முதலமைச்சர் சொன்னதைப் போல, ‘தி.மு.க.வுக்கு ரவி நன்மைதான் செய்து கொண்டிருக்கிறார்’. தி.மு.க.வுக்கான பரப்புரையை வேகப்படுத்தியதில் பெரும் பங்கு ரவிக்கே உண்டு. அதனால்தான் அவரை தமிழ்நாட்டு ஆளுநர் பதவியில் இருந்து எடுத்துவிடாதீர்கள் என்று சொல்லிவருகிறோம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் ரவியின் இரண்டு சாதனைகள் என்ற தலைப்பில் முரசொலி தீட்டியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
கிண்டியில் உட்கார்ந்துகொண்டு ஆளுநர் ரவி இரண்டு சாதனைகளைச் செய்து வருகிறார். ஒன்று, தமிழ்நாட்டில் இனமான, தன்மான நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்கிறார். இரண்டு, பா.ஜ.க. டெபாசிட் வாங்கும் ஒன்றிரண்டு தொகுதிகளிலும் டெபாசிட்டை காலி செய்து வருகிறார். அவர் ஆளுநராக வந்த பிறகு தமிழ்நாடு அடைந்த நன்மைகள் இவை.
ரவியை ஆளுநராக வைத்துக் கொண்டு, ‘தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுக்கிறோம்’ என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல, ‘தி.மு.க.வுக்கு ரவி நன்மைதான் செய்து கொண்டிருக்கிறார்’. தி.மு.க.வுக்கான பரப்புரையை வேகப்படுத்தியதில் பெரும் பங்கு ரவிக்கே உண்டு.
அதனால்தான் அவரை தமிழ்நாட்டு ஆளுநர் பதவியில் இருந்து எடுத்துவிடாதீர்கள் என்று சொல்லிவருகிறோம். எடுத்தாலும், பா.ஜ.க. அலுவலகத்துக்குப் பக்கத்தில் அவரைக் குடியேறி வைத்துக் கொள்வதும் நல்ல நகர்வாக அமையும்.
விரக்தியின் விளிம்பில் துவண்டுகிடந்த சனாதனக் கும்பல் கையில் சிக்கியவர்தான் ஆர்.என்.ரவி. நாகாலந்தில் இருந்து விரட்டப்பட்ட அவர், இங்கே வந்தபிறகாவது திருந்தி இருக்க வேண்டும். ஆனால் நாகாலாந்து மக்கள்மீதான கோபத்தை தமிழ்நாட்டு மக்கள்மீது காட்டினார். ஆளுநராக வந்தவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இதுவரை ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் ஒன்றுமில்லை. ‘தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்’ என்பது போல வளர்ச்சிக்குத் துணை செய்யவில்லை. அரசு செய்ய நினைத்த வளர்ச்சித் திட்டங்களைச் செய்ய விடவும் இல்லை.
‘ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று பல முறை உச்சநீதிமன்றம் சொன்னபிறகும், அழிச்சாட்டியங்கள் செய்வதும், அட்டூழியங்களை நிகழ்த்துவதும் சகிக்க முடியாததாக இருக்கிறது.
“சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பி வைத்தது சட்டவிரோதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. பொதுவான விதிப்படியும், மாநில அரசின் ஆலோசனையின் படியும் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும்”என்று தெளிவாக உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் அதனை மதிக்காமல் செயல்படும் ரவியை என்ன செய்வது? உச்சநீதிமன்றத்தால் தான் அவரைக் கேள்வி கேட்க முடியும். உச்சநீதிமன்றம்தான் அவரை திருத்த வேண்டும்.
2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கும் மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் பல்கலைக் கழக வேந்தராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருப்பார்கள். இதற்காக சென்னை மாதவரம் அருகே 20 ஏக்கர் நிலத்தையும் அரசு ஒதுக்கியது. இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி தரவில்லை. விளக்கம் கேட்கிறேன் என்ற பெயரால் குழப்பக் கேள்விகளைக் கேட்டார் ரவி. அதன்பிறகும் அனுமதி தரவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.
நேற்றைய தினம், சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநர் கேட்கும் கேள்விகளை அபத்தங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
“ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது. அத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது இயலாது. இதற்காக அவர் பயன்படுத்திய சொற்கள் இந்தப் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய கருத்து என்பதால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, மாண்புமிகு ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆளுநர் அவர்கள் அனுப்பியுள்ளார் செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துக்கள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது”என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். இதனை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தந்துள்ளது.
இதெல்லாம் ரவிக்கு உறைக்குமா எனத் தெரியவில்லை. ‘ஆஹா எனக்கு எதிராகத் தீர்மானம் போடுகிறார்கள்’ என்று தன்னை பெருமையாக நினைத்து மகிழ்ச்சியில்கூட அவர் திளைக்கலாம். தனிப்பட்ட ரவி நமக்கு முக்கியமல்ல. அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் அவர், இதற்குத் தலைகுனிய வேண்டும். ஆனால் அவர் அந்த ரகமாகத் தெரியவில்லை."