தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கச்சத்தீவை மீட்போம் என்ற தீர்மானமானது தமிழ்நாட்டின் உரிமையைக் காப்போம், மீனவர்களைக் காப்போம் என்ற உள்ளடக்கங்களைக் கொண்டது ஆகும்.
இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட ஆதரித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் குரலாக இது அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மலர்ந்தது முதல், ‘கச்சத்தீவை மீட்போம்’ என்ற குரலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஒலித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 26.5.2022 அன்று கோரிக்கை வைத்தார். “கச்சத்தீவை மீட்டுத் தரவேண்டும்” என்று 31.3.2022 அன்று பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து முதலமைச்சர் மனுக் கொடுத்தார். “இலங்கை அதிபர் உங்களைச் சந்திக்க வருகிறார், அவரிடம் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்ப வேண்டும்” என்று 20.8.2023 அன்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாகத்தான் கச்சத்தீவு மீட்புத் தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றினார்கள்.
தீர்மானத்தை ஆதரித்த அ.தி.மு.க., வழக்கம் போல ‘நீங்கள் தான் கச்சத்தீவை தாரை வார்த்தீர்கள்’ என்றும் குற்றம் சாட்டியது. ‘கச்சத்தீவை ஒப்படைக்கக் கூடாது’ என்று அன்றைய பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார்கள். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் (29.6.1974) கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் (21.8.1974) நிறைவேற்றினார்கள்.
கச்சத்தீவு ஒப்பந்தம் என்பதே இரண்டு ஒப்பந்தங்கள் ஆகும். முதல் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி மீன்பிடிக்க உரிமை உண்டு. இரண்டாவது ஒப்பந்தம் 1976 ஆம் ஆண்டு போடப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு இல்லை. இந்த ஒப்பந்தத்தில் தான் ‘மீன் பிடிக்க உரிமை இல்லை’ என்பது சேர்க்கப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்துப் போக வைத்தவரே ஜெயலலிதாதான்.
« 20.4.1992 அன்று சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார். அது ஏதோ முடிந்து போன விவகாரம் போல ஜெயலலிதா சொன்னார்.
« 30.9.1994 அன்று பிரதமர் நரசிம்மராவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அதில், “The coding of this tiny island to the Island Nation has been done by the Government of India in the interest of better bilateral relations” என குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ‘தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ் சிறிய தீவினை (கச்சத்தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான்’ எனச் சொன்னவர் ஜெயலலிதா.
« 23.7.2003 அன்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையே நல்லுறவு பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகளைக் காப்பாற்றவும் உள்ள ஒரேவழி என்று குறிப்பிட்டுவிட்டு மேலும், “The best possible solution is to get the island of Katchatheevu and adjacent seas on lease in perpetuity solely for fishing, drying of nets and pilgrimage. Sri Lanka’s Sovereignty over Katchatheevu could be upheld at the same time” –அதாவது கச்சத் தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை செல்வதற்கும் நிரந்தரக் குத்தகைக்குப் பெறலாம்; அதே நேரத்தில் கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார்.
அவருக்கு மீனவர் நலனை விட, இலங்கை இறையாண்மைதான் முக்கியமாக இருக்கிறது. கச்சத்தீவு மீட்பை, குத்தகைக்குப் பெறுவதாகச் சுருக்கியவர் ஜெயலலிதா. சொந்தக் கட்சிக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையே அறியாத பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா?
கச்சத்தீவு பிரச்சினையில் தி.மு.க. நாடகம் ஆடுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். கபட நாடகங்கள் நடத்துவதில் கைதேர்ந்தவர் அண்ணாமலைதான் என்பதை அவரது கட்சியினரே நன்கு அறிவார்கள்.
பா.ஜ.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில், ‘1974 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 6 இன் படி இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க உரிமை இல்லை. கச்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு எந்தப் பாரம்பர்ய உரிமையும் இல்லை’ என்று சொல்லப்பட்டது. அதே மனுவில், ‘இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கடல் எல்லை விவகாரம் முடிந்து போன ஒன்று’ என்று சொல்லியதும் பா.ஜ.க. அரசு தான்.
கச்சத்தீவை மீட்பதற்காக 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்த 11 ஆண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசு செய்த ஒரே ஒரு செயலைக் காட்டச் சொல்லுங்கள்.
“கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது, அதனை திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்று ஒரே ஒரு கடிதத்தையாவது பிரதமர் மோடி, இலங்கை அரசுக்கு எழுதி இருக்கிறாரா? அ.தி.மு.க. – பா.ஜ.க.வின் கபட நாடகங்களை மக்கள் அறிவார்கள்.