - முரசொலி!

தனது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு ஆளுநர் எதற்கு முரண்டு பிடிக்கப் போகிறார்?

ஆளுநர் சொன்னதற்கு எல்லாம் தவெக தலையாட்டி விட்டது : பிறகு எதற்கு முரண்டு பிடிக்கப் போகிறார்? - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (22-06-2026)

ஏமாற்றம் தந்த ஆளுநர் உரை!

ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு சுமூகமாக இருந்ததாக பலரும் தங்களது தோளைத் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள். ஆளுநர் சொன்னதற்கு எல்லாம் விஜய் அரசு தலையாட்டி விட்டது. பின்னர் சுமூகமாகத்தானே இருக்கும்?

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தார். தான் உரையாற்றுவதற்கு முன்னால் தேசியகீதம்தான் பாட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.‘முடியாது, தமிழ்நாட்டின் மரபு என்பது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும், ஆளுநர் உரையாற்றி முடிந்ததும் தேசியகீதம் பாடப்படும். இதனை மாற்றிக் கொள்ள முடியாது’என்பதில் திராவிட மாடல் ஆட்சி உறுதியாக இருந்தது.

ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி இதனை ஏற்கவில்லை. ஒவ்வொரு முறையும் பிரச்சினை செய்தார். 2021 ஆம் ஆண்டு ஆர்.என்.ரவி ஆளுநராக வந்தார். 2022 ஆம் ஆண்டு தனது முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை. 2024 ஆம் ஆண்டு தனது உரையை வாசிக்காமல் அமர்ந்து இருந்தார். பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் தமிழ் வடிவத்தை வாசித்தார்கள். ‘தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடுகிறீர்கள், தேசிய கீதம் பாடவில்லை’ என்று சாக்குப் போக்குச் சொன்னார் ஆளுநர் ரவி. 2025 ஆம் ஆண்டிலும் இதே சாக்குப் போக்கைச் சொன்னார் ரவி.

ஆளுநர் உரைக்கு முன்னால் தேசியகீதம் பாட வேண்டும் என்பது ஆளுநர் மாளிகையின் நிபந்தனை. அதை இன்றைய விஜய் அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. ஆளுநர் மாளிகைக்கு தலையாட்டி விட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதும் ஆளுநர் உரை என்பதை மாற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் தேசிய கீதத்துக்கும் பின்னால் ஆளுநர் உரை என்ற மரபை தலையாட்டி ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தனது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு ஆளுநர் எதற்கு முரண்டு பிடிக்கப் போகிறார்?

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதன் பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழை மூன்றாவது இடத்துக்கு தள்ளி வைத்து தனது பதவியேற்பு விழாவை நடத்தினார் விஜய். ஆளுநரின் அஜெண்டாவுக்கு விஜய் தலையாட்டினார். அதே போலத் தான் தனது உரைக்கு முன்னதாக தேசியகீதம் பாடப்பட வேண்டும் என்ற ஆளுநர் மாளிகையின் கோரிக்கைக்கும் அடிபணிந்து விட்டார்.

அடுத்ததாக, ஜூன் 18 ஆம் நாளன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாசித்த அறிக்கையில் உப்பும் இல்லை, உறைப்பும் இல்லை, சத்தும் இல்லை, சாரமும் இல்லை. ஏதுமில்லை. ஆளுநருக்கு முரண்பாடானது எதுவுமில்லை. அதனால்தான் அவர் அமைதியாக வாசித்துவிட்டுக் கிளம்பி விட்டார்.

2023 ஆம் ஆண்டு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் போனதற்குக் காரணம் அதில் இருந்த சில சொற்கள்.பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய பெயர்களை விட்டுவிட்டு வாசித்தார். சுயமரியாதை, மதச்சார்பின்மை, மகளிர் முன்னேற்றம் ஆகிய சொற்களையும் விட்டுவிட்டு வாசித்தார். அவர் வாசிக்காவிட்டால் என்ன? ‘அரசு கொடுத்த உரையில் இருப்பது முழுமையாக அவைக் குறிப்பில் ஏறும்’ என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்து மாநில உரிமையை நிலைநாட்டினார்.உடனே கோபப்பட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி.

