தூத்துக்குடி விமான நிலையத் திறப்பு விழாவுக்கு டெல்லியில் இருந்து பொய்களோடு புறப்பட்டு வந்திருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.
“தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் புத்தாக்கம் பெற்றுள்ளன. 2,500 கோடி ரூபாய் மதிப்பில் இரு புதிய சாலை கட்டமைப்புகளை திறந்து வைத்துள்ளோம். வளர்ச்சியே எங்கள் முக்கிய இலக்கு. 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி கொடுத்துள்ளோம். இந்தத் தொகை கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்கு அதிகமானது. இந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குப் பதினோரு புதிய மருத்துவக் கழகம் கல்லூரிகள் கொடுத்துள்ளோம்” என்று அள்ளி விட்டு வார்த்தைத் தோரணங்களைக் கட்டி இருக்கிறார் பிரதமர்.
ரயில் நிலையங்களைப் புதுப்பித்தல், தேசிய நெடுஞ்சாலைகளைப் போடுவதும் ஒன்றிய அரசின் வேலைகள். இருக்கும் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவர்களின் கடமை. அதனைத்தான் செய்துள்ளார்கள். புதிதாக ஏதுமில்லை.
11 மருத்துவக் கல்லூரிகளை ஒன்றிய அரசின் செலவில் தமிழ்நாட்டில்அமைக்கவில்லை. 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி தந்திருக்கிறார்கள். அவ்வளவுதான். மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக 2015 ஆம் ஆண்டு முதல் சொல்லி வருகிறார்கள். 10 ஆண்டுகளாக கட்டித் தரவில்லை. இதுதான் மோடி அரசின் சாதனை ஆகும்.
காங்கிரஸ் ஆட்சியில் தரப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுத்துள்ளோம் என்கிறார் பிரதமர். 2004 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் வித்தியாசம் இல்லையா? பணத்தின் மதிப்பானது ஒன்றா? காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசின் போது தமிழ்நாட்டுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறப்புத் திட்டங்கள் வந்தது. அத்தகைய சிறப்புத் திட்டம் எதையாவது பா.ஜ.க. அரசால் பட்டியல் போட முடியுமா?
2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு 8.4 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் தரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ் நாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடியே திருப்பித் தரப்பட்டுள்ளது. இதுவும் பிரதமர் சொன்ன தொகைதான். இதன்படி பார்க்கும் போது தமிழ் நாட்டில் இருந்து பெருமளவு நிதியை ஒன்றிய அரசு பெற்று, தமிழ்நாட்டுக்கு குறைவான தொகையையே ஒன்றிய அரசு ஒத்துக்குவதை பிரதமர் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் சொல்வது உண்மையானால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை மனு கொடுக்க வேண்டிய தேவையே வந்திருக்காதே?
மூன்று மாபெரும் இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. அதில் இருந்து மீள் நடவடிக்கைகள் செய்வதற்காக ரூ.30 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு கேட்டது. அதில் மோடி அரசு எவ்வளவு கொடுத்தது? ரூ.1000 கோடி கூட இல்லை. அதுதான் உண்மை.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு தரவேண்டிய தொகை ரூ.2,151.59 கோடி ஆகும். இதனை ஏன் தரவில்லை பிரதமர்? தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால் இதனைத் தந்துவிட்டு அல்லவா, தூத்துக்குடிக்கு வந்திருக்க வேண்டும்? பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் இத்தனையும் எதற்காக இணைத்து, வஞ்சகம் செய்ய வேண்டும்?
பத்து ஆண்டுகளாக பல்வேறு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அதனை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் பிரதமர் அவர்களின் பேச்சில் இல்லை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துகிறது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள். அதற்கு அறிவிப்பு இல்லை. நிதி ஒதுக்கீடு இல்லை. இது ஒன்றிய அரசு மட்டும் தனித்து நிறைவேற்றுவது அல்ல. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசும் பாதி தொகை ஒதுக்கீடு செய்யும் திட்டம் ஆகும். தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தயாராக இல்லை.
கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழ்நாட்டில் வைத்து அறிவித்திருக்க வேண்டாமா பிரதமர்? கச்சத்தீவை மீட்கப் போவதாக அறிவித்திருக்க வேண்டாமா பிரதமர்? கச்சத்தீவுக்காக ஒன்றிய அமைச்சரவையே கடந்த ஆண்டு ஒரே நாளில் கண்ணீர் சிந்தியதே? அது மறந்து போனதா? இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம் என்று சொல்லி இருக்க வேண்டாமா பிரதமர்? இந்திய மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் பறிக்கப்பட்டு அங்கு முடக்கப்பட்டுள்ளது பிரதமருக்கு தெரியுமா?
“தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஒன்றிய அரசுக்கு பங்கு” என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இல்லையா? எந்த வளர்ச்சியில் எந்த வகையில் பங்கு என்பதைச் சொல்ல வேண்டாமா?
“தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?” என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, “கங்கை நீரைக் கொண்டு வந்துள்ளேன்” என்கிறார் பிரதமர். “மன்னன் இராசேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து வந்து ஏரியை நிரப்பினார். மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் பேசி இருக்கிறார்.
‘கங்கைகொண்ட சோழபுரம்’ என்ற ஊரின் பெயரை ஒழுங்காகப் படித்திருந்தால் இப்படிப் பேசி இருக்க மாட்டார் பிரதமர். ‘கங்கைகொண்டான்’ என்றால் கங்கையை வென்றான் என்பது பொருள். 1019 ஆம் ஆண்டு கங்கை வரை சென்று வடபுலத்தை வெற்றி பெற்றான் மன்னன் இராசேந்திர சோழன்.
அந்த வெற்றியின் அடையாளமாக கங்கை நீரைக் கொண்டுவந்தான் மன்னன் இராசேந்திர சோழன். வடபுலத்து வெற்றியின் அடையாளமாக 1023 ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கினான். கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில் அமைக்கப்பட்டது. கங்கைகொண்ட சோழப்பேரேரி உருவாக்கப்பட்டது. இதற்கு சோழரங்கம் என்ற பெயரைச் சூட்டினார் மாமன்னன் இராசேந்திரன்.
கங்கைச் சமவெளியில் மேற்கொண்ட வெற்றியின் அடையாளம்தான் இந்த சோழபுரம். இதனைப் பிரதமருக்கு யாரும் சொல்லவில்லை போலும்! சொல்லி இருந்தால், இந்த நாடகம் அரங்கேறி இருக்காது.
தமிழ்நாட்டுக்கு கங்கை நீர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெற்றியின் அடையாளமாக வந்துவிட்டது. ‘தோல்வி’ முகத்தோடு பிரதமர் இதனை எடுத்து வரத் தேவையில்லை.