
பா.ஜ.க. கொண்டுவரும் பேராபத்து!
முரசொலி தலையங்கம் (13.04.2026)
மேற்கு வங்க மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்'என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி
அவர்கள்,“ஊடுருவல்காரர்களை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. திருப்திப்படுத்தும் அரசியலுக்கு முடிவுரை கட்ட மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.
பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று பொது சிவில் சட்டம் ஆகும். பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழும் நாடு இது. இங்கு பலதரப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தரும் சட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை கொண்டு வரத் துடிக்கிறது பா.ஜ.க.
திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுப்பு ஆகியவை பொதுவாக அனைவருடனும் கலந்தது. ஆனால் இவை ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறதா என்றால் இல்லை. இந்துக்கள் அனைவரும் ஒரே முறைப்படி திருமணம் செய்வது இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஒரே மாநிலத்துக்குள் பல்வேறு வகையில் திருமணங்கள் நடக்கின்றன. குடும்பம் என்ற அமைப்பு முறை, பொதுப்பண்பாட்டுடன் இயங்குவது இல்லை.
இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சிறப்புரிமைகளை, பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு வழங்கி இருக்கிறது. இது பன்முகத் தன்மையைக் காக்க வழங்கப்பட்ட உரிமை ஆகும். அதை குலைக்கப் பார்க்கிறது பொது சிவில் சட்டம். இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் தங்களுக்கென தனித்தனி திருமணச் சட்டங்களை வைத்திருப்பதுதான் பா.ஜ.க.வை உறுத்துகிறது. அனைத்து மதங்களின் தனிநபர் சட்டமும் இவர்களுக்கு எரிச்சல் தருகிறது. அதை எடுக்க வேண்டும். அதுதான் இவர்களது உண்மையான நோக்கம்.
இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஒன்றிய சட்டத் துறை அமைச்சகம், சட்ட ஆணையத்துக்கு ஒரு கோரிக்கை வைத்தது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கேட்டது. 2018 ஆம் ஆண்டு சட்ட ஆணையம் தனது கருத்தைத் தெரிவித்தது. பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று சொன்னது.
உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. அரசு பொது சிவில் சட்டத்தை 2024 ஆம் ஆண்டே நிறைவேற்றிவிட்டது. இந்தியாவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் இதுதான். அனைத்து மதத்தினருக்கும் பொது சிவில் சட்டத்தை உருவாக்கிய உத்தரகாண்ட் அரசு, பழங்குடியின மக்கள் இந்த மசோதாவுக்குள் வர மாட்டார்கள் என்ற சலுகையை வழங்கியது. ஏனென்றால் பழங்குடியினர் இதனைக் கடுமையாக எதிர்ப்பார்கள் என்று தெரியும். இத்தகைய சட்டத்தை அமல்படுத்த விடமாட்டார்கள் என்று தெரியும். அதனால் தப்பித்துக் கொண்டது உத்தரகாண்ட் பா.ஜ.க. அரசு. பழங்குடியினரை மட்டும் விலக்கும் சட்டம், எப்படி பொது சிவில் சட்டம் ஆகும்?

பொது சிவில் சட்டத்தை முஸ்லீம் தனிச் சட்ட வாரியம் தனது கடுமையான எதிர்ப்பை 2023 ஆம் ஆண்டே சொல்லியது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கூடிய இந்த சட்டவாரிய உறுப்பினர்கள், மத்திய சட்ட ஆணையத்துக்கு விரிவான கடிதத்தை அனுப்பினார்கள். சிறுபான்மையினரின் உரிமையில் இந்தச் சட்டம் தலையிடுகிறது என்று சொன்னார்கள். சீக்கியர்களின் சிரோமணி அகாலி தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இதனை எதிர்த்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பழங்குடி அமைப்பினர் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். காசி ஹில்ஸ் என்ற தன்னாட்சி பெற்ற மாவட்டக் கவுன்சில் இதனை எதிர்த்துள்ளது. காசி சமூகத்தின் பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள் இவர்கள். அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சிறப்பு சலுகை பெற்றிருக்கும் சமூகம் இது.
2023 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான கடிதத்தை எழுதினார்கள். பொது சிவில் சட்டம் கூடாது என்பதற்கு அதில் வலுவான வாதங்களை வைத்துள்ளார்கள்.
"ஒருவர், தான்விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை" இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ளது. அதனை பொது சிவில் சட்டம் மீறுகிறது.
*ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை.
*பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சி இது.
*பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம்.
*இது மத விவகாரங்களில் ஒன்றிய அரசின் அத்துமீறலாகவே கருதப்படும்.
*இந்த சட்டம் பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும்.
*இது முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடியது.
*பழங்குடி சமூகத்தை இது அதிகமாக பாதிக்கும்.
*அனைவருக்கும் பொதுவான நடைமுறையானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்.
நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளதாகவும், பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும். என்று அந்தக் கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். இதே போல் பல மாநில முதலமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் சிலரும் அப்போதே எதிர்ப்பை பதிவு செய்தார்கள். அனைத்து மாநிலங்களிலும் இது உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை பா.ஜ.க. திரும்பப் பெற வேண்டும்.






