தேசப்பற்றை பற்றி யார் பேசுவது?
தமிழ்நாட்டுக்கு வந்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தி.மு.க.வை தேச விரோதக் கட்சி என்று சொல்லி இருக்கிறார். ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் பேசும் பேச்சா இது? பொறுப்பு வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் அவர், இப்படி வாய்க்கு வந்ததைப் பேசலாமா? வாய் துடுக்குடன் பேசலாமா?
இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான நேதாஜி சுபாஸ் சந்திர போஸையும், மாவீரன் பகத்சிங்கையும் கொண்டாடுவதன் மூலமாக தங்களை தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கிறது பா.ஜ.க. இது அந்தக் கட்சியின் வரலாற்றுத் தந்திரம் என்றே ஸோயா ஹசன் என்கிற வரலாற்றுப் பேராசிரியை ,“பா.ஜ.க.வின் சித்தாந்த மூதாதையர்கள் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை’’என்று எழுதினார்.
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஏ.ஜி.நூரணி அவர்கள், 2002 ஆம் ஆண்டு சாவர்க்கர் குறித்து ஒரு புத்தகம் எழுதினார்.‘சாவர்க்கரும் இந்துத்துவமும் – மகாத்மா காந்தி படுகொலையும்’ என்ற தலைப்பில் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. ஆவணக் காப்பகத்தின் பல்வேறு தகவல்களைத் திரட்டி எழுதப்பட்ட வரலாற்று ஆய்வு நூலாகும் அது. பல முறை ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கேட்டவர் சாவர்க்கர்என்பதை ஆதாரங்களுடன் அந்த நூலில் ஏ.ஜி.நூரணி சொல்லி இருக்கிறார்.
1883 முதல் 1966 வரை வாழ்ந்தவர் சாவர்க்கர். அபிநவ் பாரத் என்ற அமைப்பில் இயங்கியவர். சட்டம் படிக்க லண்டன் சென்றவர். அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிலும் இலண்டனிலும் இயங்கிய இந்திய தேசியக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர். வில்லியம் கர்சான் கொலை, நாசிக் மாவட்ட நீதிபதி ஜான்சன் கொலை ஆகிய இரண்டிலும் தொடர்புடையவராக சாவர்க்கர் சந்தேகப்படுத்தப்படுகிறார். இந்தியாவிலும் இலண்டனிலும் மன்னராட்சிக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட இவர், மார்செல்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மோரியா கப்பலில் இருந்து தப்பினார். பின்னர் பிரான்சில் பிடிபட்டார்.
1910 ஜூலை 22 அன்று மும்பைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். டிசம்பர் 10 வழங்கப்பட்ட தீர்ப்பின் படி ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு தரப்படுகிறது. அதன்படி அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார். 1911–ல் ஆங்கில அரசுக்கு அவர் ஒரு கருணை மனு அனுப்புகிறார். அதன்மீது நடவடிக்கை இல்லை என்றதும் 1913 நவம்பர் 14 அன்று மீண்டும் கருணை மனு போடுகிறார். அந்த வாசகங்களை வழக்கறிஞர் ஏ.ஜி.நூரணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அரசு தன் நல்லதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை விடுவித்தால் அரசியலமைப்பின் செயல்பாட்டிற்காக வாதாடுவதுடன் ஆங்கில அரசுக்கு விசுவாசமாகவும் நடந்து கொள்வேன். அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சேவகம் புரியத் தயாராக உள்ளேன். எனது மாற்றம் மனச்சாட்சியின் குரலுக்கேற்ப ஏற்பட்டுள்ளதால் எனது எதிர்கால நடத்தை அதற்கேற்பத்தான் இருக்கும். என்னைச் சிறையில் வைத்திருப்பதன் மூலம் எதுவும் பெற இயலாது. மாறாக அவ்வாறு இல்லாதிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தந்தை போன்ற அரசின் வாசலுக்குக் கெட்டழிந்த மகன் திரும்ப வருமாறு கருணை செய்ய வல்லமை மிக்க தங்களால் மட்டுமே முடியும்” – என்று சாவர்க்கர் எழுதி இருக்கிறார். மன்னிப்பு, கருணை மனுவை விட மிக மோசமான வார்த்தைகள் இவை என்கிறார் வழக்கறிஞர் ஏ.ஜி.நூரணி.
