
முரசொலி தலையங்கம் (09-06-2026)
இரண்டு கட்சிகள் இருவேறு காட்சிகள்!
தங்களது இயக்கத்தை நோக்கி வருகிறவர்களை தி.மு.க.வும் த.வெ.க.வும் எப்படி நடத்துகிறது என்பதற்கு கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகளே சாட்சியங்கள் ஆகும்.
அறிவாலயத்துக்கு வருகிறவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்பட்டு தலைவரால் வரவேற்கப் படுகிறார்கள். த.வெ.க.வுக்குச் செல்கிறவர்கள் பனையூர் கட்சி அலுவலக வாசலில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்.
தி.மு.க. வில் இயக்கத்தின் தலைவர் வருகை தந்து வரவேற்கிறார். இது தன்னைப் போலவே ஒவ்வொருவரையும் கழகத்துக்கு முக்கியம் என்று நினைப்பவராக தலைவர் இருப்பதைக் காட்டுகிறது. த.வெ.க. தலைவர் இவர் எவரையும் பார்ப்பது இல்லை. பார்த்தால் அவரது அழகு குறைந்து போகும். எவரையும் பார்ப்பது இல்லை.
அ.தி.மு.க.வில் இருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரை பேரத்தால் பதவி விலகினார்கள். பதவி விலகிய உடனே த.வெ.க. வில் இணைந்தார்கள். அவர்கள் கூட, அக்கட்சியின் தலைவர் முன்னிலையில் சேரவில்லை. அவர் பாணியில் சொல்வதாக இருந்தால், ‘அல்லுசில்லுகள்' முன்னிலை யில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். எம்.எல்.ஏ.க்கள் கதியே இதுவாக இருக்கும் போது முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை விஜய் எப்படி மதிப்பார்?
அ.தி.மு.க. வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கடந்த 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு த.வெ.க. தலைமை அலுவலகத்துக்கு வரவும், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கட்சியில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டது. 9 மணியில் இருந்தே பலரும் வரத் தொடங்கி விட்டார்கள். ஆனால் 11 மணி வரை த.வெ.க. அலுவலக வாசல் கதவு திறக்கப்படவே இல்லை. எனவே ஒன்றரை மணிநேரமாக பலரும் பனையூர் வாசலில் வெயிலில் காத்துக் கிடந்தார்கள். இவர்களோடு அவர்களது ஆதரவாளர்களும் வந்திருந்ததால், வெட்கமாகப் போய்விட்டது. பின்னர் பின் பக்கக் கதவு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
விஜய் வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே இருந்து முன்னாள் அமைச்சர்களை உட்கார வைத்து போட்டோ எடுத்துள்ளார். தற்குறிகள் கூட்டத்துக்குள் போனால் இந்த மரியாதைதான் கிடைக்கும். சுயமரியாதை கிடைக்காது. அதற்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தி.மு.க. வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த, செய்யூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பனையூர் பாபு இணைந்துள்ளார். செங்கல்பட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரன் இணைந்தார். இவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தான் இணைந்தார்கள். அறிவாலயம் கலைஞர் அரங்கம் அவர்களுக்காக விழாக்கோலம் பூண்டு இருந்தது. முக்கியமானவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு இணைய வந்தவர்களும் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு மதிக்கப்பட்டார்கள். என்ன நோக்கத்துக்காக தி.மு.க.வில் இணைகிறோம் என்று அவர்களுக்குப் பேச வாய்ப்பு தரப்பட்டது. தலைவருடனும், எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி அவர்களுடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மனநிறைவோடு தங்களை அவர்கள் தி.மு.க.வில் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியோடு திரும்பி இருக்கிறார்கள்.
ஒருவர் கட்சி தொடங்கலாம். எல்லாக் கட்சியும் தி.மு.க. ஆகிவிட முடியாது. சுயமரியாதைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது. அப்படித்தான் அனைவரையும் நடத்தும். சினிமா புகழால் கட்சியைத் தொடங்கி, படத்தை ஓட்டும் புரமோஷன் மாதிரியே கட்சியையும் தேர்தலையும் நடத்தி, அப்போதும் தனிப்பெரும் செல்வாக்கை அடைய முடியாமல், தனது கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர்களின் ஆதரவைப் பெற்றே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து உள்ள விஜய்க்கு, மக்களைப் பற்றிய மரியாதை எப்படி இருக்கும்?

அ.தி.மு.க.வில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு அமைச்சர் பதவியைத் தருகிறேன், வாரியம் தருகிறேன் என்று ஆசை வார்த்தைக் கூறி இழுத்து, தனது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, பின்னர் அமைச்சர் பதவி கிடையாது என்று ஏமாற்றி துரத்தி விட்டவர்தான் விஜய். 'கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி போய்விடும்' என்று தெரிந்தே பட்டப்பகலில் ஏமாற்றப்பட்டார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
இப்போதும் அப்படித்தான் விஜய் முன்னால் சேரப் போகிறோம் என்று வரவழைக்கப்பட்டார்கள் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள். ஏமாற்றப்பட்டுள்ளார்கள். நம்ப வைத்து ஏமாற்றுவதில் வல்லவர் அவர். ஏழு மணிநேரமாக வருகிறேன், வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி 41 உயிர்கள் பலியாகக் காரணமானவர் அல்லவா அவர்? அவருக்கு இதெல்லாம் பெரிய காரியமா?
கரூரில் தன்னைப் பார்க்க வந்த 41 உயிர்கள் செப்டம்பர் 27 ( 2025) பலியானதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லப் போகாத விஜய், டிசம்பர் 27 அன்று மலேசியா சென்று தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆடிக் கொண்டு இருந்தார். எனவே, அவரிடம் இது போன்ற மாண்பை எதிர்பார்ப்பது தவறு.
மே 18 அன்று அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அன்று பெண்கள் சிங்கப்படையை உருவாக்கப் போவதாகக் கையெழுத்துப் போட்டார். இன்று ஜூன் 8. இன்று வரை உருவாக்கவில்லை. மே 27 அன்று தொடங்கப் போவதாக அறிவிப்பு வந்தது. அன்று தொடங்கவில்லை. மே 29 தொடங்கப் போவதாக அறிவிப்பு வந்தது. மேடை எல்லாம் போட்டார்கள். ஆனால் முதலமைச்சர் செல்லவில்லை. தனது மேனேஜர் வீடு திறப்பு விழாவுக்கு பட்டுவேட்டி கட்டிச் சென்று விட்டார். அவருக்கு எது முக்கியம் என்று அவருக்குத் தானே தெரியும்?