ஆளுநரைக் கோபப்படுத்தும் வகையிலான வார்த்தைகள் ஏதும் அவருக்கு எழுதித் தரப்படவில்லை. ‘என்னப்பா தலைப்பு போடுவது?’ என்று மண்டையைப் போட்டு நாளிதழ்களின் ஆசிரியர்கள் உடைத்துக் கொள்ளும் வகையில் ஏதுமற்ற அறிக்கையாகத்தான் ஆளுநர் உரை அமைந்து இருந்தது.

ஆளுநர் சொன்னதற்கு எல்லாம் தவெக தலையாட்டி விட்டது : பிறகு எதற்கு முரண்டு பிடிக்கப் போகிறார்? - முரசொலி!

நாளிதழ்கள் போட்ட தலைப்புகளைப் பாருங்கள்...

*இருமொழிக் கொள்கை தொடரும் --–- கவர்னர் உரையில் தகவல் - --– இது ‘தினத்தந்தி’.

*சமூகநீதி கணக்கெடுப்பை நடத்த முடிவு - --– கவர்னர் உரையில் தமிழக அரசு தகவல் ---– இது ‘தினமலர்’.

*ஊழலற்ற நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி - --–ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதி - --– இது ‘தினமணி’.

*Arlekar reaffirms T.N.position on language policy - – THE HINDU

- இருமொழிக் கொள்கை தொடரும் என்பதும் சாதி வாரிக் கணக்கெடுப்பும்தான் அந்த உரையில் இருந்து அவர்களால் எடுக்க முடிந்தது ஆகும். சாதிவாரிக் கணக்கெடுப்பில் இவர்கள் சாமர்த்தியமாக தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை. ( அது குறித்து பின்னர் விரிவாக எழுதுவோம்!)

தேர்தலுக்கு முன்னதாகதான் கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக்கூட நினைவூட்டி அதனை நிறைவேற்றித் தருவோம் என்ற உறுதிமொழி இந்த அறிக்கையில் இருக்கிறதா என்றால் இல்லை.

கடன், கடன் என்று ஒலமிடுகிறார்களே. தமிழ்நாட்டின் நிதி வளத்தை பெருக்கும் முடிவுகளை எப்படி எடுக்கப் போகிறோம் என்று சொன்னார்களா என்றால் இல்லை.

இந்த ஆட்சியை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே சொல்கிறது, தொழிலாளர்கள் என்ற பெயரே இந்த அறிக்கையில் இல்லை என்று.

எதையும் குறிப்பாக இல்லாமல், பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருக்கிறார்கள். தீர்க்கமான முடிவுகளாக இல்லாமல் கருத்துகளாகச் சொல்லி இருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் சொல்லப்பட்ட, நடைமுறையில் இருந்த, அறிவிக்கப்பட்ட கருத்துருக்களே வெவ்வேறு சொற்களில் இந்த உரையில் சொல்லப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு 2031 என்று வைத்திருந்த அளவுகோலை, 2036 என தள்ளிப் போடுவதுதான் நடந்திருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்றார் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘அனைவருக்குமான அரசு’ என்று இவர்கள் சொல்கிறார்கள்.

பல்வேறு துறைகளிலும் வழவழா கொழகொழா தனமாக வார்த்தைகளைப் பயன்படுத்திய இந்த உரையில் கோவில்கள் பற்றி வரும் போது மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையை அப்படியே பின்பற்றி இருக்கிறார்கள்.‘கோவில்கள் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவது இந்த அரசால் உறுதி செய்யப்படும்’என்று சொல்லப்பட்டுள்ளது. விஜய் ஆட்சியை ஆதரிக்க ஆளுக்கு முன்னால் ஓடிய கட்சிகள்தான் இதனை விளக்க வேண்டும்.

நாட்டில் மலர்ந்துள்ளது ஏமாற்றம்தான் என்பதை உறுதி செய்துள்ளது ஆளுநரின் உரை.

banner

Related Stories

Related Stories