முரசொலி தலையங்கம்

“முதல்வர் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. இன்னமும் தேர்தல் கால மனநிலைதான்” : முரசொலி காட்டமாக விமர்சனம்!

திருச்சியில் பேசிய முதல்வர் விஜய் ஆணவம் தலைக்கேறி பேசி இருக்கிறார் என்றும், முதலமைச்சர் என்ற பொறுப்பிருப்பது தெரிந்திருந்தால் தேர்தல் கால உரையை உளறி இருக்க மாட்டார் என முரசொலி விமர்சித்துள்ளது.

“முதல்வர் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. இன்னமும் தேர்தல் கால மனநிலைதான்” : முரசொலி காட்டமாக விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

விஜய்க்கு நாவடக்கம் தேவை!

முரசொலி தலையங்கம் (03.06.2026)

விஜய் இன்னமும் தேர்தல் கால மனநிலையில் தான் இருக்கிறார். முதலமைச்சராக ஆகிவிட்டோம் என்ற நினைப்பும் இல்லை. பொறுப்பும் இல்லை. அத்தகைய நினைப்பு இருந்திருந்தால் நேற்றைய தினம் திருச்சியில் தேர்தல் கால உரையை உளறி இருக்க மாட்டார். அந்தப் பொறுப்பு இருந்திருந்தால் நாவடக்கத்தோடு பேசி இருப்பார். ஆணவம் தலைக்கேறி பேசி இருக்கிறார் 'முதலமைச்சர்' விஜய்.

தனது தோல்வியை தொடக்கத்திலேயே விஜய்யின் வாக்குமூலம் ஒப்புக்கொண்டது. 'இன்னும் கொஞ்சம் கூடுதலாக எனக்கு வோட்டுப் போட்டிருக்கலாம்' என்று உடலை நெளித்துக் கொண்டு அவர் சிரித்த சிரிப்பு அசிங்கமாக இருந்தது. 'எனக்கு ஆட்சி அமைக்கும் தகுதியை நீங்கள் வழங்க வில்லையே' என்பதை ஒப்புக் கொள்வதைப் போல இருந்தது அவரது பேச்சு.இப்படி அரைகுறையாக வெற்றிபெற்றவர் ஆணவத்தால் ஏன் கத்த வேண்டும்?அடக்கமாக பேசி இருக்கலாமே?

ஆட்சி அமைக்கத் தேவையானது 118 இடங்கள். அவருக்கு கிடைத்ததோ 108 தான். ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையே கிடைக்கவில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிட்டு வென்றவர்கள் ஆதரவு இல்லை என்றால் விஜய் ஆட்சி அமைத்திருக்க முடியாது. இப்படி இரவல் வாங்கி, கடன் வாங்கி, 'அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன்' என்று சொல்லி, கொடுத்ததால் தான்அவரால் பதவிப் பிரமாணமே செய்ய முடிந்தது. இல்லாவிட்டால் மறுபடியும் படத்தில் நடிக்கத்தான் போயிருக்க முடியும்.

இந்த லட்சணத்தில் எம்.ஜி.ஆரை விட அதிகமாக வாக்குகள் வாங்கி விட்டாராம். தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார் விஜய். தி.மு.க. கூட்டணியை விட 17 லட்சம் வாக்குகள்தான் அதிகம் வாங்கி இருக்கிறது விஜய் கட்சி. 16 இடங்களில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார்கள். 8 மாவட்டங்களில் விஜய் கட்சி எந்தத்தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. கடன் வாங்கி ஆட்சி அமைத்துவிட்டு மேடை போட்டு கனைக்க வெட்கமாக இல்லையா?

'தி.மு.க.வுக்கு த.வெ.க.வுக்கும் தான் போட்டி' என்று சொல்லிக் கொள்ளும் விஜய், அ.தி.மு.க.வை 'மற்றும் பலர்' என்றுதான் சொல்கிறார். மற்ற கட்சிகளைஎல்லாம் 'அல்லு சில்லு கட்சிகள்' என்றும் சொல்கிறார். அவர் பாணியில் சொல்வதாக இருந்தால், 'அல்லு சில்லு' கட்சிகளை வைத்து எதற்காக ஆட்சி அமைத்தார்? வெட்கமாக இல்லையா?

தேர்தலுக்கு முன்னதாக 'கல்லாப்பெட்டி' கூட்டணி என்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை கொச்சையாகப் பேசியவர், இப்போது 'அல்லு சில்லு' என்கிறார். இதை விட ஆணவம் இருக்க முடியுமா?

