முரசொலி தலையங்கம் (26-09-2025)
எதற்காக இத்தனை துள்ளல்?
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது போலவும், நேற்றுதான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது போலவும், காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அநியாய வரிகளை, பாசமிகு பா.ஜ.க. ஆட்சி ரத்து செய்ததைப் போலவும், துள்ளிக் குதிக்கும் காட்சிகள் அருவெறுப்பாக இருக்கின்றன.
அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. குறைப்பு மாபெரும் சலுகை என்று பா.ஜ.க. நினைக்குமானால், அந்தச் சலுகையை எட்டாண்டுகளுக்கு முன்னால் பறித்த கொடுமைக்கும் பொறுப்பேற்க வேண்டியதும் பா.ஜ.க.தான். எட்டாண்டுகள் ஒருவரை சிறையில் வைத்துவிட்டு, விடுவித்த அன்று ‘விடுதலை செய்தவன் நான்தான்’ என்று விழாக் கொண்டாடும் பீற்றலைத்தான் இப்போது பா.ஜ.க. செய்து கொண்டு இருக்கிறது.
பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சொல்லும் கணக்கைப் பார்த்து சாதாரண மக்கள் மயக்கம் அடைந்துவிட்டார்கள். இன்னும் எழவில்லை.
‘பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம் இன்று தொடக்கம்’ என்று தலைப்புச் செய்தி போட்டு மகிழ்ந்துள்ளது ‘தினத்தந்தி’. பிரதமர் சொன்னதாக அந்தத் தலைப்பில் சொல்லப் பட்டுள்ளது என்ன தெரியுமா? ‘வருமான வரி விலக்கு, ஜி.எஸ்.டி. குறைப்பால் மக்களுக்கு இரண்டரை லட்சம் கோடி கிடைக்கும்’ என்கிறது. இரண்டரை லட்சம் கோடி என்றால் எத்தனை பூஜ்யம் என்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது வீட்டு வாசலில் எழுதிப் பார்த்துக் கொள்ளலாம்.
இதுதான் மக்களுக்குக் கொடுத்துள்ள தீபாவளியாம். நவராத்திரியாம். சேமிப்புத் திருவிழாவாம். விடுதலையாம். சுதந்திரமாம். இந்திய விடுதலையை பிரிட்டிஷாரே ஆகஸ்ட் 15 கொண்டாடுவதைப் போல அல்லவா இருக்கிறது!
இப்போது வழங்கப்பட்ட சலுகைகளால் இந்திய நாட்டு மக்கள் 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என்று கணக்குப் போட்டுள்ளார் பிரதமர். 148 கோடி மக்களுக்கும் தங்களது வங்கிக் கணக்கில் மோடி எவ்வளவு போடுவார் என்று காத்திருக்கிறார்கள். ஏற்கனவே 15 லட்சம் வந்துவிட்டது. அத்தோடு சேர்த்து இதனையும் சேமித்து வைத்துக் கொள்வார்கள்.
2017ஆம் ஆண்டு முதல் மக்களது பணத்தை எவ்வளவு சுரண்டினார்கள் என்பது இப்போது சொல்லப்படவில்லை. சொன்னால் அந்தப் பணத்தை திருப்பித் தர வேண்டும். வட்டி போட்டு திருப்பித் தரத் தயாராக இருக்கிறார்களா? இருப்பார்களா?
“பா.ஜ.க. அரசாங்கம் ஒன்பது தனித்தனி அடுக்குகளைக் கொண்ட ‘கப்பர் சிங்’ வரியைப் போட்டது. கடந்த 8 ஆண்டுகளில் 55 லட்சம் கோடிக்கு மேல் வரியை வசூலித்துள்ளது. இப்போது 2.5 லட்சம் கோடி சேமிப்பைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். பெரிய காயங்களை ஏற்படுத்திவிட்டு சின்ன பேண்ட் எய்டு போடுகிறீர்களா?” என்று கேட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே.
