முரசொலி தலையங்கம் (03-02-2025)
ஒன்றியத்தின் ஓரவஞ்சனை அறிக்கை!
“ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத் தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?” என்று வேதனையோடு கேட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ள ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் இல்லை. வழக்கமாகவே இருக்காது. அதுவே இப்போதும் தொடர்கிறது.
ஒன்றிய அரசின் நிதித் தொகுப்புக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக வரி வருவாய் கிடைக்கும் நிலையிலும் தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசுக்கு மாநிலங்களிடம் இருந்து வரும் வரிகள் அனைத்தும் நிதிக் கமிஷன் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலான பகிர்வு. விருப்புரிமைப் பகிர்வு. பேரிடர்கள் நேரும்போது ஒன்றிய அரசு அளிக்கும் நிதி என்ற விதங்களில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இதில் எல்லாம் தமிழ்நாடு தொடர்ந்து பாரபட்சம் காட்டப்படுகிறது.
ஒன்றிய அரசின் திட்டங்களின் மூலமாகவும் மாநிலங்களுக்கு நிதி கிடைக்கும். ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அப்படியான திட்டங்கள் அறிவிக்காமல் அநீதி செய்யப்பட்டிருக்கிறது.
நிதி கமிஷன் பரிந்துரைகள் படி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த நிதிப்பகிர்வில் 7 முதல் 8 சதவிகிதம் வரை தமிழ்நாட்டிற்குக் கிடைத்தன. ஆனால், தற்போது இது 4 சதவிகிதமாக குறைந்துவிட்டது. ஆனால், வேறு சில மாநிலங்களுக்கு 10 முதல் 15 சதவிகிதம் அளவுக்கு நிதி பகிரப்படுகிறது.
தமிழ்நாடு, ஒன்றிய அரசுக்கு வரியாக ஒரு ரூபாய் அளித்தால், 29 பைசாதான் திரும்பக் கிடைக்கும். ஆனால், உத்தர பிரதேசத்திற்கு 2 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். தமிழ்நாட்டில் இருந்து வசூலித்த அதிக நிதி என்ன ஆனது? அதனால் நமக்கு எந்த பயனும் ஏற்படாத நிலையில் நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.
எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அந்த மாநிலத்துக்கு ஏதாவது ஒருசில திட்டங்களை அறிவித்துவிட்டு, மற்றபடி வாய்ஜாலம் காட்டுவது தான் பா.ஜ.க.வின் பாணியாக உள்ளது. நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டுமே என்ற சடங்காக இது இருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றும் முயற்சிகளும் இல்லை. மாநிலங்களை வளர்க்க வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கும் எண்ணமும் இல்லை. வெறும் பம்மாத்தாகவே இருக்கிறது.
பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டை புகழ்கிறார்கள். “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது’ என்கிறது ஆய்வறிக்கை. கல்வி, குறிப்பாக இல்லம் தேடி கல்வி, தொழில், உற்பத்தி, சிறுகுறு தொழில், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படி இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் தமிழ்நாட்டுக்கு உதவுவது மாதிரி நிதிநிலை அறிக்கை இருக்கிறதா என்றால் இல்லை. சிறப்பாகச் செயல் படும் மாநிலத்துக்கு சிறப்பு நிதி அல்லவா தரவேண்டும்?
கடந்த ஜனவரி 31 அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 960 ரூபாய் உயர்ந்து 61 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தங்கம் விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உயர்ந்த அன்றுதான் நாடாளுமன்றத்தில் 2024–2025–ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அந்த பொருளாதார ஆய்வறிக்கையில் ‘மதிப்புவாய்ந்த உலோகங்களை பொறுத்தவரை, தங்கம் விலை குறையும்’ என சொல்லி சிரிப்பு மூட்டியிருக்கிறார்கள். மறுநாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அன்று இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. பொருளாதார அறிக்கையில் ‘குறையும்’ என்கிறார்கள். அறிக்கை வெளியானதும், ‘உயர்கிறது’. அப்படியானால் மண்டபத்தில் வேறு டீம் தயாரித்ததா இது மாதிரியான அறிக்கைகளை?
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர் என்பது அதற்கு பொருள்.
நாடாளுமன்றத்திற்கு பிரதமர் செங்கோலை வைத்துவிட்டால் மட்டும் போதாது. செங்கோல் தவறாமல் பாரபட்சம் இல்லாமல் ஆட்சி நடைபெற வேண்டும். நிதிபகிர்வு இருக்க வேண்டும். அப்படியா ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது?
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பு இல்லை. நதிநீர் இணைப்புத் திட்டம் இல்லை. கல்வித் துறைக்கு புதிய திட்டம் இல்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் இல்லை. ரயில்வேக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்பது எல்.ஐ.சி.யை ஒழிக்கும் திட்டமாகவே பார்க்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு தர வேண்டிய நிதியைத் தரமுடியாத அளவுக்கு தரைமட்டத்தில் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலைமை.
பீகார் வாக்காளர்களை நம்பி நிதிஷ்குமார் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து கொள்வார். அதற்கு நிர்மலா சீதாராமன் என்ற ஒன்றிய அமைச்சர் எதற்கு? பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு ஒன்றியத்தில் ஒரு நல்லாட்சி தேவை.