‘மற்றும் பலர்’ என்று அ.தி.மு.க.வைச் சொல்லும் இதே விஜய், அந்த ‘மற்றும் பலர்' வீட்டுக்கு பல்லிளித்துக் கொண்டு ஏன் போனார்? சி.வி.சண்முகம் வீட்டுக்கு போகும் போது, அவர்கள் மற்றும் பலராக இல்லாமல் ‘மாமன் வீடாக இருந்ததா? அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 25 பேர் ஆதரவைக் காட்டித்தான் சட்டமன்றத்தில் 144 உறுப்பினர் ஆதரவு என்று காட்டியது கயமைத்தனம் அல்லவா?

அமைச்சர் பதவி தருகிறேன், வாரியத் தலைவர் பதவி தருகிறேன் என்று சொல்லி வாக்குப் போட வைத்து விட்டு, அவர்களையும் கைகழுவி விட்டது விஜய் செய்த அசிங்க அரசியல் அல்லவா? கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி போகும். அது தெரிந்தும், அவர்களை ஏமாற்றி வோட்டுப் போட வைத்தது நாற்றமெடுத்த செயல் அல்லவா? இவை அனைத்தையும் செய்து விட்டு, 'குதிரை பேரம் இல்லை' என்று சொல்வதற்கு கூச்சமாக இல்லையா?

“முதல்வர் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. இன்னமும் தேர்தல் கால மனநிலைதான்” : முரசொலி காட்டமாக விமர்சனம்!

முதலமைச்சராகப் பொறுப்பேற்று 20 நாள் ஆகிறது. முதல் நாளில் மூன்று கையெழுத்துகள் போட்டார். அதைக் கூட ஒழுங்காகச் சொல்லத் தெரியவில்லை. 'அனைவருக்கும் 200 யூனிட் இலவசம்' என்று முதலில் சொல்லி விட்டு, '500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு' என்று இப்போது சொல்லி இருக்கிறார். முதல் கையெழுத்தே மோசடிக் கையெழுத்துதான்.

தமிழ்நாட்டில் உள்ள அத்தனை டாஸ்மாக் கடையையும் மூடிவிட்டதைப்போலச் சொல்லி இருக்கிறார் விஜய். சில கடைகளை மூடிவிட்டு, பல பார்களைதிறந்துவிட்டதால் பல்வேறு ஊர்களில் பெண்கள் போராடி வருகிறார்கள். இதெல்லாம் விஜய்க்குத் தெரியாதா? சிங்கப் பெண் திட்டத்தை தொடங்கப் போவதாகச் சொல்லி இரண்டு முறை தள்ளிப் போட்டுள்ளார்கள். 'நெக்ஸ்ட் வீக்' என்கிறார் விஜய். எவ்வளவு வீக் ஆக ஆட்சி நடத்துகிறார் என்பதற்கு உதாரணம் இது.

நாடு முழுக்க மின் வெட்டு. இருட்டில் போராடுகிறார்கள் மக்கள். பல இடங்களில் உரிய நேரத்துக்கு பேருந்துகள் வரவில்லை. மதுபானக் கடைகளுக்கு எதிராக மறியல். மின் கட்டண மோசடியைப் போலவே பயிர்க் கடனிலும் தில்லுமுல்லு செய்தார் விஜய். மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராடுகிறார்கள். பாலியல் வன்கொடுமைச் செய்தி வராத நாளே இல்லை. த.வெ.க. நிர்வாகிகளின் அடிதடி, பட்டாக்கத்தி அக்கிரமங்கள் வீடியோக்களாக வெளியாகி வருகிறது. இவை எதற்கும் பதில் இல்லை.

மேகதாது அணை பிரச்சினை. திருவள்ளுவருக்கு காவி. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. மின் வெட்டு பிரச்சினை. மும்மொழித் திணிப்பு. இவை எதைப் பற்றியும் பேசவில்லை. பழைய படத்தை மீண்டும் எடுப்பதைப் போல பழைய பேச்சையே திரும்பப் பேசி இருக்கிறார் விஜய்.

'கவர்ச்சியைப் பார்த்து வோட்டு போட்டாங்களாம். நாங்க என்ன....'என்று நிறுத்தியது கேவலத்தின் உச்சம். அவரது ஆரம்ப காலப் படங்களை அவர் பார்க்கட்டும்.

‘எனக்கு ஏதாவது வாயில வரப்போகுது' என்கிறார் விஜய். இதை விட தரங்கெட்ட வார்த்தைகள் இருக்க முடியாது. அவரது ஆட்சியைப் பற்றி மக்கள் வாயில் என்ன வருகிறது என்பதற்கு ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இணையதளங்களில் இருக்கிறது. அதைப் போட்டு பார்த்து கேட்டால் அவருக்கு ஆணவம் குறையலாம்.

banner

Related Stories

Related Stories