முரசொலி தலையங்கம் (24-09-2025)
ஓரணியில் திரண்ட தமிழ்நாடு!
‘ஓரணியில் தமிழ்நாடு' என்று கட்டளையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஓரணியில் திரண்டு விட்டது தமிழ்நாடு. அந்தக் காட்சிகளைத் தான் கடந்த 20, 21 ஆகிய நாட்களில் பார்த்தோம். இனம், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டை ஓரணியில் திரட்டி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.
‘ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தார் தலைவர். இந்த உறுதிமொழியை நாட்டுக்கு உணர்த்தவே பொதுக்கூட்டங்கள் அறிவித்தார்.
நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் அனைத்துமே மண்டல மாநாடுகளைப் போல நடந்துள்ளது. மனிதக் கடலில்தான் கழக முன்னோடிகள் பேசி இருக்கிறார்கள். இளைஞர்களும், பெண்களும் குவிந்த பொதுக்கூட்டமாக இவை அமைந்துள்ளன. இந்தக் கூட்டத்துக்கு கொள்கை உரம் ஏற்றப்பட்டுள்ளது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாணி ஆகும். பணியாகும்.
*தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக்குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்!
*வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘SIR’-க்கு எதிராக நிற்பேன்!
*'நீட்' மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
*நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்.
*தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன்.
* ‘பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.
- என்று உறுதி ஏற்றுள்ளார்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். தமிழ்நாட்டு மக்கள்.
ஆளும் கட்சியாக ஆனபிறகும், போராட வேண்டிய நிலைமைக்குத்தான் நம்மை வைத்துள்ளது பா.ஜ.க. அரசு.
இந்தியாவில் அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக - ஒன்றிய பா.ஜ.க. அரசின் புள்ளிவிபரங்களின் படி தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னால் தரப்பட்ட வாக்குறுதிகள் 595. அதில் 484 வாக்குறுதிகளைநான்கரை ஆண்டு காலத்தில் செயல்படுத்திக் காட்டி இருக்கிறார். தமிழ்நாட்டின்பொருளாதார வளர்ச்சியை 11.19 விழுக்காடு என்ற அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்து காட்ட முடியாத அளவுக்கு உயர்த்திக் காட்டி இருக்கிறார்.
மாதம் தோறும் கலைஞர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயை ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பெறுகிறார்கள். விடுபட்டவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கும் வழங்க இருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கும் சூழலில் மகளிருக்கு கட்டணமில்லா வசதி சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட போதும் அதனை மீறி விடியல் பயணத்தை அறிவித்தவர் முதலமைச்சர் அவர்கள். தினமும் பசியோடு பள்ளிக்கு வரும் 21 லட்சம் குழந்தைகள் வயிறார உணவு சாப்பிட்டு விட்டு படிக்கிறார்கள்.
புதுமைப்பெண் - - தமிழ்ப்புதல்வன் - நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் இளைய சமுதாயத்தை அறிவிலும் ஆற்றலிலும் கல்வியிலும் தனித்திறமையிலும் முன்னேறிய சமுதாயமாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. நான் முதல்வன் திட்- டத்தில் இதுவரை 44 லட்சம் மாணவ, மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. உலகத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு காட்சி அளிக்கிறது.
இதனை எதிர்க்கட்சிகள் பழிக்கிறார்கள் என்றால் பரவாயில்லை. அதுதான் அவர்களது தொழில். பழித்தால்தான் அவர்களால் பிழைக்க முடியும். ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களையே தொடர்ந்து செய்கிறது. செய்து வருகிறது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தமிழ்நாடு விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேர் எதிர்க்கும் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார். 2 ஆயிரம் கோடி பணம் வேண்டுமானால் மும்மொழித் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்ற போது, ஐந்தாயிரம், பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் ஏற்க முடியாது என்று சொன்னவர் தமிழ்நாட்டு முதலமைச்சர். ஒன்றிய அரசின் அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்துக்கும் எதிராக ஒரு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றால் அது தமிழ்நாடு சட்டமன்றத்தில்தான். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பா.ஜ.க.வின் கொள்கையும், திராவிட இயக்கத்தின் கொள்கையும் நேருக்கு நேர் எதிரானது, இப்போது நடக்கும் யுத்தம் என்பது இரண்டு தத்துவங்களுக்கு எதிரான யுத்தம் என்று சொன்னவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள். அதனால்தான் திட்டமிட்டு தமிழ்நாட்டை பழிவாங்கி வருகிறது பா.ஜ.க.
பா.ஜ.க.வின் இந்த பாசிச எண்ணங்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த ‘ஓரணியில் தமிழ்நாடு' உறுதிமொழியும், பொதுக்கூட்டங்களும் சிறப்பான பங்களிப்பைச் செலுத்திவிட்டன.
2019 ஆம் ஆண்டு முதல் எதிர்கொண்ட தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்று வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சாதாரண வெற்றிஅல்ல, மகத்தான வெற்றியைப் பெற்று வருகிறார். எதிரிகளைக் கலங்கடிக்கும்வெற்றி- யைப் பெற்று வருகிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலிலும் அத்தகைய வெற்றியைத் தான் பெறப் போகிறார் முதலமைச்சர் என்பதை ‘ஓரணியில் தமிழ்நாடு' உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டங்கள் உணர்த்துகின்றன.
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்!