முரசொலி தலையங்கம்

வரலாற்றைத் திரித்து பேசும் ராம்நாத் கோவிந்த் : காந்தியார் பேசியது என்ன?

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை புகழும் தேவைக்காக அண்ணல் காந்தியார் வரலாற்றைத் திரித்துப் பேசி இருக்கிறார்

வரலாற்றைத் திரித்து பேசும் ராம்நாத் கோவிந்த்  : காந்தியார் பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (08-10-2025)

காந்தியார் பேசியது என்ன?

இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை புகழும் தேவைக்காக அண்ணல் காந்தியார் வரலாற்றைத் திரித்துப் பேசி இருக்கிறார். அவரது உரை தவறானது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கது ஆகும். காந்தியாருக்கு ஏற்படுத்தும் அவமானம் ஆகும்.

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற சமூக சமத்துவம், ஒற்றுமைக்காக ஆர். எஸ்.எஸ். திகழ்கிறது. ஏழ்மையான பகுதிகளில் கல்வி, சுகாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து பல சமூக சேவைகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

சமூக நல்லிணக்கம், சமத்துவம், சாதிய பாகுபாடில்லாத செயல்பாடுகள் மகாத்மா காந்தியை பெரிதும் ஈர்த்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஒழுக்கம், எளிமை, தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகள் அவரை கவர்ந்தன. இது தொடர்பாக, ‘மகாத்மா காந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்' என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று பேசி இருக்கிறார்.

1947 செப்டம்பர் 16 அன்று டெல்லி பங்கி காலனியில் (நகர சுத்தி தொழிலாளர் குடியிருப்பில்) ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களிடையே பேசுகையில் காந்தியார் பாராட்டிப் பேசியதாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் சொல்கிறார்கள். காந்தியாரின் முழு உரையை ராம்நாத் அவர்கள் படிக்க வேண்டும்.

1947 செப்டம்பர் 16 ஆம் நாள், அதாவது இந்தியா சுதந்திரமடைந்து சரியாக ஒரு மாதம் கழித்து- பங்கி காலனியில் கூடியிருந்த 500 ராஷ்டிரிய சேவா சங்க உறுப்பினர்கள் மத்தியில் காந்தி பேசிய போது என்ன சொன்னார் தெரியுமா?

“உங்கள் சங்கத்தை ஸ்தாபித்தவரான ஸ்ரீஹெட்கேவார் உயிருடனிருந்த போது பல ஆண்டுகளுக்கு முன்னால், வார்தாவுக்கு அருகிலிருந்து ராஷ்டிரிய சேவா சங்க முகாமுக்கு நான் வந்திருக்கிறேன். அவர்களிட மிருந்த கட்டுப்பாடு, தீண்டாமையை அடியோடு அவர்கள் ஒழித்திருந்தது, அவர்களுடைய கண்டிப்பான எளிமை ஆகியவை என்னை அதிகமாகக் கவர்ந்தன. அதன்பிறகு சங்கம் வளர்ந்திருக்கிறது. சேவை, தன்னலத் தியாகம் ஆகியவைகளைக் கொண்ட எந்த நிறுவனமும் பலமுள்ளதாகவளர்ந்தே தீரும் என்பதை நான் நன்றாக அறிவேன்.” என்று சொல்லி விட்டு ...

“ஆனால் அந்த நிறுவனம் உண்மையிலேயே பலனுள்ளதாக இருப்பதற்கு, தன்னலத் தியாகத்துடன் நோக்கத்தின் தூய்மையும், உண்மையான அறிவும் கலந்திருக்க வேண்டியது அவசியம். இந்த இரண்டும் இல்லாத தியாகம், சமூகத்தின் நாசமாகவே முடிகிறது என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆரம்பத்தில் பாடப்பட்ட பிரார்த்தனை கீதம், இந்தியத் தாயையும், ஹிந்து கலாச்சாரத்தையும், ஹிந்து மதத்தையும் போற்றுகிறது.

நான் சனாதனி ஹிந்து என்று கூறிக் கொள்ளுகிறேன். எனவே துரதிஷ்ட வசமாக இன்று இருந்து வருவதைப் போன்று, இஸ்லாமிடமோ அதைப் பின்பற்றுகிறவர்களிடமோ இந்து மதத்திற்கு எந்தச் சச்சரவும் இருப்பதற்கில்லை. தீண்டாமை என்ற விஷம் நம் மதத்தில் புகுந்துவிட்ட போதே, அதற்குச்சரிவும் ஆரம்பமாகிவிட்டது. தீண்டாமை உயிருடன் இருக்குமானால், நம் சமயம் செத்துத்தான் ஆக வேண்டும்.

