முரசொலி தலையங்கம் (05-09-2024)
தகுதிப்படுத்தும் முதலமைச்சர் !
மாநிலப் பாடத் திட்டத்தைப் பற்றி கவலை தெரிவித்திருந்த ஆளுநர் ரவி, 'போட்டிகள் நிறைந்த உலகத்துக்கு தகுதியான அளவில் பாடத்திட்டம் இல்லை' என்று சொல்லி இருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒவ்வொரு திட்டமும் தமிழ்நாட்டு மாணவ, மாணவியரையும் இளைஞர்களையும் தகுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதை அறியத் தவறிவிட்டார் ஆளுநர். 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடையவேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இது மிகப்பெரிய துணிச்சலான அறிவிப்பு ஆகும்.
இதற்கான மனித வளமும், மனித ஆற்றலும் தமிழ்நாட்டில் இருப்பதால்தான் முதலமைச்சர் அவர்கள் இத்தகைய அறிவிப்பைச் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டை, திறன்மிகு சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், படிக்கும் காலத்திலேயே மாணவ/மாணவிகளுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகள் அளித்து, அவர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் “நான் முதல்வன்” என்ற கனவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இத்திட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 28 இலட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பெற்று வருகின்றனர்.
புதுமைப் பெண் என்பது புதுமையான திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் 3 இலட்சத்து 28 ஆயிரம் மாணவிகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இத்திட்டத்தினால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இளம் வயது திருமணங்கள் குறைந்துள்ளன. இடைநிற்றல் குறைந்துள்ளது. மாணவியரின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. பெண் சக்தி மேம்பட்டுள்ளது. இதே போல் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு அதிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் பெற்று வருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தும் முயற்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும் விட தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 42 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதனால் உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது. வேலை வாய்ப்பும் அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றத் தகுதி படைத்த பணியாளர்களாக தமிழ்நாட்டு இளைஞர்கள் செழு- மைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தைவான் நாட்டைச் சார்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தியாளர். உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை தொகுத்து வழங்கும் நிறுவனம் அது. சமீபத்தில் அவர்களது இரண்டு உற்பத்தி பிரிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பது அதன் சிறப்பு ஆகும். இந்த திட்டத்தில் 41 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதில் 35 ஆயிரம் பேர் பெண்கள். தமிழ்நாட்டில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதனால் உற்பத்தியும் அதிகம் செய்யப்ப- டுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம் உருவாக்கப்படுகிறது.
•முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.10,882 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்ப மிடப்பட்டன.
•உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பும், அம்மாநாட்டிற்கு பின்னரும் நடைபெற்ற பல்வேறு முதலீட்டு மாநாடுகள் மற்றும் பிற நிகழ்வு களின் போது 4,16,001 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.3,24,031 கோடி மதிப்பிலான 224 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
•கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் ரூ.6,64,180 கோடி மதிப்பிலான 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த மூன்றாண்டு காலத்தில் 18,89,234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் ரூ,9,99,093 கோடி மதிப்பிலான 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 4,16,717 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.1,47,460 கோடி மதிப்பிலான 234 திட்டங்கள் உற்பத்தி மேற்கொண்டு (Commenced production) வருகின்றன. 6,13,744 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.2,83,665 கோடி மதிப்பிலான 301 திட்டங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் (Various stages of construction) உள்ளன.
இவற்றை அறிவாரா ஆளுநர்? இதை பாராட்டி இருக்கிறாரா ஆளுநர்? அல்லது இப்படி ஏதாவது ஒரு நிறுவனத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயன்றுள்ளாரா ஆளுநர்? “கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அனைவரும் உயர் கல்வியை அடைய வேண்டும். தடங்கல் ஏற்படுமானால் அதை உடைத்து மாணவ சமுதாயம் வெற்றி பெற வேண்டும்.” என்று சொல்லி அனைவரையும் தகுதிப்படுத்தி வருகிறார் முதலமைச்சர். தகுதிப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு வேலை தரக்கூடிய நிறுவனங்களை மாநிலத்தில் உருவாக்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். இப்படி சங்கிலித் தொடர் போன்ற சாதனைகளைச் செய்து வரும் தி.மு.க. அரசை பாராட்டாவிட்டாலும், தூற்றாமல் இருக்கலாம் மாட்சிமை தாங்கிய ஆளுநர்!