முரசொலி தலையங்கம்

S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபோ'வா - முரசொலி தாக்கு!

பா.ஜ.க. எதைச் செய்தாலும் அது தமிழ்நாட்டை பழிவாங்குவதாகத்தான் இருக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபோ'வா - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் நேற்று (அக்டோபர் 27) பேட்டி அளித்துள்ளார்.

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (Special Intensive Revision – SIR) இரண்டாம் கட்டம் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், குஜராத், மத்திய பிரதேசம், லட்- சத் தீவு, புதுச்சேரி உட்பட மொத்தம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட ‘SIR' பணி மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்திருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்.

தேர்தல் ஆணையம் தனது சதிச் செயலை அவசர அவசரமாக அரங்கேற்றத் தொடங்கிவிட்டது என்பதையே தேர்தல் ஆணையரின் அவசரப் பேட்டி உணர்த்துகிறது.

நேர்மையான தேர்தலை நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கான உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில்தான் அதனைச் செய்ய வேண்டும். செய்ய முடியும். மாறாக,தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே. அதனைத்தான் பீகாரில் செய்தார்கள். மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள்.

"வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, அதில் உள்ள இரட்டைப் பதிவுகளை நீக்குதல், பிழைகளைச் சரிசெய்தல் மற்றும் தகுதியற்றவர்களை நீக்குதல் ஆகியவற்றை இந்தத் திருத்தப் பணி நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதால், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் இந்த சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) மேற்கொள்வது அவசியம்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நல்ல பிள்ளையைப் போலச் சொல்லி இருக்கிறார். அவரே பீகார் கோளாறுகள் குறித்து எந்த முறையான விளக்கத்தையும் இதுவரை சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. விளக்கம் அளிக்கவில்லை.

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமானது 1951ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002--2004 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது எல்லாம் இது- போன்ற சீர்திருத்தம் பல மாதங்கள் நடக்கும். இப்போது நடத்துவது போல தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடத்துவது போல நடத்தப்பட்டது இல்லை. 21 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என்பதற்காக அதனை 2 மாதங்களுக்குள் நடத்துவது சரியா? 21 ஆண்டுகளாக நடத்தாதது தேர்தல் ஆணையத்தின் தவறா? வாக்காளர்களின் தவறா?

12 மாநிலங்களில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற் கான கணக்கெடுப்பு தொடங்கும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உடனடியாக பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும். சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7--ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இதனைச் செய்ய முடியுமா? அரசு ஊழியர்களை 'சிட்டி ரோபோ'வாக நினைக்கிறதா தேர்தல் ஆணையம்?

பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை சிரமங்களுக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு எப்படி சாத்தியம் ஆகும்? இதைப் பற்றி எல்லாம் மாநில அரசிடம் கேட்டதா தேர்தல் ஆணையம்? இல்லை.

S.I.R - மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க : தேர்தல் ஆணையம் என்ன 'சிட்டி ரோபோ'வா - முரசொலி தாக்கு!

தேர்தல் ஆணையர் பேட்டி அளித்த அதே நாளில் சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டினார்கள். SIR என்ற பெயரில் தமிழ்நாட்டுமக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடதமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். வருகிற நவம்பர் - 2 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளகூட்டத்தில் பங்கேற்றிட ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’த்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

“நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற பணிகளை நடத்துவது என்பதுமிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இதுபோன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். நடைமுறை சாத்தியம் இல்லாத காலத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. புகைப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணைய தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வதுஎல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?”என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை எழுப்பும் கேள்விக்கு தேர்தல் ஆணையர் பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித்திட்டம் இந்த வாக்காளர் சிறப்புச் சீர்திருத்த திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அவசரமாகச் செய்கிறார்கள்.

நேரடியாக மோத முடியாத பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தை முகமூடியாகப் பயன்படுத்தி மோத வருகிறது. பா.ஜ.க. எதைச் செய்தாலும் அது தமிழ்நாட்டை பழிவாங்குவதாகத்தான் இருக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். சதிக்கு மேல் சதி செய்யுங்கள். சரிவுக்கு மேல் சரிவைச் சந்தியுங்கள்.

    banner

    Related Stories

    Related Stories