முரசொலி தலையங்கம்(29.10.2024)
மதச்சார்பற்ற சோசலிசம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு 75–ஆவது ஆண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அந்தச் சட்டத்தை சிதைக்கும் செயல்களும் ஒரு பக்கம் நடக்கத்தான் செய்கின்றன.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையானது அல்ல’ என்று மெத்தப்படித்த மேதாவியான தமிழ்நாட்டு ஆளுநர் ரவி சொல்லித் திரிவதை அனைவரும் அறிவோம்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும்” என்று இப்போது பா.ஜ.க.வில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், விஷ்ணு சங்கர் ஜெயின், பல்ராம் சிங் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். இதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு, “அரசியலமைப்பை திருத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றம் சரியாக செய்துள்ளது” என்று உறுதிபடுத்தியது. இதை விட பெரிய அமர்வுக்கு கொண்டு போய் விவாதத்தை இழுக்க நினைத்தார்கள். அதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதிக்கவில்லை. ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கின்றன இந்த மனுக்கள்.
இந்திய அரசியல் சட்டமானது இந்திய நாட்டை, ‘இறையாண்மை மிக்க, சோசலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு’ என்று வரையறுக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 42–ஆவது திருத்தத்தின்படி சோசலிஸ்ட், மதச்சார்பற்ற ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டது. இதனைத்தான் செல்லாது என்று சொல்லி நீக்கச் சொல்கிறார்கள். அரசியலைப்புச் சட்டம் 100க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது. அதனையும் நீக்கச் சொல்வார்களா இவர்கள்?
சோசலிசம், மதச்சார்பற்ற ஆகிய சொற்களை இவர்கள் நீக்கச் சொல்கிறார்களே, இறையாண்மை , ஜனநாயகம் ஆகிய சொற்கள் மீது நம்பிக்கை உள்ளவர்களா இவர்கள்? ஜனநாயக நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்களா இவர்கள்? ஒற்றைச் சர்வாதிகார, எதேச்சதிகார நாடாக மாற்றத் துடிப்பவர்கள் அல்லவா இவர்கள்? முதலில் இந்த இரண்டு சொற்களையும் நீக்குவார்கள். பின்னர் அடுத்த இரண்டு சொற்களையும் நீக்க முயற்சிப்பார்கள்.
“ ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ சொற்களை மேற்கத்திய கருத்தாக்கம் போல் கருத வேண்டிய அவசியமில்லை’’ என்றும் உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லி விட்டது. மதச்சார்பற்ற என்பது மேற்கத்திய கருத்து என்றுதான் இங்கே இருக்கும் ரவியும் சொல்லிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அவசர நிலைக்காலத்தில் சேர்த்து விட்டார்கள் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
2-–11–-1976 அன்று அரசமைப்புச் சட்டத்தில் 42-–ஆவது திருத்தத்தின் மூலம் மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகளை பாராளுமன்றம் சேர்த்தது. அதன் பிறகு ஜனதா அரசாங்கம் வந்தது. அந்த அரசாங்கமும் இதனை ஏற்றுக் கொண்டது. ஜனதா அரசாங்கமும் இத்திருத்ததை தனது நாடாளுமன்றத்தில் வைத்து ஏற்றுக் கொண்டது என்பதை உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அந்த ஜனதா கட்சியில்தான் சுப்பிரமணிய சுவாமி இருந்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 368, பாராளுமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவையும் பிந்தைய தேதி முதல் அமலுக்கு வரும் என்று திருத்தம் செய்யும் உரிமையை வழங்கி உள்ளதால், அது முகப்புரை திருத்தத்திற்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது இந்தத் தீர்ப்பு.
இந்தியாவில் சோசலிசம் என்பது சமத்துவம் பேணும் அரசைத்தான் குறிக்கும் என்பதையும், அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கும் பொதுநல அரசைத்தான் அது குறிக்கிறது என்பதையும், இது சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம். ‘தனியார் துறை இங்கு வளர்ச்சி அடைவதை சோசலிசம் என்ற சொல் ஒரு போதும் தடுக்கவில்லை. நாம் அனைவரும் தனியார் துறையாலும் பயனடைந்துள்ளோம்’ என்றும் நீதிபதிகள் விளக்கி உள்ளார்கள்.
இந்த தீர்ப்பின் முத்தாய்ப்பான கருத்து என்ன என்றால், சோசலிசம், மதச்சார்பற்ற என்ற சொற்கள் முகவுரையில் மட்டுமில்லை, இது அரசியலமைப்பின் பல்வேறு கூறுகளிலும் இடம்பெற்றுள்ளது என்று சொல்லி இருப்பதுதான்.
“அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி போன்ற வார்த்தைகளுக்கான பொருள் மதச்சார்பின்மை என்பதே” என்று அழுத்தம் திருத்தமாக தீர்ப்பில் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
எந்தக் குடிமகனும் தான் விரும்பும் மதத்தை சார்ந்து இருப்பதற்கும் அதை பிரச்சாரம் செய்வதற்கும் அடிப்படை உரிமை உள்ளது என்று கூறும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25–-ன் பொருளும் மதச்சார்பின்மைதான் என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம். ‘அரசியலமைப்புச் சட்டத்தை உற்று நோக்கினால் பல இடங்களில் மதச்சார்பின்மை என்பது முக்கியக் கருதுகோளாக இருப்பதைப் பார்க்கலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரண்டும் முகவுரையில் மட்டுமல்ல, இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கியக் கருதுகோள் ஆகும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும். நிராகரிக்கப்பட்டது வழக்கு மட்டுமல்ல, மதச்சார்பு என்ற கருத்தாக்கமும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.