55 லட்சம் கோடி எங்கே இருக்கிறது? 2.5 லட்சம் கோடி எங்கே இருக்கிறது? இதில் என்ன கொடுமை என்றால், 2017 ஆம் ஆண்டு அநியாய வரி போட்டார் அல்லவா மோடி. அதையும், ‘புதிய வரலாறு தொடங்கப்பட்டது’ என்றுதான் இப்போதும் மோடி சொல்லி இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆற்றிய உரையிலும், “2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் புதிய வரலாறு தொடங்கப்பட்டது. இது ஒரே நாடு – ஒரே வரி என்ற கனவை நனவாக்கியது. சிக்கலான பல்வேறு வரிகளால் தொழில் துறையினர், நுகர்வோர் எதிர்கொண்ட இடர்ப்பாடுகளுக்குத் தீர்வு அளித்தது” என்று சொல்லி இருக்கிறார். இப்போது குறைக்கப்பட்டதையும், “நாட்டின் வளர்ச்சி வேகம் பெறும். தொழில் புரிவதை எளிதாக்கி முதலீடுகளை மேலும் ஈர்க்கும்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.
அது எப்படி, வரி போட்டாலும் நாடு வளரும்? வரியைக் குறைத்தாலும் நாடு வளரும்? செய்வது மோடியாக இருந்தால், அப்படித்தான். எதையும் செய்து விட்டு, ‘நாடு வளரும்’ என்று சொல்லி விட்டால் போதும், நாடு வளர்ந்து விடும். அத்தகைய மந்திர சக்தியை உதட்டில் வைத்துள்ளார் அவர்.
“ஜி.எஸ்.டி. சலுகைகளை நுகர்வோருக்கு முழுமையாக வழங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களைக் கண்காணிக்கிறோம்” என்று ஒன்றிய நுகர்வோர் விவகாரத் துறைச் செயலாளர் நிதிகரே எச்சரிக்கை செய்துள்ளார். இந்தச் சூழ்நிலை எதனால் வருகிறது? இவர்கள் வழங்கியதாகச் சொல்லும் சலுகை குறைவு. அந்தச் சலுகையும் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதுதானே இந்த எச்சரிக்கையின் பின்னணியாக இருக்க முடியும்?
மாநிலங்களின் நிதி உரிமையை, வரி உரிமையைப் பறித்தது தான் ஜி.எஸ்.டி.யின் முதல் மோசடி. அதனை முதலில் சரி செய்யுங்கள். மாநிலங்களுக்கு இழப்பீடு தாருங்கள். அதை விட்டு விட்டு, ‘தற்சார்பு இந்தியா, சுதேசி பிரச்சாரத்துக்கு மாநிலங்கள் உறுதியுடன் ஆதரவளிக்க வேண்டும்’ என்று சொல்வது எல்லாம் மகா நடிப்பு ஆகும். மாநிலங்கள் தற்சார்புடன் இயங்க வேண்டாமா? மாநிலங்கள், ஒன்றியத்திடம் கையேந்தி நிற்க வேண்டுமா? மற்ற மாநிலங்களை எதிர்பார்த்துக் கிடக்க வேண்டுமா?
அரிசிக்கு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. போட்டதை விடக் கொடுமை வேண்டுமா? அதனை நீக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கோரிக்கை வைத்தார்களே வர்த்தகர்கள். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டதா? சாப்பாட்டில் கை வைத்துவிட்டு, ‘ஏசி விலை குறைகிறது’ என்று சொல்லும் ஒன்றிய அரசுக்கு என்ன பெயர் வைக்கலாம்.
நடுத்தர மக்களது ஒரே கோரிக்கை பெட்ரோல், டீசல் விலை உயர்வு. அதைக் கண்டு கொள்ளாமல், சுதேசிப் பெருமிதங்கள் எதற்காக? டிரம்ப் சொல்வதற்கு எல்லாம் மவுனமாக இருந்தால் இறுதியில் ‘சுதேசி’யாக அதுவே போய் முடிந்துவிடத்தான் செய்யும்!
கோவையில் ஒரு கடைக்குச் சென்று, ‘மைசூர்பாகு விலை குறைந்துள்ளதா?’ என்று கேட்கிறார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். மக்களது காலை உணவு மைசூர்பாவா? மோடிக்கு ஏற்ற தொண்டர்கள்!! சபாஷ்!!