முரசொலி தலையங்கம்

“கீழடி - தமிழர்களின் தாய்மடி; பொருநை - தமிழர்களின் பெருமை!” : முரசொலி தலையங்கம்!

“ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்!” எனத் தலைப்பிட்டு, தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் திராவிட மாடல் அரசைப் புகழ்ந்த முரசொலி தலையங்கம்.

“கீழடி - தமிழர்களின் தாய்மடி; பொருநை - தமிழர்களின் பெருமை!” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கீழடியைத் தமிழர்களின் தாய்மடி என்று சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொருநையைத் தமிழர்களின் பெருமை என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்.

நேற்றைய தினம் திருநெல்வேலியில் திறந்து வைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகம், தமிழர்களின் கடந்த காலத்தைப் பேசுவது மட்டுமல்ல, காலங்கள் கடந்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரை நின்று நிலைநிறுத்தப் போகும் இடமாகும்.

தஞ்சை பெரியகோவில், மாமல்லபுரம், வள்ளுவர் கோட்டம் என்ற வரிசையில் இது போற்றத்தக்கதாக அமையப் போகிறது. ஏற்கனவே கீழடி அருங்காட்சியகம் அமைத்த முதலமைச்சர், இப்போது பொருநை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல்தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக் காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்கள் அனைத்தையும் கொண்ட கண்காட்சியாக இது அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருகே 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் இது விரிந்து பரந்துள்ளது. இதனை ஒருவர் முழுமையாகப் பார்த்து வெளியில் வர பல மணி நேரம் ஆகும். வெளியில் வந்தாலும் அவர்களது மனக்கண்ணில் பொருநை நதியும் நாகரிகமும், பண்பாடும் ஓடிக் கொண்டே இருக்கும்.

“இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும். இதனை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே தமிழ்நாடு அரசின் தலையாய கடமை”என்று முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அவை வெறும் வாய்ச்சொல் அல்ல என்பதன் அடையாளம்தான் பொருநை அருங்காட்சியகம்.

18.5.2023 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு 20.12.2025 அன்று திறப்பு விழா கண்டுவிட்டது பொருநை அருங்காட்சி யகம். மதுரை எய்ம்ஸ் மாதிரி ஏமாற்றத்தின் அடையாளம் அல்ல இது. சொன்னால், சொன்னதைச் செய்வோம், அதுவும் உடனே செய்வோம் என்பதை முதலமைச்சர் அவர்கள் மெய்ப்பித்து உள்ளார்.

“கீழடி - தமிழர்களின் தாய்மடி; பொருநை - தமிழர்களின் பெருமை!” : முரசொலி தலையங்கம்!

கண்டுபிடிப்புகள் காலங்கள் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட பெருமைகள் அனைத்தும் கோப்புகளில் முடங்கியது. அல்லது தொல்லியல் ஆய்வாளர்களின் கட்டுரைகளுக்குள் கரைந்தது. அவ்வப்போது ஒரு சில சொற்களாக அவை மேடைகளில் முழங்கப்படும் அவ்வளவுதான். மற்றபடி அனைத்தும் யாரும் பார்க்க முடியாத, பார்க்கக் கூடாத, பார்க்கக் கிடைக்காத அரியவைகளாக மீண்டும் கரையான்களால் அழிந்து போகும்.

இவை சிலரால் கவனிப்பாரற்றும் போகக் கூடும். கவனிக்கக் கூடாது என்றும் தடுக்கப்பட்டு வந்துள்ளது. அதனை மாற்றி, பெருமைக்குரியவை அனைத்தையும் பெருமைப்படும் அளவுக்கு படையலாகக் காட்சிப் படுத்தியதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை ஆகும். முதலமைச்சருக்கு தமிழ், தமிழின, தமிழ்நாட்டுப் பற்றின் வெளிப்பாடு இது.

தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையைப் பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின் தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககாலபாண்டியரின் துறைமுகமான

கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்த அரிய தொல்பொருட்களை ஒரே இடத்தில் பொருநை ஆற்றங்கரை நாகரிகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் சிறப்பாக தொல் பொருட் களை காட்சிப்படுத்தி நவீன வசதிகளோடு அமைக்கப் பட்டுள்ளது. தென் பகுதியின் கட்டடக் கலையை நினைவூட்டும் வகையில் இதனைக் கட்டி இருக்கிறார்கள்.

