
முரசொலி தலையங்கம் (30-10-2025)
பா.ஜ.கவின் குடும்ப அரசியல்!
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடும்ப அரசியலுக்கு எதிராக மார் தட்டி இருக்கிறார். ஒரு குடும்பமே நடத்தி வரும் அரசியல் கட்சிகள் நாட்டுக்குத் தேவையில்லை என்பதை படிப்படியாக நிரூபித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்.
“ஒரு குடும்பத்தினர் மட்டுமே நடத்தி வரும் அரசியல் கட்சிகள் நாட்டுக்குத் தேவை இல்லை என்பதை படிப்படியாக நிரூபித்து வருகிறோம். விரைவில் நாட்டில் குடும்ப அரசியல் கட்சிகளே இல்லாத நிலை ஏற்படும்" என்று சொல்லி புலம்பி இருக்கிறார் அமித்ஷா.
குடும்ப அரசியலைப் பற்றி பேசுவதற்கான தகுதி அமித்ஷாவுக்கோ, பா.ஜ.க.வுக்கோ இருக்கிறதா? இல்லை!
சில நாட்களுக்கு முன்னால் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கை ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக பா.ஜ.க.வில்தான் 387 சட்டப்பேரவை, சட்ட மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரிசு உறுப்பினர்களாக பதவியில் உள்ளனர் என்று தனது ஆய்வில் தெரியவந்துள்ளதாகச் சொல்கிறது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்.
நாடு முழுதும் வாரிசு எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆய்வை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் 285 பேர் உள்ளனர். சமாஜ்வாதி கட்சியில் 55 பேரும், பா.ஜ.க. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் 51 பேரும் வாரிசு உறுப்பினர்களாக உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 28 பேர் வாரிசுகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற மாநில கட்சிகளில் 30 பேருக்கும் குறைவாக மட்டுமே உள்ளனர் என்பதும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
ஒன்றிய அமைச்சரவையில் வாரிசுகள் 6 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர்.
அதிகபட்சமாக பா.ஜ.க.வில் 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு பதவியில் உள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் 73 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாரிசுகளாக உள்ளனர்.
நாடுமுழுதும் 5,294 பேர் சட்டப்பேரவை, சட்ட மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 1,174 பேர் வாரிசுகள். இதில் 854 பேர் எம்.எல்.ஏ.க்கள், 80 பேர் மேலவை உறுப்பினர்கள், 58 பேர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள், 182 பேர் மக்களவை உறுப்பினர்கள்.
இந்த எண்ணிக்கையிலும் பா.ஜ.க.வினரே அதிகம். நாட்டிலேயே அதிகபட்சமாக பா.ஜ.க. வில்தான் 387 சட்டப்பேரவை, சட்ட மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரிசு உறுப்பினர்களாக பதவியில் உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் ‘குடும்ப அரசியலில்' பா.ஜ.க.தான் முதல் இடத்தில் இருக்கிறது.
முன்பு ஒரு முறை பா.ஜ.க.வின் குடும்ப அரசியல் குறித்து ‘முரசொலி'யில் எழுதி இருக்கி- றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழில் ‘பா.ஜ.க.வின் வாரிசு அரசியல்' என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் பா.ஜ.க. தலைவர்களில் யாரது வாரிசுகள் எல்லாம் அரசியலில் இருக்கிறார்கள் என்று இருக்கிறது.
•வேத்பிரகாஷ் கோயல், மத்திய அமைச்சராக இருந்தார். அவரது மனைவி சந்திரகாந்த் கோயல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களது மகன்தான் இன்றைய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆவார்!
•தேபேந்திர பிரதான், முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்தார். இவரது மகன்தான் இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான்.
•முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்ய சிந்தியா, இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.
•கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எஸ். ஆர்.பொம்மை அவர்களின் மகன்தான் இன்று கர்நாடக முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை அவர்கள்.
•இமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் பிரேம்குமார் துமால். இவரது மகனான அனுராக் தாகூர், இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.
•கைலாஷ் விஜய்வர்க்கியா என்பவர் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மகன்தான் இன்று மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆகாஷ் விஜய்வர்க்கியா.
•மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வீரேந்திர சக்லேச்சாவின் மகன் ஓம் பிரகாஷ் சக்லேச்சா இன்று மத்தியப் பிரதேசத்தின் அமைச்சராக இருக்கிறார்.
•ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
•கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி. ஒய். ராகவேந்திரா, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

•மேனகா காந்தி மகன் வருண் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
•முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன்தான் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
•முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
•உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண்சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
•ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மகன் பங்கஜ் சிங், உ.பி. மாநில எம். எல்.ஏ.வாக இருக்கிறார்.
•முன்னாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ப்ரீத்தம் முண்டே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கி றார்.
•முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.பி. தாகூரின் மகன் விவேக் தாகூர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.
இதுதான் பா.ஜ.க. வின் வாரிசு அரசியல் ஆகும். "இவர்களை எதிர்க்கத்தான் குடும்ப அரசியல் என்று பிரதமர் பேசுகிறாரா? உள்துறை அமைச்சர் சொல்கிறாரா?” என்று முன்பு கேட்டிருந்தோம். அதனைத்தான் இப்போதும் கேட்க வேண்டியதாக உள்ளது.
அதானி என்ற ஒரு குடும்பத்துக்காக மட்டும் நடத்தப்படும் கட்சிதான் பா.ஜ.க. என்பதை பா.ஜ.க. எம்.பி.க்களே அறிவார்கள்.
1999 முதல் 31 பா.ஜ.க. தலைவர்களின் வாரிசுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருப்பதாக ஹாத்வே பல்கலைக்கழக ஆய்வு கூறியுள்ளது. முந்தைய மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர்கள் வாரிசுகள் 28 பேருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. சீட் வழங்கியது. இதெல்லாம் அமித்ஷாவுக்குத் தெரியாதா?
உள்துறை அமைச்சருக்கு உள்நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாததைப் போலவே உள்கட்சியில் நடக்கும் குடும்ப அரசியலைத் தெரியாமல் இருக்கிறார்.








