அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் ஒன்றிய பண்பாட்டுத் துறை சார்பில் ஒரு விழா நடைபெற்றது. மோடியையும் கலந்து கொள்ள வைத்து, தமிழ்நாட்டுக்கு ஏதோ பெரிய நன்மை செய்து விட்டதாக பா.ஜ.க. கணக்குக் காட்டி இருக்கிறது.
அவர்களுக்கு மாமன்னன் இராசராசனையும், இராசேந்திரனையும், பெருவுடையார் கோவிலையும் இப்போதுதான் நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அதை வைத்து இராசராச சோழனுக்கு தி.மு.க. என்ன செய்தது என்று சமூக வலைதளங்களில் எதுவும் தெரியாதவர்கள் ‘வாட்ஸ் அப்’ வரலாற்றைப் பரப்பி வருகிறார்கள்.
இராசராசனுக்குச் சிலை அமைக்கப்படும் என்று 2025 ஆம் ஆண்டு அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மாமன்னன் இராசராசசோழன் சிலையை நிறுவியவர் தலைவர் கலைஞர். தஞ்சை பெரிய கோவிலுக்குள் சிலை வைக்கவே நினைத்தார் தலைவர் கலைஞர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் என்பதால் உள்ளே வைக்க அனுமதி கிடைக்கவில்லை. ‘பழமை மாற்றம் கூட்டம் கூடாது’ என்ற காரணம் சொல்லப்பட்டது. அதனால் கோவில் வாசலில் சிலை வைத்தார் முதலமைச்சர் கலைஞர்.
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் இராசராச சோழன் சிலையை அமைத்துத் திறந்து வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. முன்னிலை வகித்து இருக்கிறார் அன்றைய அறங்காவல்துறை அமைச்சர் கண்ணப்பன். விழாக் குழுவின் தலைவராக இருந்தவர் அன்றைய வேளாண் துறை அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்கள்.
முதலாம் இராசராசன் தஞ்சை பெரிய கோவிலை 1004 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010 ஆம் ஆண்டு முடித்து 22.4.1010 அன்று அதற்கான குடமுழுக்கு விழாவை சிறப்போடும் நடத்தினார். இந்த ஆயிரமாவது ஆண்டை 2010 ஆம் ஆண்டு கொண்டாடியவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடத்தினார் முதலமைச்சர் கலைஞர்.
சிறப்புக் கண்காட்சியை அன்றைய துணை முதல்வர், இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் தொடங்கி வைத்தார்கள். இந்தக் கண்காட்சியில் சோழர்கால ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்சிற்பங்கள், நிழல்படங்கள், செப்பேடுகள், இசைக்கருவிகள், போர்க்காட்சிகள், அகழ்வாய்வு படங்கள், கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் தீட்டிய 100 ஓவியங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. தஞ்சை நகர் குறித்த ஆயிரம் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
செப்டம்பர் 22- - ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பெரிய கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், சிவகங்கைப் பூங்கா, இராசராசன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கரந்தை ஆகிய ஐந்து இடங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கமம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் மொத்தம் ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்டனர். தஞ்சையைச் சேர்ந்த 75 கலைக் குழுக்கள் இவற்றில் இடம் பெற்றன. ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும், பத்மா சுப்ரமணியம் குழுவினர் வழங்கும் ஆயிரம் நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் ஆடிய நிகழ்ச்சி அன்று அனைத்து ஊடகங்களாலும் பாராட்டப்பட்டது. திலகர் திடலில் இராசராச சோழன் வரலாற்று நாடகம் நடைபெற்றது. பெரிய கோயில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயுதப் படையினர் பயிற்சித் திடலில் நிறைவு விழா, முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இவை அனைத்தும் இன்றைய கத்துக்குட்டிகள் அறியாதவை.
‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022 ஆம் ஆண்டு முக்கியமான அறிவிப்பைச் செய்தார்கள். ‘’மாமன்னர் இராசராச சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்” என அறிவித்தார்கள். மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்றும் அறிவித்தனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழாவை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
“இராசராச சோழனுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் விழா நடத்தியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவரது வரலாற்றில் அளவு கடந்த ஈடுபாடுஉண்டு. அதிலும் இராசராசனின் ஆயிரமாவது ஆட்சி ஆண்டு விழாவினை நடத்தியதும் அவர்தான். இராசராச சோழனுக்குச் சிலை வைத்து, தொடர்ந்து அதை அரசு விழாவாக மாற்றியதிலும் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இதை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டுள்ளது”என்று தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு புதிய அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் 22.10 கோடி ரூபாய் செலவில் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஆண்டே உத்தரவிட்டுள்ளார்.
மாமன்னன் இராசேந்திர சோழன் உருவாக்கிய பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள 1,374 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த 7.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவை ஏதும் அறியாத கூமுட்டை ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘என்னது சிவாஜி செத்துட்டாரா?’ என்று கேட்பதைப் போல இப்போதுதான் அவர்களுக்கு இராசராச சோழன் என்ற மன்னன் இருந்தான். அறிந்திருப்பார்கள்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தும், தமிழ் மன்னர்களின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றியும், சங்க காலப் பெருமிதங்களை மீட்டெடுக்க விதங்களில் பாடுபட்டும், கீழடி வரலாற்றை உலகுக்கு உணர்த்தும், இரும்பின் தொன்மையை மெய்ப்பித்தும் தமிழின ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது திராவிட. முன்னேற்றக் கழக ஆட்சியே!