முரசொலி தலையங்கம்

”முதலமைச்சரை தாயும் தந்தையுமாகப் பார்க்கும் மாற்றுத்திறனாளிகள்” : முரசொலி புகழாரம்!

நான்கு ஆண்டு காலத்தில் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்காக மட்டும் 60 அரசாணைகள் முதலமைச்சர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

”முதலமைச்சரை தாயும் தந்தையுமாகப் பார்க்கும் மாற்றுத்திறனாளிகள்” : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (24-06-2025)

மகிழும் மாற்றுத்திறனாளிகள்!

மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அனைவரும் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாவை எடுத்திருக்கிறார்கள். அனைத்து அமைப்பினரும் இணைந்து நடத்திய விழா அது. பொதுவாக பாராட்டு விழாக்களில் கலந்து கொள்ளாத முதலமைச்சர் அவர்கள், இந்த நிகழ்ச்சியில் மனமுவந்து கலந்து கொண்டார்கள். 'உங்களது அன்புக்காகத்தான் வந்தேன்' என்று முதலமைச்சரும் விழாவில் குறிப்பிட்டார்கள்.

பல்வேறு பழிச் சொற்களைக் குறிச்சொற்களாகக் கொண்டு அழைக்கப்பட்ட அந்தச் சகோதர, சகோதரிகளுக்கு ‘மாற்றுத் திறனாளி' என்ற அடையாளச் சொல்லாக உருவாக்கி, அதனை அரசு ஆவணங்களில் இடம் பெறச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அந்த வழித்தடத்தில்தான் இன்றைய முதலமைச்சரும் செயல்பட்டு வருகிறார். கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றத்துக்காக மட்டும் 60 அரசாணைகள் முதலமைச்சர் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுதான் மகத்தான சாதனை ஆகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை அவர்களே ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்ற மாபெரும் சமூக நீதி உரிமையை முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். 13 ஆயிரத்து 357 உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் உள்ள உறுப்பினர்களாக அவர்கள் அமரப் போகிறார்கள். ஜூலை 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் உறுப்பினருக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் உண்டு.

மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு காண்பதற்காக அரசுத்துறைகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு 4 விழுக்காடு இடஒதுக்கீடுமுறையில் வாய்ப்புகள் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர். இதே போல்தனியார் துறைகளிலும் பணியமர்த்த, மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சுமார் 624 மாற்றுத் திறனாளிகளுக்கு 163 தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் அதற்கான நிதி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. 2021-2822-ஆம் நிதியாண்டில் ரூ.813.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2025-2026ஆம் நிதியாண்டில் ரூ.1432.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2821 ஆம்ஆண்டிலிருந்து காத்திருப்போர்பட்டியல் உட்பட அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன் தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தகுதியான பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை ஆகிய துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

”முதலமைச்சரை தாயும் தந்தையுமாகப் பார்க்கும் மாற்றுத்திறனாளிகள்” : முரசொலி புகழாரம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தும்போதும் முக்கிய நிகழ்வுகளின் போதும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குமுன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு “மீண்டும் இல்லம் (Home Again)” எனும் புதிய திட்டத்தினை முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இல்லங்கள் வீதம் பத்து இல்லங்களில் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி, 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.700.00 இலட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளி- கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஆண்டுதோறும் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முதற்கட்ட மாக சென்னையில் குரூப் - II, II A தேர்வு எழுத உள்ளவர்களில் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்த 49 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு புதுமையான முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் Centre for Excellence for the Persons with Autism Spectrum Disorder எனும் மையத்தினை துவக்கி புற உலக சிந்தனை யற்றோரின் மறுவாழ்விற்காக ரூ.50 கோடி மதிப்பீட்டில் தகைசால் மையம் தீர்வு காணும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மற்றும் பொதுக் கட்டிடங்களில் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் தடையற்ற சூழல் அமைக்கும் பணிகளும்நடைபெற்று வருகின்றன. சாய்வுதளப்பாதை, மின்தூக்கி அமைத்தல், கழிவறைஅமைத்தல், பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் செல்வதற்காக தொடுஉணர்வுடன் கூடிய தரைப்பகுதி (Tactile flooring), பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட தகவல் பலகை பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

- இப்படி எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றித் தந்ததால்தான் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் அனைவரும் இணைந்து அவரை பாராட்டி இருக்கிறார்கள்.

"எங்களைப் பார்த்துச் சிரித்தவர்கள் மத்தியில் எங்களைத் தலைநிமிரச் செய்துள்ளீர்கள். எங்களை அவமதித்தவர்கள் ஊரிலேயே எங்களுக்கு பிரதி நிதித்துவம் கொடுத்திருக்கிறீர்கள். எங்கள் வாழ்நாள் முழுக்க உங்களை மறக்க மாட்டோம்”என்று டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் நாதன் உருக்கமாகச் சொன்னார். அதுதான் உண்மை.

மாற்றுத் திறனாளிகளுக்குச் செய்யப்பட்டது வழக்கமான திட்டங்கள் அல்ல. உரிமையை வழங்கும் சட்டங்கள் ஆகும். எனவேதான் ஒவ்வொரு உத்தரவும் உரிமை தரும் உத்தரவாக அமைந்துள்ளது. முதலமைச்சரை தாயும் தந்தையுமாகப் பார்க்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.

banner

Related Stories

Related Stories