முரசொலி தலையங்கம்
01.02.2025
களங்கம் கற்பிக்க வேண்டாம்!
வேங்கை வயல் விவகாரத்தை வைத்து தவறான பரப்புரையை சில ஊடகங்கள் செய்துள்ளன. குறிப்பாக ஆனந்த விகடன், தமிழ் இந்து நாளிதழின் தலையங்கங்களும், ஜூனியர் விகடன் இதழில் வெளியாகி உள்ள கற்பனைக் கட்டுரையும் அரசின் மீது களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. அந்த புலனாய்வுப் புலிகள், வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கலாமே!
மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் அவர்கள், “இந்த வழக்கில் அனைத்து மின்னணுப் பதிவுகள், அறிவியல் பதிவுகளை அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த வழக்கில் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம்” என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கின்றன இந்த ஊடகங்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராம குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகவும் இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் முதலில் செய்திகள் வெளியானது.
இதில் எதுவும் உண்மை இல்லை. மலம் கலந்து விட்டதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டு, அதன்பிறகு மலம் கலக்கப்பட்டது என்பதை காவல் துறையின் விசாரணை உறுதி செய்துள்ளது.
வெள்ளானூர் காவல் நிலையத்தில் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையை மிகக் கவனமாகக் கையாண்டது காவல் துறை.
சாதி வன்மத்துடன் இச்செயல் செய்யப்பட்டதா? அல்லது அரசியல் மோதலா? தனிப்பட்ட பழிவாங்கும் முயற்சியா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணையானது நடைபெற்றது. விசாரணையின் முடிவை காவல் துறை வெளியிட்ட அறிக்கை தெளிவாகச் சொல்கிறது.
“சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராமசபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது” என்கிறது காவல் துறையின் அறிக்கை.
“இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என்று காவல் துறை அறிக்கை தெளிவாகச் சொல்லி இருக்கிறது.
இந்த வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளிடம் காவல் துறை விசாரணை நடத்தி இருக்கிறது. 196 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 87 டவர் லொகேஷன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இந்த போன்களில் இருந்து அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் மீட்கப்பட்டன. மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அங்கிருந்தபடி அவர்கள் பேசிய செல்போன் எண்கள் என அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றவர்களிடம் பேசிய ஆடியோக்கள் ஆதாரமாக உள்ளது. யாரிடம் பேசினார்களோ அவர்களது குரல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா விரிவாக விளக்கி இருக்கிறார்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்ணீர்த் தொட்டியில் ஏறிப் பார்ப்பதற்கு முன்பு வரை தொட்டியில் எந்தக் கழிவும் கலக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மேல்தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது” என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கை தவறானது என்றால் அதில் எந்த வகையில் தவறு இருக்கிறது என்பதைச் சொல்லட்டும். ஆனால் பூடகமாக, தங்களுக்கு ஏதோ உண்மை தெரியும் என்பதைப் போல கற்பனை உலகத்தில் எதற்காக எழுத்துக்களை உதிர்க்க வேண்டும்? அரசாங்கத்துக்கு களங்கம் கற்பிக்க வேண்டும்? இவர்கள்தான் குற்றத்தில் தொடர்புடையவர்கள் என்று காவல் துறை சொன்னால், ‘இவர்களுக்குத் தொடர்பில்லை’ என்று ஏதாவது ஆதாரம் வைத்துள்ளீர்களா? அல்லது உண்மையான குற்றவாளிகளை பொதுவெளியில் யாராவது சொல்லி, அவர்களை காவல் துறை காப்பாற்றி இருக்கிறதா?
இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்குமானால் புலனாய்வு அமைப்பிடம், விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கலாம் என்று உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அப்படி ஏதாவது தகவல் தெரியுமானால் சொல்லுங்கள்.
‘யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் தி.மு.க. அரசுக்கு எதனால் இருக்க முடியும்? இவ்வளவு களங்கம் சுமந்து காப்பாற்ற வேண்டிய அளவுக்கு யார் இதில் தொடர்பில் இருந்திருக்க முடியும்? இப்படி நடந்து கொள்வதற்கு தி.மு.க. அரசுக்கு என்ன அவசியம் ஏற்பட்டிருக்க முடியும்?’ என்ற குறைந்தபட்சக் கேள்வியை உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.
எதையாவது சொல்லி தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதும், இப்படி எழுதி தங்களை மனித உரிமைப் போராளிகளாகக் கணக்குக் காட்டிக் கொள்வதும்தான் இத்தகைய ஊடகங்களுக்கு அவசியமாக இருக்கலாம். தி.மு.க. அரசுக்கு எந்த அவசியமும் இல்லை. சட்டம் அதன் கடமையை மட்டும் ஒழுங்காகச் செய்திருக்கிறது.