1924 எரவாடா சிறையில் இருந்து நிபந்தனைகள் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகிறார் சாவர்க்கர். அடுத்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியதற்காக மீண்டும் அவர் மீது வழக்கு பாய்கிறது. அதற்கு அனுப்பிய பதிலில்சுயராஜ்யம் என்ற சொல்லில் தனக்கு நம்பிக்கை இல்லைஎன்று பதில் அனுப்பி இருக்கிறார் சாவர்க்கர். அவருக்கு மீண்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. 1937 ஆம் ஆண்டுதான் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இவை அனைத்தையும் வரிசைப்படுத்தி இருக்கிறார் ஏ.ஜி.நூரணி.
“சாவர்க்கரின் கஷ்டங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதேபோல், அவரது சரணாகதியையும் சமரசப் போக்கையும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அவரை வீரராகப் புகழ்பவர்கள், அவரது முதல் பகுதியை மட்டும் மிகைப்படுத்திக் கூறிவிட்டு பிற்பகுதியைப் பற்றி அவர்களால் மறுக்க முடியாவிட்டாலும் கண்டுகொள்வதில்லை” என்று 2002 இல் எழுதினார் ஏ.ஜி.நூரணி. இத்தகைய பரம்பரையைச் சேர்ந்தவர்தான் அமித்ஷா. இன்றைக்கு மற்றவர்களுக்கு தேசபக்திப் பாடம் எடுக்கிறார்.
பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது மட்டுமே தேசப்பற்று ஆகாது என்றும், தேசியவாதம் ஆகாது என்றும் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வார்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும்‘சட்டத்தை மதிக்க வேண்டியது இல்லை என்ற நினைப்பை உருவாக்கிய இயக்கம்’என்று சொன்னவரும் அவர் தான். ‘தியாகிகளை மதிக்கத் தேவையில்லை’ என்று எழுதியவரும் அவர் தான்.
‘உள்நாட்டில் சீர்குலைவை ஏற்படுத்த அல்லது பாதுகாப்பின்மையை உருவாக்க யாராவது வெகுமக்கள் உணர்வைக் கிளப்பிவிட்டால் அதை எந்த அரசாங்கமாக இருந்தாலும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்’ என்று சொன்னவர் சியாம் பிரசாத் முகர்ஜி என்ற ஜனசங்கத் தலைவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது தான் அப்படிச் சொன்னார்.
அண்ணல் காந்தி கொலைச் சதி குறித்து சியாம் பிரசாத் முகர்ஜிக்கு அன்றைய உள்துறை அமைச்சர் படேல் எழுதிய கடிதத்தில், “காந்தியைக் கொலை செய்ய சதி செய்ததில் மகாசபாவின் தீவிரவாதப் பிரிவு ஈடுபட்டிருக்கிறது என்பதில் என் மனதுக்கு எட்டியவரை எந்த சந்தேகமும் இல்லை. காலங்கள் கடந்து போகப் போக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் இன்னும் அதிகரித்த அளவில் கட்டுப்பாடுகளை மீறுவதும் அதுபோல சீர்குலைவு நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதையும் நடத்தி வருகிறது”என்று குற்றம் சாட்டினார். இப்படிச் சொன்னவர் படேல். அவருக்குத் தான் ரூ.3000 கோடியில் சிலை வைத்துள்ளது பா.ஜ.க.
எனவே தேசம், தேசபக்தி, தேசத்துரோகம் என்ற சொற்களைப் பயன்படுத்தும் போது பா.ஜ.க.வினர் பக்கம் பார்த்து பயன்படுத்தவும்.