அதே போல, இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று இந்துக்கள் நினைப்பதாயிருந்தால், இந்துக்களல்லாதவர்கள், முக்கியமாக முஸ்லிம்கள் இங்கே வாழ விரும்பினால் இந்துக்களின் அடிமைகளாகத் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுகிறார்கள்.

இதே போன்று பாகிஸ்தானில் முஸ்லிம்களுக்கு மாத்திரமே நியாயமான உரிமை உண்டு என்று பாகிஸ்தான் நம்பினால், முஸ்லிம் அல்லாதவர்கள் தங்களுக்குத் தாழ்ந்தவர்களாகவும் தங்கள் அடிமைகளாகவுமே வாழ முடியும் என்று நம்பி- னால், இந்தியாவில் இஸ்லாமுக்கு சாவு மணி அடித்துவிட்ட தாகவே ஆகும்.

இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது என்பது துரதிஷ்டமான உண்மை. இதில் ஒரு பகுதி வெறி பிடித்துப் போய் ஆபாசமான செய்கைகளைச் செய்து வருமானால், அதனால் இன்னுமொரு பகுதியும் அதே போலச் செய்ய வேண்டுமா? தீமை செய்தவர்களுக்குத் திருப்பித் தீமையையே செய்வதில் லாபம் ஏதும் இல்லை. தீமை செய்தாருக்கும் நன்மை செய்யுமாறு மதம் நமக்குப் போதிக்கிறது.

வரலாற்றைத் திரித்து பேசும் ராம்நாத் கோவிந்த்  : காந்தியார் பேசியது என்ன?

ஹிந்துக்களில் ஏராளமானவர்கள், ஒரு குறிப்பிட்ட வழியில் தான் தாங்கள் செல்ல வேண்டும் என்று விரும்புவார்களானால், அந்த வழி தவறானதாகவே இருந்தாலும், அவர்களை யாரும் தடுத்துவிட முடியாது. ஆனால் அவர்கள்போகும் வழி தவறானது என்று சொல்லவும், அவர்களை எச்சரிக்கை செய்யவும்ஒரு தனிநபருக்கு உரிமை உண்டு. இதையே நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நான் முஸ்லிம்களின் நண்பன் என்றும், ஹிந்துக்களுக்கும் சீக்கியர் களுக்கும் விரோதி என்றும் என்னைச் சொல்லுகிறார்கள். பார்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் நண்பனாக இருப்பதைப் போன்றே முஸ்லிம்களுக்கும் நான் நண்பன் என்பது உண்மை. இதில் நான் என் பன்னிரண்டாவது வயதில் இருந்ததைப் போன்றே இன்றும் இருக்கிறேன். ஆனால் என்னை ஹிந்துக் களுக்கும் சீக்கியர்களுக்கும் விரோதி என்று சொல்கிறவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. ஹிந்துக்களுக்கும் சீக்கியருக்கும் மாத்திரமல்ல, யாருக்குமே எதிரியாக நான் இருக்க முடியாது.

சங்கம் ஒழுங்கான அமைப்புடையது. கட்டுப்பாட்டோடு கூடிய நிறுவனம். அதன் பலத்தை இந்தியாவின் நன்மைக்காகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ உபயோகிக்க முடியும். சங்கத்தின் மீது கூறப்படும் புகார்களில் ஏதாவது உண்- மையும் உண்டா என்பது எனக்குத் தெரியாது. குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை ஒரே மாதிரியான தனது நடவடிக்கைகளின் மூலம் நிரூபிக்க வேண்டியது சங்கத்தின் பொறுப்பு.”

- இதுதான் காந்தியாரின் முழு உரையாகும். இது ‘அரிஜன்' இதழில் 28.9.1947 அன்று வெளியாகி உள்ளது. காந்தி தொகுப்பு நூல் 9 இல் 689 ஆம் பக்கம் முதல் 692 ஆம் பக்கம் வரை இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இதில் காந்தி பாராட்டி இருக்கிறாரா? புத்திமதி சொல்லி இருக்கிறாரா? இந்து இசுலாம் வேறுபாடு பார்க்காதீர்கள் என்பதுதானே அவரது உரையின் உள்ளடக்கம். இதனை ஆர்.எஸ்.எஸ். இயக்கம்ஏற்றுக் கொள்கிறதா? இல்லை.

இதற்கு நான்கு மாதம் கழித்து அண்ணல் கொலை செய்யப்பட்டார்!

banner

Related Stories

Related Stories