முரசொலி தலையங்கம்

“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

“அ.தி.மு.க. ஆட்­சிக்கு சாத்­தான்­கு­ளமே சாட்சி!” என தலைப்பிட்டு அ.தி.மு.க ஆட்சியில் நடந்த அவலத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!

“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், பழனிசாமி கையில் உள்துறை இருக்கும் போது காவல் நிலையத்தில் நடந்த கொடூரக் கொலை வழக்குதான் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்-மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு ஆகும். இதில் தொடர்புடைய 9 போலீஸாரும் குற்றவாளிகள் என 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு அளித்திருக்கிறது மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம். இதன் மூலம் மிகமிகக் கொடூரமான ஆட்சியை பழனிசாமி வழங்கினார் என்பதற்கு சாத்தான்குளமே சாட்சி ஆகிவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ஆம் ஆண்டு ஜூன் 19ஆம்தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. காவல் துறையால் விசாரிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சி.பி.ஐ. தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. நீதிபதி முத்துக்குமரன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது தீர்ப்பை வாசித்துள்ளார்.

“ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தன. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலேயே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். தந்தை, மகன் இருவருக்கும் போலீஸ்காரர்கள் தாக்கியதால்தான் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உறுதி ஆகிறது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. மரணங்களை விளைவிக்கக் கூடிய வகையில் காயங்கள் இருந்தன. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது உயிரிழப்பு கொலை என சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்துள்ளது.

“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

அவர்களது உடலில் உள்ள காயங்கள் வெளிப்படையாக இருந்ததால் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ செய்யப்பட்டுள்ளது. உட்புறம் இருந்த காயம் பலமுறை தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

'இரவு முழுவதும் பத்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு தொடர்ந்து தாக்கினார்கள். 200 முறைக்கு மேல் பின்னால் தாக்கினார்கள்' என பென்னிக்ஸ் அவரது உறவினரிடம் கூறியதாக குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கி உள்ளனர். கைகளைக் கயிற்றில் கட்டி தொங்கவிட்டு தாக்கி உள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர்.

'ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறை யினர் தாக்கும்போது நாம் அடித்து பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்துள்ளனர்' எனவும், 'இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம்' எனவும் காவல்துறையினர் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் இரவு முழுவதும் சிறிது நேரம் இடைவெளி விட்டுவிட்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இரவு 3மணி முதல் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர்” என்பதை நீதிபதி விவரித்துள்ளார்.

ஆனால் பழனிசாமி அன்று என்ன அறிக்கை கொடுத்தார்? என்ன சொன்னார்? ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலையையே மறைக்கப் பார்த்தார்.

“22.6.2020 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த திரு.பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து சிறைக் காவலர்கள் திரு. பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திரு. பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் 23.6.2020 அன்று அதிகாலை சிறையில் இருந்த திரு. பென்னிக்ஸின் தந்தை திரு. ஜெயராஜ் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறை காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த திரு. ஜெயராஜ் அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்” என்பதுதான் அன்றைய தினம் உள்துறையைக் கையில் வைத்திருந்த பழனிசாமி சொன்னது ஆகும்.

சாத்தான்குளம் சம்பவத்தை 'இரட்டைப் படுகொலை' என்று விமர்சித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் அழுத்தம்கொடுத்தார். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வலியுறுத்தினார். அதன்பிறகு வேண்டா வெறுப்பாக சி.பி.ஐ.யிடம் இப்படைக்க உடன்பட்டார் பழனிசாமி. அதனால் தான் இன்று முழு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது. கொடூரமான ஆட்சியைத்தான் அவர் கொடுத்தார் என்பதையும் இத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

“குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒருவகையில் குற்றவாளிதான். பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? தனது குற்றத்தை ஒப்புக் கொள்வாரா பழனிசாமி?

banner

Related Stories

Related Stories