முரசொலி தலையங்கம்

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !

குதிரை பேரம் குறித்து முதலமைச்சர் விஜயோ, த.வெ.க.வோ உடனடியாக முறையான விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

18.05.2026

குதிரை பேரம் - விளக்கம் தேவை!

பெரும்பான்மை கிடைக்காத தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த - தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள குதிரை பேரம் நடத்தினார் முதலமைச்சர் விஜய் என்பது குற்றச்சாட்டு. இதற்கு முறையான விளக்கத்தை அவர் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.

விஜய் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உடனடியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவருக்கு ஓடிப் போய் ஆதரவைத் தருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு நாளில் மனம் மாறத் தரப்பட்ட உறுதிமொழி என்ன?

டி.டி.வி. தினகரன் தனது கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வைக் காணும் என்றும், எனது கையெழுத்தை அவர் போட்டுள்ளார் என்றும் ஆளுநரிடம் மனு தருகிறார். கிண்டி காவல் நிலையத்திலும் புகார் தருகிறார். 'நான் போகவில்லை' என்று அந்த எம்.எல்.ஏ.வே பேட்டி தருகிறார். பின்னர் அவரே விஜய் ஆதரவாளராக மாறுகிறார். அந்த எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் டி.டி.வி. தினகரன். அப்படியானால் தினகரன் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தரப்பட்ட வாக்குறுதி என்ன?

அ.தி.மு.க. என்ற கட்சியே முதலமைச்சர் விஜய் போட்ட தூண்டிலில் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பின்னால் 22 உறுப்பினர்கள் நிற்கிறார்கள். விஜய் ஆட்சியை ஆதரிப்பவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி பின்னால் இருக்கிறார்கள். விஜய் ஆட்சிக்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்த 25 பேருக்கு தரப்பட்ட ரகசிய வாக்குறுதி என்ன?

தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சியை அமைப்பதைப் பற்றி பிரச்சினை இல்லை. மேலும்,சில கட்சிகள் தங்களது நிர்வாகக் குழுக் கூட்டங்களை நடத்தி ஆட்சிக்கு ஆதரவு என முடிவெடுத்திருப்பதும் பிரச்சினை இல்லை. மாறாக ஒரு கட்சியை இரண்டாக உடைத்திருப்பது பேரத்தின் அடிப்படையில் தானே? இன்னொரு கட்சி எம்.எல்.ஏ.வைத் தூக்கி இருப்பதும் பேரமாகத் தான் இருக்கும் என்று சந்தேகம் எழுவது இயல்பு தானே?

‘முதலமைச்சரைச் சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்?' என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நேராகக் கேள்வி கேட்டார் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சபையில் உட்கார்ந்து இருந்த முதலமைச்சர் விஜயால் பதில் சொல்ல முடியவில்லை.

“முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசில் எந்தவித குதிரைப்பேர அரசியலும் நடைபெற வில்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நிபந்தனை இல்லாத வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தனர். அதே போல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களது ஆதரவை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,. அப்படி அறிவித்தால் மட்டுமே குதிரை பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்” என்று சொல்லி இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். விஜய் கட்சியில் இருந்து இந்த அறிக்கைக்கு இதுவரை பதில் வரவில்லை.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சியைச் சேர்ந்த 47 உறுப்பினர்களும் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று சொன்ன பிறகும் 25 பேர் ஆதரித்து வாக்களித்துள்ளார்கள். இந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்த அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி அளித்தால் குதிரை பேரம் நடந்துள்ளது என்பது உறுதி ஆகிவிடும். எட்டு பேர் அமைச்சர் ஆகிறார்கள், ஏழு கேட்கிறார்கள், ஆறு தரப்போகிறார்கள் என்று வரும் செய்தி அனைத்தும் பேரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 'அமைச்சர் பதவி தருகிறோம், வாரியத் தலைவர் பதவி தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டப்படுவதாக' சட்டமன்றத்திலேயே எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். இது அவைக் குறிப்பில் பதி- வாகி இருக்கிறது.

குதிரை பேரம் நடந்திருப்பதாக தகவல் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். குதிரை பேரம் நடத்தியதாக டி.டி.வி. தினகரனும் சொல்லி இருக்கிறார்.

மே 10 ஆம் தேதி அன்று முதலமைச்சராக விஜய் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அமைச்சர்கள் பொறுப்பேற்ற ஒரு மணி நேரத்தில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்த 10 பேருக்குமான துறைகள் 16 ஆம் தேதி தான் வந்துள்ளது. இன்னும் 20 -23 பேரை அமைச்சர்கள் ஆக்கலாம். ஒரு வாரமாக மற்ற அமைச்சர்கள் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. என்ன காரணம்? பெரும்பான்மை இருந்திருந்தால் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாக அறிவிக்கலாம். ஆனால் பேரத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டவர்களை அமைச்சர்கள் ஆக்க வேண்டும் என்பதால் இழுபறி தொடர்கிறது. பேரம் படியாமல் இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி ஆகும்.

'குதிரை பேர விவகாரத்தில் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் முதலமைச்சர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்” என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு சொல்லி இருக்கிறார். ”நாடாளுமன்றத்தில் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களின் ஆதரவை குறுக்கு வழியில் பெற்றனர். அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பூட்டாசிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததைப் போல இன்றைய முதலமைச்சர் விஜய் மீது வழக்குப் பதியப்படலாம்” என்று அ.தி.மு.க. எம்.பி.யான இன்பதுரை சொல்லி இருக்கிறார்.

பணம், பதவி, சலுகைகள் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கும் சட்டவிரோத நடவடிக்கையைத் தான் குதிரை பேரம் என்கிறோம். விஜய் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இது போன்ற அஸ்திரங்களை ஏவி இருக்கிறார் என்பதை பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டாக வைத்து வருகிறார்கள்.

குதிரை பேரம் குறித்து முதலமைச்சர் விஜயோ, த.வெ.க.வோ உடனடியாக முறையான விளக்கத்தை வெளியிட வேண்டும்.

banner

Related Stories

Related Stories