முரசொலி தலையங்கம் (18-08-2025)
பிரதமர் மோடியின் தந்திர உரை!
பதினோறு ஆண்டுகள் ஆனபிறகும் வார்த்தைகளில் ‘வடை’ சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார் பிரதமர் மோடி. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவருக்குச் சாதனைகள் இல்லை. அதனால் அதனை அவரால் சொல்ல முடியவில்லை. வெறும் வாயை மென்று கொண்டு இருக்கிறார்.
79 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு அவர் ஆற்றிய உரையானது, எந்தச் சாதனைகளையும் சொல்வதாக அமையவில்லை. பத்து ஆண்டுகளாகச் சொல்லி வரும் தற்சார்பு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றைத்தான் மீண்டும் மீண்டும் அளந்து விட்டிருக்கிறார். இதையே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை.
“பாதுகாப்பு, எரிசக்தி, நவீன தொழில்நுட்பம், மருந்து தயாரிப்பு, உரத் தயாரிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உலக அளவில் பொருளாதார சுயநலம் நிலவும் சூழலில் தற்சார்பை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம் ஆகும். போர் விமானங்கள், இயந்திரங்கள் தொடங்கி சமூக ஊடகம் வரை இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும். வளர்ந்த இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் தற்சார்பு. நாட்டின் சுயமரியாதைக்கும் இதுவே அடிப்படை. ஒரு நாடு எந்தளவுக்கு பிறநாடுகளைச் சார்ந்துள்ளதோ அந்த அளவு அதன் சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகும்” என்றெல்லாம் முழங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. இதைத்தான் பல ஆண்டுகளாக அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மக்கள் மறந்திருப்பார்கள் என்று பிரதமர் மோடி நினைத்திருக்கலாம். அவர் முதன்முதலாக பிரதமர் ஆன 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் கொடியேற்றி விட்டு பேசும் போது சொன்னது என்ன?‘மேக் இன் இந்தியா’.அதையே தான் இப்போது‘தற்சார்பு இந்தியா’என்று வார்த்தையை மாற்றி இருக்கிறார் பிரதமர்.
‘மேக் இன் இந்தியா’ திட்டம் பெரும் தோல்வியை அடைந்ததைத் தான் பார்க்கிறோம். முதல் ஆறு ஆண்டுகளில் இந்தத் திட்டம் எந்த நகர்வையும் தராமல் தோல்வியை அடைந்தது என்பதுதான் உண்மை. ‘எல்லோரும் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்யுங்கள்’ என்று உலக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் வரவில்லை. வந்தவர்களும் லாபம் சம்பாதித்து எடுத்துச் சென்று விட்டார்கள். ‘இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டமானது இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்வோம் திட்டமாகி விட்டது’ என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டதுதான் மிச்சம். அனைத்து தொழில்களுக்கும் முன்னுரிமை தருவோம் என்றார். அதனாலேயே இது கவனம் பெறவில்லை.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ‘தற்சார்பு இந்தியா’ என்று வேறு பேர் வைக்க முயற்சித்தார் பிரதமர்.
2020 ஆம் ஆண்டு கொடியேற்றிப் பேசிய பிரதர் மோடி, “தற்சார்பு இந்தியா என்பது 130 கோடி இந்தியர்களின் மந்திரச் சொல்லாக மாறி உள்ளது” என்றார் மோடி.
‘தற்சார்பு இந்தியாதான் முக்கியம்’ என்று 2021 ஆம் ஆண்டும் சொன்னார் பிரதமர் மோடி. அவர்கள், அவர்களுக்கு மட்டும் புரியும் வகையில், ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்று சொல்லிக் கொண்டார்கள். இப்படிச் சொல்லி விட்டால் யாருக்கும் அதனை விளக்கத் தேவையில்லை. செய்தோமா இல்லையா என்று நிரூபிக்கவும் தேவையில்லை. ‘லோக்கல் ஃபார் லோக்கல்’ என்றும் 2021 ஆம் ஆண்டு சொன்னார் பிரதமர் மோடி. உள்நாட்டில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது ஒன்றையே தனது நோக்கமாகச் சொல்லி வந்தார் பிரதமர். பா.ஜ.க. அமைச்சரவையில் இருக்கும் அத்தனை அமைச்சர்களும் ‘தற்சார்பு இந்தியாவின்’ பி.ஆர்.ஓ.க்கள் போல பேசி வந்தார்கள்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் 25 தொழில்களைச் சொன்னார்கள். இப்போது ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தில் 5 திட்டங்களுக்குள் சுருக்கிக் கொண்டார்கள். மருந்து, மின்னணு, உணவு, வாகனம் ஆகியவற்றில் தற்சார்பு இருந்தால் போதும் என்று தங்களைத் தாங்களே மனதைத் திடப்படுத்திக் கொண்டார்கள். இதுதான் வளர்ச்சியா?
‘பொருளாதார’ நோக்கத்துக்காக பா.ஜ.க. இதனைச் சொல்வதாகத் தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்கள் தேசியவாதம்’ என்ற சொல்லை அடிக்கடி சொல்வார்கள். அத்தகைய தேசியவாதக் கொள்கையை பொருளாதாரத்தில் பயன்படுத்தத் துடிக்கிறார்கள் போலும். 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இதனை அறிவிப்பதற்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்தக் கருத்தைச் சொன்னார். ‘நாம் அனைத்திலும் தன்னிறைவு பெற வேண்டும். எந்த நாட்டையும் நம்பி இருக்கக் கூடாது’ என்று சொன்னார். அதன் பிறகு மோடியும் இதனைச் சொல்லத் தொடங்கினார்.
அமெரிக்காவால் வர்த்தக ரீதியிலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் பிரதமர் மோடி, தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள ‘தற்சார்பு’ வார்த்தையைச் சொல்கிறார். அதன் மூலமாக சமாளிக்க நினைக்கிறார். அமெரிக்காவுக்கான உண்மையான பதில் இது அல்ல.
‘தாராளமயமாக்கல்’தான் சிறந்த வழி என்று சொன்னவர்கள், இப்போது ‘தற்சார்பு’தான் சிறந்த வழி என்கிறார்கள். மொத்தத்தில் இவர்களுக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்றே தெரிகிறது. தங்களது அரசியல் பலவீனத்தை பொருளாதாரத்தின் மீது போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள். அதுதான் தெரிகிறது. பிரதமர் மோடியின் ஒவ்வொரு சுதந்திர நாள் உரையும் தந்திர உரையாக இருப்பதற்கு இதுதான் காரணம்.