முரசொலி தலையங்கம் (14/08/2025)
தாயுமானவரின் கருணை உள்ளம்
தமிழ்நாடு முதலமைச்சர் தீட்டி வரும் திட்டங்கள், இதயத்தால் உருவாக்கப்படும் திட்டங்களாக அமைந்திருக்கின்றன.
மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்கும் சோதனை முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இத்திட்டம் தமிழ்நாடு முழுதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அரசு வழங்கும் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி ஆகும்.
தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 814 நியாய விலைக் கடைகள் மூலம் 2 கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 771 குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று பொருள்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், அதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆய்வு செய்தது. அதன்படி, 70 வயதைத் தாண்டிய குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருள்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. 10 மாவட்டங்களில் தலா 2 வட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டன.
மூத்த குடிமக்களில், 7.5 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. வீடு தேடி ரேஷன் திட்டம் சோதனை முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முதலமைச்சரிடமிருந்து அவர்கள் பதில் அளிக்கிறார்கள்.
வயது முதிர்ந்தோருக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கும் இதேபோல் பொருட்களை வீட்டுக்குச் சென்று வழங்கலாம் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இத்திட்டமானது தமிழ்நாடு முழுவதும் 34 ஆயிரத்து 809 நியாய விலைக்கடைகளிலும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருக்கும் 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பேர் பயனடைந்துள்ளனர். அதே போல் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 657 பேரும் பயனடைய உள்ளனர். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடைகின்றனர். இவர்களுக்கு இவர்களது வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இவர்களுக்கு பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டு வாசலுக்கே கடை விற்பனையாளர்கள் வந்து கொடுப்பார்கள். இதன் மூலம் கூட்டுறவுத் துறைக்கு 30.16 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவு ஆகும். அரசின் பலனை அடைய எந்தச் சிரமமும் முதியோர், மாற்றுத் திறனாளிகள் அடைய வேண்டியது இல்லை.
மகளிர் உரிமைத் தொகைக்கு ஒரே ஒரு முறைதான் மகளிர் விண்ணப்பிக்கிறார்கள். அவ்வளவுதான். மாதம் தோறும் குறிப்பிட்ட நாளில் ஆயிரம் ரூபாய் அதுவாக வந்து மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதைப் போலத் தான், குடிமைப் பொருட்களும் மாதம் தோறும் அவர்களது வீடுகளுக்கு வந்து சேர்ந்துவிடும். அலையவேண்டியது இல்லை. காத்திருக்க வேண்டியது இல்லை. பொருள் கிடைக்குமா கிடைக்காதா என ஏங்க வேண்டியது இல்லை. எவரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை, இன்னும் கூடுதலாக நெருக்கமாக இருக்கிறது இந்தத் திட்டம்.
தமிழ்நாடு குறித்து பல பாராட்டுச் செய்திகள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. அதில் மிகமிக முக்கியமானது தமிழ்நாட்டில் வறுமையின் விழுக்காடு மிகமிகக் குறைந்து விட்டது என்பது ஆகும். தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என்பது ஆகும். சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் இது மிகமிக முக்கியமானது. தமிழ்நாட்டில் ரேசன் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தும், விலையில்லா அரிசி வழங்கும் முன்மாதிரி முதலமைச்சராக நமது தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். அவரது வழித்தடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 ஆயிரத்து 394 புதிய நியாயவிலைக் கடைகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் 37 ஆயிரத்து 328 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவை பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது. விளைச்சல் பொருட்களுக்கு உரிய விலை தரப்பட்டுள்ளது. விளைச்சல் பொருட்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.
மாநில உற்பத்தி – விளைச்சல் – பாதுகாப்பு – வழங்கல் ஆகிய அனைத்தும் முறையாக நடப்பதால்தான் வறுமை இல்லாத, பட்டினிச் சாவு இல்லாத தமிழ்நாடு இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றது. விளிம்புநிலை மக்களை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தால்தான் இந்த வெற்றியை அடைய முடியும். அத்தகைய கருணை உள்ளம் முதலமைச்சருக்கு இருப்பதால் தான் தாயுமானவர் என்ற திட்டத்தை உருவாக்க முடிந்தது.
“எனக்கு நடந்து போறதுக்கு கஷ்டமா இருந்தது. கடைக்குப் போய் அரிசி வாங்குறதுன்னா முடியாது. இப்ப எல்லாப் பொருளும் வீடு தேடி வருது. சந்தோஷமா இருக்கு” – என்று பேட்டி அளிக்கிறார் ஒரு பெண்.
“எனக்கு கால் வலி. என்னால நடந்து போக முடியாது. அதுனால ரேசன் பொருளை முதலமைச்சர் அனுப்பி வைத்தது ரொம்ப பெரிய விஷயம். எனக்கு பெத்த பிள்ளைன்னு அவரிடமே சொன்னேன். கடவுள் மாதிரி வந்து காப்பாத்திட்டார். என்னைப் பார்க்க யாரு வருவா? முதலமைச்சர் தான் வந்தாரு. என்னை மாதிரி முடியாம கிடக்கிறவங்களுக்கு அவருதான் இருக்காரு” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார் இன்னொரு பெண்.
தாயுமானவராம் முதலமைச்சரின் கருணை உள்ளத்தை படம் பிடித்துக் காட்டுகின்றன இந்த வாக்குமூலங்கள்!