முரசொலி தலையங்கம்

பள்ளிக் கல்வியைச் சிதைக்க NEP - கல்லூரிக் கல்வியைச் சிதைக்க UGC வரைவு விதிமுறை! : முரசொலி தலையங்கம்!

“பல்கலைக் கழகங்களைச் சிதைக்கச் சதி!” என தலைப்பிட்டு யுஜிசியின் புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ள ஒன்றிய அரசை கண்டித்த முரசொலி தலையங்கம்.

பள்ளிக் கல்வியைச் சிதைக்க NEP - 
கல்லூரிக் கல்வியைச் சிதைக்க UGC வரைவு விதிமுறை! : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பள்ளிக் கல்வியைச் சிதைக்க புதிய கல்விக் கொள்கை!

கல்லூரிக் கல்வியைச் சிதைக்க பல்கலைக் கழகங்களுக்கான முழு அதிகாரம் ஆளுநர்களுக்கு!

- இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு கல்வியை வளர்க்க நினைக்கும் லட்சணம் ஆகும். பல்கலைக் கழகத் துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. இதனை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருக்கிறார்.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களைத் தூக்கித் தந்துள்ளார்கள். துணை வேந்தர்கள் நியமனத்துக்கான தேடுதல் குழுவை ஆளுநரே நியமித்துக் கொள்ளலாம். அதாவது யாரை துணைவேந்தர் ஆக்க வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறாரோ அவரை நியமித்துக் கொள்ளலாம். இப்போது இருக்கும் வழிமுறை என்ன என்றால்..இந்த தேடுதல் குழுவில் மூவர் இருப்பார்கள். ஒருவரை ஆளுநர் நியமிக்கலாம்.

ஒருவரை மாநில அரசு நியமிக்கலாம். ஒருவரை குறிப்பிட்ட அந்த பல்கலைக் கழகம் நியமிக்கலாம். இனி இந்த தேடுதல் குழுவில் மாநில அரசு யாரையும் நியமிக்க முடியாது. அதேபோல், மாநில ஆளுநரின் பதவிக்காலத்தையும் மூன்று ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து விட்டார்கள். கவைக்கு உதவாத ஒருவரைப் போட்டு ஐந்தாண்டுகளுக்குள் ஒரு பல்கலைக் கழகத்தை மொத்தமாகச் சிதைக்கும் சதிச் செயலின் தொடக்கம்தான் இது.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி வந்தது முதல், தன்னை உண்மையான வேந்தராகவே நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். தன்னை ஏதோ கல்வி மேதை போல நினைத்துக் கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் முறைகேடுகளைச் செய்யும் துணைவேந்தர்களை முழுமையாகக் காப்பாற்று பவராகவும் இவர்தான் இருக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டியவர், அதனை நிர்வகிப்பதாக நடித்து வரும் ஆளுநர் தானே? அதனை மறைக்க அரைமணி நேரம் பல்கலைக் கழக வளாகத்துக்கு வந்து சுற்றிப் பார்த்து விட்டு பதுங்கி விட்டார் ஆர்.என்.ரவி. சும்மா பந்தா பண்ணினால் பல்கலைக் கழகங்கள் பாதுகாக்கப்பட்டு விடுமா?

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யு.ஜி.சி. பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கும் செயலையும் ஆளுநர் ரவிதான் செய்தார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகளை முடக்கவே இதனைச் செய்தார்.

பள்ளிக் கல்வியைச் சிதைக்க NEP - 
கல்லூரிக் கல்வியைச் சிதைக்க UGC வரைவு விதிமுறை! : முரசொலி தலையங்கம்!

ஒவ்வொரு ஆண்டும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியினை ஒன்றிய அரசு நிறுத்தியும் குறைத்தும் வருகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற பொறுப்பில் உள்ள ஆளுநர் தட்டிக் கேட்பதில்லை.

இவரல்லவா நிதிகளைப் பெற்றுத் தர வேண்டும். அதனைச் செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யாமல் பல்கலைக்கழகங்களை முடக்கும் ஒன்றிய அரசின் செயல்பாட்டை மறைக்கவே பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் இப்படி அரசியல் செய்தார்.

“பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நெறிமுறைகள் பரிந்துரை மட்டுமே. அதை அப்படியே கட்டாயம் மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளை நிர்ப்பந்தப்படுத்துவது மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அரசியல் உள்நோக்கோடு கொடுக்கும் நெருக்கடி ஆகும். இதனை ஆளுநர் தவிர்த்து பல்கலைக்கழகங்கள் கல்விப்பணியாற்ற வழிவிட வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் ஏற்கனவே பல முறை குட்டுவைத்தும் தனது செய்கையினை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது மட்டுமல்ல; ஆளுநரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் ஆகும். இவ்வாறு ஆளுநர் தொடர்ந்து தலையிட்டு வருவதால் பல பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிக்கை விடுத்தார்.

பல்கலைக் கழகங்களைச் செயல்படவிடாமல் தடுக்கவே ஆளுநர் ரவி இதனைச் செய்தார். இதனை அப்படியே செய்யத் தொடங்கி விட்டது ஒன்றிய அரசு.துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பாக மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்துக்கும் பொதுவான விதி இல்லை. அப்படி இருக்கும் போது யு.ஜி.சி. பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்பதே தவறானது. மாநில உரிமைகளில் தலையிடுவது ஆகும் என்று சொல்லி வந்தோம்.

இப்போது மாநிலங்களுக்கான முழு உரிமையையும் பறிக்கப் போகிறார்கள்.அந்தந்த மாநிலப் பல்கலைக் கழகங்களின் அடிப்படையில் தான் துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட வேண்டும் என்று 2013 ஆம்ஆண்டு பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறை வகுத்தது. இது 2018 ஆம் ஆண்டும் உறுதி செய்யப்பட்டது. இதன்படி அந்தந்த பல்கலைக் கழகங்களின் சட்டப்படி தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

யு.ஜி.சி. பிரதிநிதி இருக்கவேண்டும் என்று அப்போது யாரும் சொல்லவில்லை. 2021 ஆம் ஆண்டையயு.ஜி.சி.யின் அரசாணையும், அந்தந்த பல்கலைக் கழக சட்டப்படி தேடுதல் குழு என்றுதான் சொல்லப்பட்டது. திடீரென ஆளுநர்களுக்கு அதிகாரங்களை வழங்குவது திட்டமிட்டு மாநில அரசுகளை பலவீனமாக்கும் செயலாக மட்டுமே கருத வேண்டி உள்ளது.

ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. திட்டங்களில் பங்கேற்க முடியாது என்பதும் பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்கமான மிரட்டல் ஆகும்.உயர்கல்வி தொடர்பான இது போன்ற சட்டமானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றியப் பட்டியலில் இல்லை. பொதுப்பட்டியலில்தான் இருக்கிறது.

பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு சட்டத்தில் தன்னிச்சையாக பா.ஜ.க. அரசு முடிவெடுப்பது எதேச்சதிகாரமானது. மாநிலங்களை மட்டுமல்ல, கல்வியையே சிதைக்க நினைக்கிறார்கள். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே' என்ற நிலையை உருவாக்கவே புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வுகள், யு.ஜி.சி. விதிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன என்பதே உண்மை.

banner

Related Stories

Related Stories