முரசொலி தலையங்கம்

100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் திராவிட மாடல் அரசு : வென்று காட்டும் உதயநிதி!

ஆண்டுதோறும் 100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் இலக்கை நோக்கி துணை முதலமைச்சர் உதயநிதி சென்று கொண்டிருக்கிறார்.

100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் திராவிட மாடல் அரசு : வென்று காட்டும் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (14-11-2025)

தகுதிப்படுத்தும் அரசு!

குடிமைப் பணித் தேர்வுக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களும் இதற்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆர்வலர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.75,000 அரசு வழங்கி வருகிறது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, 25,000 ஊக்கத் தொகையாக அரசு வழங்கி வருகிறது. அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயிலும் முதன்மைத் தேர்வுப் பயிற்சி மாணவர்களுக்கு ரூ.9,000 அரசு வழங்கி வருகிறது.

டெல்லியில் நடைபெறும் குடிமைப்பணி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு இதுவரை 5 ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வந்தது. அதனை 50 ஆயிரம் ஆக்கி உள்ளது அரசு. மதுரை, கோவையில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பயிற்சிக்காலம் இதுவரை 6 மாதமாக இருந்தது. இது 9 மாதம் என உயர்த்தப்பட்டது. அவர்களுக்கு உணவுக்காகச் செலவிடப்படும் மாதாந்திரத் தொகை ரூ.3000 லிருந்து ரூ.4500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில் 4000 சதுர அடி பரப்பில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட படிப்பகம் ‘நான் முதல்வன்’ திட்டம் வாயிலாகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் முறையாகச் செய்து கொடுத்ததால்தான் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் வென்று வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நிறையப் பேர் வென்றார்கள். இந்த ஆண்டு அதனையும் தாண்டி வருகிறார்கள். இப்படி வெற்றி பெறுபவர்களில் பலரும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்தவர்களாக இருக்கிறார்கள். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.

இந்தியா முழுவதும் குடிமைப் பணிகளுக்காக 979 காலிப் பணியிடங்கள் உள்ளது. இத்தேர்வு எழுதியவர்களில் 2, 736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் 155 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி அடைந்திருந்தார்கள். இதை ஒப்பிட்டால் கடந்த ஆண்டை விட தேர்ச்சி பெற்றோர் 13.9 விழுக்காடு அதிகம் ஆகும்.

100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் திராவிட மாடல் அரசு : வென்று காட்டும் உதயநிதி!

இந்த 155 பேரில் 87 பேர், தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்து படித்தவர்கள், பயன்பெற்றவர்கள். அதனால்தான், தகுதிப்படுத்தும் அரசு என்கிறோம்.

கடந்த ஆண்டு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் 48 பேர் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த முறை 37 பேர் கூடுதலாகத் தேர்ச்சியடைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 35.29 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு 54.84 விழுக்காடாக உயர்ந்து விட்டது.

இது குறித்து பாராட்டுத் தெரிவித்திருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “2025 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் (UPSC Mains 2025) தமிழ்நாடு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இந்தச் சாதனை படைத்த அனைத்து தேர்வர்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உதவித்தொகை மற்றும் நிதி உதவியால் பயனடைந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். 87 பேர், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் (AICSCC) பயிற்சி பெற்றவர்கள் ஆவர். ‘இந்த குறிப்பிடத்தக்க வெற்றிகள், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து 100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்குவதற்கான இலக்கை நோக்கி மாநிலம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருகிறது” என்று சொல்லி இருக்கிறார்.

இந்த ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 659 பேருக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெற ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. இவர்களில் 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதுதான் இத்திட்டத்தின் வெற்றியாகும்.

சென்னை செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் ஒரு பயிற்சி மையம் 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஆண்டுதோறும் 100 குடிமைப் பணி அதிகாரிகளை உருவாக்கும் இலக்கை நோக்கி துணை முதலமைச்சர் உதயநிதி சென்று கொண்டிருக்கிறார். இலக்கையும் தாண்டி வென்று காட்டுவார் என்பது உறுதி.

banner

Related Stories

Related Stories