முரசொலி தலையங்கம்

பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : பெருந்தலைவரைப் போற்றும் கழகம்- முரசொலி

சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய போதுதான் பெருந்தலைவர் காமராசருக்கு முதன்முதலாக சென்னையில் சிலை வைக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : பெருந்தலைவரைப் போற்றும் கழகம்- முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-07-2025)

பெருந்தலைவரைப் போற்றும் கழகம்!

திராவிட இயக்கத்துக்கும் பெருந்தலைவர் காமராசருக்குமான நட்பு என்பது கொள்கை நட்பு ஆகும். பெருந்தலைவர் காமராசரை ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். ‘உங்கள் ஆட்சிக்குக் காப்பாளனாக நான் இருப்பேன்’ என்றவர் பெரியார். இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் கல்விக்கு அடித்தளம் இட்டார் பெருந்தலைவர்.

குடியாத்தம் இடைத் தொகுதியில் காமராசர் அவர்கள் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாதவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த வரிசையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் போதெல்லாம் பெருந்தலைவர் புகழைப் போற்றுவதை தனது கடமையாக நமது தலைவர்கள் வைத்துள்ளனர்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கும் தலைவர் கலைஞருக்குமான நட்பு என்பது தந்தை – மகன் உறவைப் போல நெருக்கமானதாக இருந்தது. ‘நெருக்கடி நிலையை எதிர்த்து நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்’ என்று முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சொன்னபோது, “பதவி விலகக் கூடாது, இந்தியாவில் தமிழகத்தில்தான் சுதந்திரக் காற்று வீசுகிறது” என்று சொன்னவர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்த போது அவருக்கு ஒரு மகனைப் போல இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது மட்டுமல்ல, அரசு இடத்தில் அவரை அடக்கம் செய்து நினைவு மண்டபம் கட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

•சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றிய போதுதான் பெருந்தலைவர் காமராசருக்கு முதன்முதலாக சென்னையில் சிலை வைக்கப்பட்டது.

•பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மறைந்தபோது, கடற்கரைச் சாலைக்கு அவரது பெயரை வைத்தார் முதலமைச்சர் கலைஞர்.

•கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

•நெல்லையில் பெருந்தலைவர் காமராசருக்கு சிலை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

•பெருந்தலைவர் காமராசரின் செயலாளராக இருந்த வைரவனுக்கு அரசு வீட்டை ஒதுக்கித் தந்தவர் முதலமைச்சர் கலைஞர்.

•பெருந்தலைவர் காமராசரின் சகோதரி நாகம்மாளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதிஉதவி அளித்தவர் முதலமைச்சர் கலைஞர்.

•பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தவர் முதலமைச்சர் கலைஞர்.

•பெருந்தலைவர் காமராசர் பிறந்த ஜூலை 15–ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட சட்டம் போட்டவர் முதலமைச்சர் கலைஞர்.

“பெருந்தலைவர் காமராசர் அவர்களை ஒரு கட்சியின் தலைவராக கலைஞர் அவர்கள் பார்க்கவில்லை. ஒரு நாட்டின் தலைவராக கலைஞர் அவர்கள், காமராசரைப் போற்றி மதித்தார். இரண்டு கட்சித் தலைவர்களாக இல்லாமல், இரண்டு கொள்கைகளின் தலைவர்களாக அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : பெருந்தலைவரைப் போற்றும் கழகம்- முரசொலி

இன்றைய முதலமைச்சர் அவர்கள், தனது வாழ்வில் பெருமைக்குரிய நிகழ்வு என்பது, தனது திருமணத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் வருகை தந்தது என்பது எப்போதும் மறக்காமல் சொல்வார்கள். பெருந்தலைவர் உடல் நலிவுற்றிருந்த நேரம் அது. எனவே, அவரது வருகைக்காக மேடையை மாற்றி அமைத்து, அவரை அழைத்து வந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். இதனைப் பல கூட்டங்களில் இன்றைய முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். கலைஞரின் வழித்தடத்தில் இன்றைய முதலமைச்சர் அவர்களும் பெருந்தலைவரைப் போற்றி வருகிறார்.

சென்னையில் மாபெரும் நூலகத்தை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதற்கு, ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்’ என்று பெயர் சூட்டினர். மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்த மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கு, ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என்று பெயர் சூட்டினர். கோவையில் அமைய இருக்கும் நூலகத்துக்கு ‘தந்தை பெரியார் நூலகம்’ என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இதைத் தொடர்ந்து திருச்சியில் அமையும் நூலகத்துக்கு ‘பெருந்தலைவர் காமராசர்’ பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கல்லூரிக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்துக்கு, பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டினார் முதலமைச்சர் அவர்கள்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மூன்று படகுகள் விடப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதில் ஒரு படகுக்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்கள். (ஐரோப்பியத் தமிழறிஞர் ஜி.யு.போப், தென் தமிழகப் போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி)

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தியடிகள் நினைவு மண்டபமும், பெருந்தலைவர் காமராசர் நினைவு மண்டபமும் ரூபாய் 75 இலட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். அரசு உதவி பெறும் பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராசர் பிறந்த ஜூலை 15ஆம் நாள் திருவள்ளூரில் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் அவர்கள்.

இப்படி காலங்கள்தோறும் பெருந்தலைவரைப் போற்றும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories