14 ஆவது இடம் பழனிசாமி
அமெரிக்கப் பயணத்தில் அதிகப்படியான தொழில் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி அதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் தினந்தோறும் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்கிறார்.
தான் ஆட்சியில் இருந்தபோது அனைத்துத் துறைகளையும் தரைமட்டத்துக்கு தாழ்த்தியவர் தான் பழனிசாமி. அதுவும் தொழில் துறையானது தரை மட்டத்தை விட, அடிமட்டத்துக்கு தாழ்ந்தது.
2020 செப்டம்பர் மாதம் அவர் முதலமைச்சராக இருந்தபோது என்ன நிலைமை தெரியுமா?
மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம் - 2029 அடிப்படையில் எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு, 2020 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதில் பதினான்காவது இடத்தில் இருந்தது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி!
ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்காளம், குஜராத், உத்ரகாண்ட், டெல்லி, மகாராஷ்டிரா... ஆகிய மாநிலங்களைத் தாண்டி பழனிசாமி காலத் தமிழ்நாடு இருந்தது. ஒன்றிய அரசு வெளியிட்ட பட்டியல் தான் இது. எளிதாக தொழில்நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் பட்டியல் இது. பதினான்காவது இடத்தில் இருக்கும் பழனிசாமி காலத்தில் தொழில் தொடங்க யார் வருவார்கள்? யார் வந்தார்கள்?
இந்தப் புள்ளிவிபரங்களை வெளியிட்டவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொழில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் முன்னிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் வெளியிட்ட அறிக்கை இது. இப்படி ஒரு பட்டியல் 2018 ஆம் ஆண்டும் வெளியானது. அப்போது 15 ஆவது இடத்தில் இருந்தார் பழனிசாமி. இந்த பழனிசாமிக்கு இன்றைய முதலமைச்சரைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?
2019 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போனார். ரூ.8,800 கோடிக்கு ஓப்பந்தம் போட்டிருப்பதாகச் சொன்னார். அதில் எத்தனை திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார் என்பதை அவரால் சொல்ல முடியுமா? அவசர ஆம்புலன்ஸ் சேவையைப் பார்த்தார். கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைப் பார்வையிட்டார். கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனையைப் பார்வையிட்டார். கால்நடைப் பண்ணையைப் பார்த்தார். 13 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்.
“இங்கிலாந்தில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மருத்துவப் பணியாளர்களின் பணித் திறன் மேம்பட ஒரு ஒப்பந்தம், கிங்க்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் துவங்க ஒரு ஒப்பந்தம், டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த ஒப்பந்தம் ஆகியவை செய்யப்பட்டன” என்றார். அது குறித்து விளக்கம் அளிக்க பழனிசாமி தயாரா?
இவர் மட்டுமா போனார்? துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சென்றார். விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி ஆகிய அமைச்சர்கள் பலரும் சென்றார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு முதலீடு வந்ததா? இல்லை. பழனிசாமி காலத்தில் முதலீடுகள் குறைந்தது என்பதுதான் உண்மை.
2020 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபத்தின்படி பழனிசாமி காலத்தில் முதலீடுகள் குறைந்தது. 2015-–16 நிதியாண்டில் ரூ. 29,781 கோடி முதலீடு கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.14,830 கோடியும் 2017-–18-ம் ஆண்டு ரூ.22,354 கோடியும் 2018-–19-ம் ஆண்டில் ரூ.18,164 கோடியும் வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது.
பழனிசாமி, பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அமைச்சர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, வெளிநாட்டு முதலீடு மேலும் குறைந்து போனது என்பதுதான் உண்மை. அதாவது 2019–-20-ம் ஆண்டில் ரூ.13,135 கோடி மட்டுமே நிதி கிடைத்துள்ளது. முந்தைய 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வெளிநாட்டு முதலீடு தமிழகத்துக்கு கிடைத்திருப்பது அந்த ஆண்டில்தான். இதுதான் பழனிசாமியின் சாதனை மகுடம் ஆகும்.
பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பல்வேறு திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்குப் போனது. அதற்கு உண்மையான காரணம் என்ன என்பது பழனிசாமியின் மனச்சாட்சிக்குத் தெரியும்.
ஆனால் இந்த மூன்றாண்டு காலத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கான முதலீடுகளை தி.மு.க. அரசு ஈர்த்துள்ளது. இவை செயல்பாட்டுக்கு வரும் போது 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங்களும் எந்த நிலைமையில் இருக்கின்றன, எத்தனை செயல்பாட்டுக்கு வந்துள்ளன, மற்றவை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து தெளிவாக அரசின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களும் அரசு நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் இதனை தெளிவுபடுத்தி இருக்கிறார். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அந்நிய முதலீடு குறைந்த போதிலும் தமிழ்நாட்டுக்கான முதலீடு 12.3 விழுக்காடு அதிகம் ஆகி உள்ளது. இதனை பழனிசாமி உணர வேண்டும். இதையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் திறம் இல்லாததால் தான் புலம்பி வருகிறார்.
தொழில் தொடங்க வாய்ப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்த பழனிசாமி காலத் தமிழ்நாட்டை மூன்றாவது இடத்துக்கு நகர்த்திக் கொண்டு வந்திருப்பதுதான் முதலமைச்சரின் மகத்தான சாதனை ஆகும்.