முரசொலி தலையங்கம்

சுதந்திர தினத்தில் புகழாரம்... மோடியை காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.? - முரசொலி தலையங்கம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காப்பாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர்கள் இவரைக் காப்பாற்றுவார்களா? - முரசொலி தலையங்கம்!

சுதந்திர தினத்தில் புகழாரம்... மோடியை காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.? - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மோடியை காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.?

முரசொலி தலையங்கம்

19.08.2025

இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து விட்டு - ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் பிரதமர் மோடி. அவரது நோக்கத்தை நம்மை விட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நன்கு அறியும்.

75 வயதானால் பதவிகளை விட்டு விலகி விட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லி வருகிறது. அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அதனை அடிக்கடி நினைவூட்டி வருகிறார். அடுத்த மாதத்துடன் பிரதமர் மோடியும் 75 ஆவது வயதை நிறைவு செய்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் படி, அவரும் பதவி விலகியாக வேண்டும். ஆனால் அவருக்கு விருப்பம் இல்லை. எதைச் சொல்லி அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியையும் காவு வாங்கினாரோ, அதுவே இவருக்கு எதிராக வந்து நிற்கிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தயவு மோடிக்கு இப்போது அவசர அவசியம் ஆகி விட்டது.

அடுத்ததாக மோடியும், அமித்ஷாவும் தனித்து இயங்குவதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரும்பவில்லை. எனவே, பா.ஜ.க.வை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக தான் சொல்பவர் தான் வரவேண்டும் என்று அந்த அமைப்பு விரும்புகிறது. அவர்கள் சொல்லும் நபரை ஏற்றுக் கொள்ள இவர்கள் இருவரும் மறுக்கிறார்கள். கைக்கு அடக்கமானவரை இவர்கள் இருவரும் நுழைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தனது ஆளை உட்கார வைக்கத் துடிக்கிறது. இதுவும் மோதலாக மாறிக் கொண்டு இருக்கிறது.

இவற்றில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சமாதானம் செய்வதற்குத் தான் கடந்த மார்ச் மாதம் அந்த அமைப்பின் தலைமையகத்துக்குச்சென்றார் பிரதமர் மோடி. இப்போது வெளிப்படையாக பாராட்டி பேசி இருக்கிறார்.

இது அவர்களது உட்கட்சி மோதல்.அதற்காக தேசியக் கொடியை ஏற்றிவைத்து விட்டு, 'இந்த தேசத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் கட்டி எழுப்பியது'என்றா பேசுவது?

“இந்த நாடு அரசாங்கங்களால் மட்டும் கட்டமைக்கப் படவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர். எஸ்.எஸ். அமைப்பு நிறுவப்பட்டது. தேசத்துக்கான ஆர். எஸ்.எஸ். அமைப்பின் இந்த 100 ஆண்டுகால சேவை ஒரு பெருமைமிக்க, பொன்னான அத்தியாயத்தை உருவாக்குகிறது. தேசத்தைக் கட்டி எழுப்ப அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். நூற்றாண்டு கால பயணத்திற்கு பங்களித்த அனைத்து ஸ்வயம் சேவகர்களையும் நான் வணங்குகிறேன். இது எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.

சுதந்திர தினத்தில் புகழாரம்... மோடியை காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.? - முரசொலி தலையங்கம்!

* 'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய மேதாவிகளுக்கு மனுஸ்மிருதி தெரியவில்லை' என்று எழுதியவர் கோல்வார்க்கர். “மனு தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட வேண்டும்” என்று ஆர்.எஸ். எஸ். தலைவர்களில் ஒருவரான சுதர்சன் சொன்னார்.

* இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையானது மூவர்ணக்கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவித்த போது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு அதனை ஏற்கவில்லை.

* இந்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடுவதை - இது போன்ற கூட்டு தேசிய நடவடிக்கைகளை எதிர்த்தவர்கள் இவர்கள். 'வேர் வரை செல்லும் வேறுபாடுகள் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றுபட்ட முழுமையாக ஒன்றிணைக்கப்படுவது முற்றிலும் இயலாத ஒன்று என்பதை ஜெர்மனி நமக்குக் காட்டியுள்ளது” என்று கோல்வார்க்கர் சொன்னது இதனைத்தான்.

* ஜனநாயகம் என்பதையே மேலை நாட்டுக் கருத்தாக்கம் என்று நினைக்கக் கூடியவர்கள் இவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களது சிந்தனையில் உருவாக்கப்படும் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மரியாதை தராமல் 'ஏகசாலக் அனுவர்தித்வா' என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவரின் அதிகாரத்துக்கு கேள்விக்கு இடமின்றி அடிபணியும் கொள்கையை அரசியல் - ஆட்சியியல் கோட்பாடாக மாற்றுவதுதான் இவர்களது நடைமுறையாகும்.

* “பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது மட்டுமே தேசப்பற்று ஆகாது' என்றும், 'தேசியவாதம் ஆகாது' என்றும் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வார்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் “சட்டத்தை மதிக்க வேண்டியது இல்லை என்ற நினைப்பை உருவாக்கிய இயக்கம்” என்று சொன்னவரும் அவர்தான்.

* சாதிப் பாகுபாட்டை முழுக்க முழுக்க நியாயப்படுத்தும் அமைப்பு இது. சாதிப் பிரிவு என்பதையே ‘வர்ண வியாவஸ்தா' என்று சொல்லிக் கொள்வார்கள். சாதி அமைப்பு முறைதான் இந்தியாவைக் காப்பாற்றுவது என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். 'சாதி அமைப்பு முறையானது சமூகத்தில் ஒற்றுமையைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது' என்று சொன்னவர் கோல்வார்க்கர்.

* சமஸ்கிருதம்தான் ஆட்சிமொழியாக வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பு இது. அதற்கு முன்னதாக இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கச் சொல்லும் அமைப்பு இது. மொழி ஆதிக்க வாதிகள்தான் தேசத்தை கட்டமைப்பார்களா?

* அண்ணல் காந்தி கொலைச் சதி குறித்து சியாம் பிரசாத் முகர்ஜிக்கு அன்றைய உள்துறை அமைச்சர் படேல் எழுதிய கடிதத்தில், “காந்தியைக் கொலை செய்ய சதி செய்ததில் மகாசபாவின் தீவிரவாதப் பிரிவு ஈடுபட்டிருக்கிறது என்பதில் என் மனதுக்கு எட்டியவரை எந்த சந்தேகமும் இல்லை. காலங்கள் கடந்து போகப் போக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் இன்னும் அதிகரித்த அளவில் கட்டுப்பாடுகளை மீறுவதும் அதுபோல சீர்குலைவு நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதையும் நடத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டினார். இப்படிச் சொன்னவர் படேல். இவர்கள்தான் தேசத்தை கட்டமைத் தவர்களா?

இத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை காப்பாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர்கள் இவரைக் காப்பாற்றுவார்களா?

banner

Related Stories

Related Stories