*சிவகளையில் ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. ஈமத்தாழி ஒன்றில் சேகரிக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகள் இருந்தது. 3,200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நெல் பயிரிட்டு இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது சிவகளை.

* இரும்புக் காலத்துக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த மக்களின் வரலாற்றை ஆதிச்சநல்லூர் சொல்கிறது. கற்காலத்தைச் சேர்ந்த நுண் கருவிகள் கிடைத்துள்ளது. இவை இரும்புக் காலத்துக்கு முந்தைய காலத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. நீர் மேலாண்மை நடந்துள்ளது. வெண்கலம், தங்கப் பொருட்கள் கிடைத்துள்ளன.

* துலுக்கர்பட்டியில் வெள்ளி முத்திரையிடப்பட்ட நாணயம், தந்தத்தினால் ஆன பொருட்கள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

* கொற்கை என்பது பாண்டியர் காலத்து துறைமுகம். இலக்கியங்களில் சொல்லப்பட்ட அனைத்துக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் பொருநை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தமிழ் நிலங்களின் தனிச்சிறப்பை உணர்வு பூர்வமாக அனுபவிக்கச் செய்யும் ஓர் பயணமாக, ஐந்திணை கள் ஐந்து பரிமாண வடிவில் (5D) பொதுமக்கள் உவகையுடன் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.

“கீழடி - தமிழர்களின் தாய்மடி; பொருநை - தமிழர்களின் பெருமை!” : முரசொலி தலையங்கம்!

தொடுதிரை, மெய்நிகர் காட்சிகள், ஒளி–ஒலிநிகழ் படங்கள், ஆவணப் படங்கள், உயிரூட்டுக்காட்சிகள், மாதிரி வடிவங்கள் என இன்றைய நவீன முறைகள் அனைத்தின் மூலமாக பழந்தமிழர் வரலாற்றுப் பெருமை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

‘ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்’ என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார் நிதித்துறை அமைச்சர், தொல்லியல் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையின் அமைச்சராக இருந்து ஆதிச்சநல்லூரைப் பார்வையிட்ட அவர், இன்று ஆதிச்சநல்லூரையும் சிவகளையையும், கொற்கையையும் துலுக்கர்பட்டியையும் ஒரே இடத்தில் இன்று உருவாக்கிவிட்டார்.

பல தலைமுறைகள் கடந்தும் நம் வரலாற்றைச் சொல்லும் இந்த பொருநை அருங்காட்சியகத்தை அமைத்ததில் நிதித்துறை செயலாளர், தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரன் பங்களிப்பு மிகப்பெரியது. முதலமைச்சரின் எண்ணம், சீராக நிறைவேற இவர்கள் நாளும் உழைத்துள்ளார்கள்.

வற்றாத ஜீவ நதி என்று நதிகளைச் சொல்வார்கள். தமிழர் தம் பெருமையும் அத்தகையது தான். அத்தகைய பெருமைகளை ஆய்வுகளின் மூலம் தமிழ்நாடு அரசு மெய்ப்பித்து வருகிறது.

தமிழ்நாட்டுக் குறியீடுகளையும் சிந்துவெளியில் கிடைக்கப் பெற்ற முத்திரைகளையும், குறியீடுகளையும் ஒப்பிட்டு இரண்டிற்கும் இடையிலான ஒற்றுமைகளை அறிந்துகொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்’என்ற தலைப்பிலான நூலாக வெளியிடப்பட்டது.

இந்த நூலில், சிந்துவெளி முத்திரைகளிலுள்ள குறியீடுகளுக்கும் தமிழ் நாட்டுக் குறியீடுகளுக்கும் இடையே 60 சதவீதமும், சிந்து வெளிப் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட பானை களிலுள்ள குறியீடுகளுக்கும் தமிழ்நாட்டுக் குறியீடுகளுக்கும் 90 சதவீதமும் வடிவவியல் ஒற்றுமை உள்ளதை இந்த ஆய்வு நூல் வெளிப்படுத்தியுள்ளது. இது தான் மிகமிக முக்கியமானது ஆகும்.

‘இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு’ என்று முதலமைச்சர் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு இவைதான் எடுத்துக் காட்டுகள்.

banner

Related Stories

Related Stories