
முரசொலை தலையங்கம் (22-11-2025)
இதற்கு மேல் யார் சொல்ல வேண்டும்?
“சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” என்று உச்சந்தலையில் ஆளுநர் ரவியை கொட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்கு மேல் அவருக்கு அறிவுரையை யார் சொல்ல வேண்டும்.
‘“ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது” என்று கிண்டி ரவிக்கு கிடுக்குப் பிடி போட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதற்கு மேல் அவருக்கு உறைக்கும் அளவுக்கு யார் சொல்ல முடியும்?
நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர் ஆர்.என். ரவி. தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியின் மூலமாக கெஞ்சிக் கூத்தாடி தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ஆனவர் ரவி. இங்கு இருந்த கெடுமதியானவர்கள் கையில் சிக்கினார். வந்தவர் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தார்.
இறுதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 18 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.
‘‘அரசமைப்புச் சட்டம் 142 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் தரப்பட்டவையாக நாங்கள் அறிவிக்கிறோம். நீண்ட காலமாக மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக நேர்மையற்ற செயல் செய்துள்ளார். இது போன்று பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. அன்றைய தினம், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். எனவே, மசோதாக்கள் மறுபரிசீலனைக்கு எப்போது தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன” என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பார்த்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று தீர்ப்பு அளித்தது.
மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் அனுப்பினார்.
இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு நேற்றைய தினம் மிக முக்கியமான சில கருத்துகளை அளித்துள்ளது.

•ஆளுநர் காரணத்தைத் தெரிவிக்காமல் நீண்ட காலம் மசோதாவை நிறுத்திவைப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
•மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம், சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம். இந்த மூன்றில் ஒன்றைத்தான் ஆளுநர் தேர்ந்தெடுக்க முடியுமே தவிர, ஒன்றிய அரசு கூறுவதுபோல் நான்- காவதாக எந்த வாய்ப்பும் இல்லை.
•அரசியல் சாசனப்பிரிவு 200, 281-ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவைக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்.
•மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலவரம்பின்றி கிடப்பில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அதன் அமைச்சரவையுமே முதன்மையான இடத்தில் இருக்கிறது. மசோதாக்கள் விவகாரத்தில் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை ஆளுநர்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆளுநர் செயல்ப- டாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும்.
•அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.
- இப்படி நெத்தியடியாகச் சொல்லி இருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்ன கருத்துகள் முக்கியமானது.
“ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப் படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது. இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, மாண்புமிகு ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆளுநர் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது” என்று முதலமைச்சர் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். இதனை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தந்தது.
முதலமைச்சரின் உரிமைக் குரலை மிகச் சரியானது என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முதலமைச்சர் சொன்னபோதெல்லாம் அது அரசியல் என்று ஒதுக்கி வந்த ஆளுநர், உச்சநீதிமன்றத்துக்கு என்ன சொல்லப் போகிறார்? இப்படி ஒரு பதவியில் வேறு யாராவது இருந்தால், அவர்கள் இந்த மாதிரியான தீர்ப்பைப் பார்த்தால் அடுத்த நொடியே பதவி விலகி இருப்பார்கள். ஆனால் ஆர் .என்.ரவியிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாதே!






