முரசொலி தலையங்கம்

"பழனிசாமியின் அடிமைத்தனம் பல்லிளிக்கிறது - அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு?" : முரசொலி தலையங்கம் ஆவேசம்!

‘அண்ணா’ கொச்சைப்படுத்தப்படுகிறார். ‘திராவிடம்' என்பதே போலி என்று சொல்லப்படுகிறது. ஆனால் சொரணையே இல்லாமல் இவர்கள் நால்வரும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

"பழனிசாமியின் அடிமைத்தனம் பல்லிளிக்கிறது - அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு?" : முரசொலி தலையங்கம் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-06-2025)

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?

“அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?”

- என்று எழுதினார் கவியரசு கண்ணதாசன்.

எடப்பாடி பழனிசாமியே, உங்கள் உடம்பில் ரத்தம் எதற்கு? உங்களுக்கு எல்லாம் கட்சி எதற்கு? அதுவும் அண்ணாவின் பேரால் கட்சி நடத்தி, அண்ணாவுக்கே துரோகம் செய்வது கேவலமில்லையா?

கட்சிப் பெயரில் 'திராவிடம்' இருக்கிறது. 'திராவிடத்தை ஒழிக்க வந்திருக்கிறோம்' என்று மார்தட்டும் கூட்டத்துக்கு கைதட்ட நான்கு கொத்தடிமைகளை அனுப்புகிறார் பழனிசாமி என்றால் அவர் தனது பெயரை ‘பா.ஜ.க. ஆசாமி' என்று பெயர் மாற்றிக் கொள்வதுதான் சரியான பொருத்தமாக இருக்கும்.

பா.ஜ.க.வுக்கோ, வகுப்புவாத சக்திகளுக்கோ தமிழ்நாட்டில் இடமில்லை என்பது தமிழ்நாட்டு மக்களின் முடிவான முடிவு. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்புத் திட்டமும் செய்து கொடுப்பது இல்லை. 'வோட்டுப் போடாதவர்களுக்கு திட்டம் எதற்கு?' என்று நினைக்கிறது பா.ஜ.க தலைமை. 'நன்மை செய்யாதவர்க்கு வாக்கு எதற்கு?' என்று இருக்கிறது தமிழ்நாடு. இந்த நிலையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்குச் சமம் என்பது மரணப்படுக்கையில் இருப்பவர் கூட மறக்காமல் சொல்வார். ஆனால் அத்தோடு கூட்டணி வைத்துக் கொண்டார் பழனிசாமி. அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் இதற்குக் காரணம். பழனிசாமியின் உறவினர் வீட்டில் தொடர் ரெய்டு நடத்தி, பல நூறுகோடிக்கு வரிப் போட்டதில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.வைத் தாரை வார்த்தார் பழனிசாமி. இதனை அ.தி.மு.க. தொண்டர்களே முழுமையாக ஏற்கவில்லை. அவர் கூட்டிய மாவட்டச் செயலாளர் கூட்டத்திலும் அந்த அறிவிப்புக்கு கைதட்டல் இல்லை.

‘பா.ஜ.க.வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம் என்று சொன்னால் யாருமே கைதட்ட மாட்டேன் என்கிறார்களே' என்று பழனிசாமிவருந்திய தாகவும் தகவல். இந்த சூழ்நிலையை கசப்பாக உள்ளே போட்டுக் கொண்ட பழனிசாமி, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. வுக்கு பாசாங்கு காட்டிக் கொண்டிருக்கிறார். போகட்டும்!

அதற்காக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு துரோகம் இழைப்பது, மாபெரும் துரோகம் ஆகும்.

மதுரையில் ஆன்மிகப் போர்வையில் பா.ஜ.க.வின் அரசியல் மாநாடு நடந்துள்ளது. பா.ஜ.க. பேரைச் சொன்னால் யாரும் வரமாட்டார்கள் என்று சொல்லி முருகப்பெருமான் பெயரால் கூட்டத்தைக் கூட்டி, வகுப்புவாத வெறியைத் தூண்டி இருக்கிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் பழனிசாமியின் அடிமைத்தனமும் பல்லிளிக்கிறது.

ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகிய கொத்தடிமைகள் முன்னிலையில் அங்கு திரையிடப்பட்ட காட்சியில் ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற சொல்லில் உள்ள ‘அண்ணா’ கொச்சைப்படுத்தப்படுகிறார். ‘திராவிடம்' என்பதே போலி என்று சொல்லப்படுகிறது. ஆனால் சொரணையே இல்லாமல் இவர்கள் நால்வரும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

“போலி திராவிடத்தை வேட்டையாடிய சிங்கம்” என்று அந்த மாநாட்டை நடத்திய அமைப்பு தன்னை மார்தட்டிக் கொண்டது.1967 ஆண்டு முதல் இன்று வரை - 58 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆள்வது ‘திராவிடக் கட்சிகளே' என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.

"பழனிசாமியின் அடிமைத்தனம் பல்லிளிக்கிறது - அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு?" : முரசொலி தலையங்கம் ஆவேசம்!

‘போலித் திராவிடம்' என்று சொல்லி பெரியாரை, அண்ணாவை, கலைஞரைக் காட்டுகிறார்கள் திரையில். பொதுவாக, தந்தை பெரியாரை அ.தி.மு.க. சொல்லாது. கலைஞர், அவர்களுக்கு எதிரி. ஆனால் அண்ணா என்ன பாவம் செய்தார்? அண்ணாவின் படம் ‘போலித் திராவிடமாக'

அடையாளப்படுத்தப்பட்ட போது அ.தி.மு.க. மாஜிகளுக்கு மனம் வலித்திருக்க வேண்டாமா? இரண்டு இடத்தில் அண்ணாவின் முகத்தைக் காட்டி கொச்சைப் படுத்துகிறார்கள். காணொலிக் காட்சி திரையிடப்பட்ட அந்த இடத்தில் எதிர்க்க முடியாவிட்டாலும், மாநாடு முடிந்த பிறகாவது உடனடியாக எதிர்த்து பேட்டி தந்திருக்கலாமே?

‘சோத்தைத் தின்கிறாயா? எதைத் தின்கிறாய்?' என்று நாகரிகமாக பேட்டி தரக்கூடிய உதயகுமார் வாயில் என்ன வைத்திருந்தார்? பா.ஜ.க. என்றதும் அண்டா குண்டாவைப் போல அண்ணாவையும் அடமானம் வைத்து விட்டார்கள். ‘திராவிடம்’ என்ற சொல்லையும் பிய்த்தெறிய முடிவெடுத்து விட்டார்கள். உங்கள் கட்சியின் பெயரில் இருக்கும் அண்ணாவையும், திராவிடத்தையும் நீக்குங்கள். கொடியில் இருக்கும் அண்ணாவின் படத்தை நீக்குங்கள். அதன்பிறகு எந்த ஈனக் காரியத்தையும் செய்யுங்கள்.

நான்கு பேரும் அமைச்சராக இருந்தவர்கள். 'கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்' என்கின்ற தீர்மானம் நிறைவேற்றுவதற் காகத்தான் இந்த மாநாடே நடக்கிறது. இது அ.தி.மு.க. ஏற்றுக் கொண்ட கொள்கையா? தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களைச் சீர்செய்வதற்காக நீதிபதி மகாராஜன் தலைமையில் 1982 ஆம் ஆண்டு ஆணையம் அமைத்தவர் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அவர்கள். இது இவர்களுக்குத் தெரியுமா? சொன்னால் புரியுமா?

மூளை இருக்க வேண்டிய இடத்தில் களை முளைத்துவிட்டதால் எந்தச் சிந்தனையும் இல்லாமல் வெறும் ஜடங்களாகப் போய் உட்கார்ந்து இருக்கிறார்கள். ‘குட்டியை விட்டு ஆழம் பார்த்துக் கொண்டு' சேலத்தில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்

அது மானமில்லை. அதில் ஈனமில்லை - அவர்

எப்போதும் வால் பிடிப்பார்”என்று எழுதினார் கவிஞர் ஆலங்குடி சோமு.

வெட்கமில்லையா? மானமில்லையா? ரோஷம் இல்லையா? சூடு இல்லையா? சொரணை இல்லையா?.

banner

Related Stories

Related Stories