முரசொலி தலையங்கம் (23-09-2025)
வெளியுறவுக் கொள்கையின் தோல்வி!
அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் அனைத்தும் ஒன்றிய பா.ஜ.க அரசின் வெளியுறவுக் கொள்கை தோற்று வருவதையே உணர்த்துகின்றன.
வாரம்தோறும் ஏதாவது ஒரு வெளிநாட்டில்தான் இந்தியப் பிரதமர் மோடி இருக்கிறார். உள்நாட்டைத்தான் கவனிக்கவில்லை, வெளிநாடுகளில் ஆவது இந்தியப் பெருமையை நிலைநாட்டுவார் என்று நம்பினோம். ஆனால் அதிலும் மண்தான் விழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது பிரதமர் மோடியின் நட்பானது மிகக் கெட்டியானதாக இருந்தது. இவர் வெற்றிக்கு அவரும், அவர் வெற்றிக்கு இவரும் உழைத்தார்கள். உருகினார்கள். பிணைந்தார்கள். இருவருமே ஒருவர்தான் என்று காட்டிக் கொண்டார்கள். இறுதியாகப் பார்த்தால், இந்தியாவின் மீது எல்லாவகையிலும் தாக்குதல் நடத்துவதை தனது ஹாபியாக மாற்றிக் கொண்டு விட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
முதலில் இந்தியாவுக்கு வரிச்சுமையை அதிகப்படுத்தினார். இந்தியாவில்இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முதலில் 25 விழுக்காடு வரியை அதிகப்படுத்தினார். பின்னர், கூடுதலாக 25 விழுக்காடு வரியை அதிகரித்- துள்ளார். இதன் காரணமாக அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி இனி செலுத்த வேண்டும்.
அடுத்ததாக இந்தியாவைப் பற்றி மோசமான பிம்பத்தை உருவாக்கினார் டிரம்ப். “அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள ‘மோசமான நாடுகளில்' ஒன்று” என்று இந்தியாவைப் பட்டியலிட்டார் டிரம்ப்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறினார்கள் என்று சொல்லி பலரையும் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தினார்கள். அதில் கொடுமையானது, அவர்கள் கைவிலங்கு போட்டு அனுப்பப்பட்டதாக காட்சிகள் வெளியானது.
பின்னர், அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைக்கச் சொன்னார் டிரம்ப். அதன்படி மாணவர் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடுகளைக்கடுமையாக்கும்படி அந்த நாட்டு வெளியுறவுத் துறை உத்தரவு போட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது டிரம்ப் சொன்ன வாக்கு மூலங்கள் இந்தியாவின் மதிப்பைக் குறைப்பதாகவும், 'எனது பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் நாடு இந்தியா' என்பதைச் சொல்வதாகவும் அமைந்திருந்தன. ‘நான் சொன்னதால்தான் போர் நிறுத்தப்பட்டது' என்று 26 முறை சொல்லி இருக்கிறார் டிரம்ப்.
இந்த வரிசையில் உச்சகட்டமாக, ஹெச் 1 பி விசா கட்டணம் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் 88 லட்சம் செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பெரும் பாதிப்பை அடைவார்கள். வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் 1.75 லட்சம் முதல் 4.50 லட்சம் வரை கட்டணமாக இதுவரை செலுத்தி வருகிறது. இதைத்தான் 88 லட்சமாக ஆக்கிவிட்- டார் டிரம்ப்.
‘அமெரிக்க வேலை வாய்ப்புகளை வெளிநாட்டவர் திருடுகிறார்கள்' என்பதால் இந்த நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கத் தொழிலாளர்களது நன்மைக்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை அதிகரித்ததாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஒரே ஒருமுறை செலுத்தினால் போதும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச் 1 பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியர்களே பெற்று வந்தார்கள். அதிலும் குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இப்படி வழங்கப்படும் விசாக்களில் 78 விழுக்காடு விசாக்களை இந்தியர்- களே பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, ஹெச் 1பி விசா வைத்திருக்கும் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப அறிவித்துள்ளார்கள். விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்குச் சென்றிருந்தால் அவர்கள் உடனடியாக அமெரிக்கா சென்றாக வேண்டும்.
அமேசான், டாடா கன்சல்டன்சி, மைக்ரோசாப்ட், மெட்டா, ஆப்பிள், கூகுள், டெலாய்ட், இன்போசிஸ், விப்ரோ, மகேந்திரா ஆகிய முக்கியமான, பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் ஹெச் 1 பி விசா வாங்கிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். தொழிலாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது டிரம்ப் அறிவிப்பு.
‘இந்த அறிவிப்பு இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் ' என்று தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘நாஸ்காம்' அறிவித்துள்ளது.
மேலே குறிப்பிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து ஆக் ஷனும் இல்லை, ரியாக் ஷனும் இல்லை. ‘இதைப் பற்றி ஆய்வு செய்வோம்' என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சொல்லி இருக்கிறார். ‘இருநாட்டு மக்கள் தொடர்பு முக்கியமானது. இதனை கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்' என்று அருள் பாலித்திருக்கிறார் அவர். இதெல்லாம் அதிபர் டிரம்புக்குப் புரியுமா? புரியாது. இவ்வளவு தான் மோடி ஆட்சியால் முடியும்.
இந்தியர்களின் நலனைக் காக்கும் வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதையே இது காட்டுகிறது. இந்திய, இந்தியர் நலன்களுக்கு அக்கறையில்லாத பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பயன்?
மன்மோகன் சிங்கை 'பலவீனமான பிரதமர்' என்று எப்போதும் கிண்டல் அடிப்பார் மோடி. 'பலமான பிரதமர்' என்று சொல்லிக் கொண்டவர் அல்ல மன்மோகன். ஆனால், 'உலகத்தை ஆளும் விஸ்வகுரு'வாக உருவகப்படுத்தப்படும் மோடியின் பிம்பம் உள்நாட்டைப் போலவே வெளிநாட்டிலும்பலவீனமானதுதான் என்பதையே அமெரிக்க அறிவிப்புகள் சொல்கின்றன.