முரசொலி தலையங்கம்

”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

எதிர்கொள்ளும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இத்தகைய ஒரு செயல் நடக்காது.

”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (29- 04- 2024)

சந்தேகங்களுக்கு அப்பால்....

மின்னணு முறையில் நம்பகத்தன்மை இருக்கிறது என்றும் ஓட்டுச்சீட்டுக்கு மீண்டும் மாற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் சந்தேகங்களுக்கு அப்பால் செயல்பட வேண்டிய கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.

இப்போது பிரச்சினை என்பது மின்னணு முறை நம்பகத்தன்மை இருக்கிறதா என்பது அல்ல. மின்னணு முறையைக் கையாள்பவர்கள் நம்பகத்தன்மை உள்ளவர்களா? மின்னணு முறையில் முறைகேடு செய்ய முடியுமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. இதை வைத்திருப்பவர்கள் முறைகேடு நடத்த முயற்சிப்பார்களா இல்லையா என்பது தான் பிரச்சினை. இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் தீர்க்க முடியாது. தேர்தல் ஆணையம் தான் மெய்ப்பிக்க வேண்டும். தனது துல்லியமான, துணிச்சலான நடவடிக்கைகள் மூலமாக அதனை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட மூன்று அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை மிகமிக எளிமையானது. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு சட்டசபைத் தொகுதியில் ஏதேனும் 5 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். அப்படி இல்லாமல் முழுமையாக எண்ண வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்கள். மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் - ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி சரி பார்க்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை. ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று இன்னொரு அமைப்பும் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபரங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மின்னணு முறையில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

அதேநேரத்தில் தேர்தல்கள் முறையாக நடைபெற வேண்டும் என்பதை நீதிபதிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். நீதிபதி திபங்கர் தத்தா தனியாக எழுதிய தீர்ப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். “தேர்தல் முறையின் புனிதத்தன்மை என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் தேர்தல் நடத்துவது என்பது மிகப்பெரிய வேலை. 97 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் ஆகும். இந்த சவால்களை முறியடித்து தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு நீதிமன்றத்தின் எதிர்மறையான தீர்ப்பு தேர்தல் ஆணையத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார் நீதியரசர்.

“தற்போதைய ஓட்டுப்பதிவு முறை வாக்காளர்களை ஏமாற்றிவிடக் கூடாது. மக்களின் தீர்ப்பு, ஓட்டு எண்ணிக்கையில் பிரதிபலிக்க வேண்டும். 70 ஆண்டுகளாக நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்திய பெருமை தேர்தல் ஆணையத்தையும், மக்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கையையுமே சாரும். நியாயமான சந்தேகம், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு விரும்பத்தக்கது” என்றும் நீதியரசர் திபங்கர் தத்தா குறிப்பிட்டுள்ளார்.

”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?

வாக்காளர் கையில் ஒப்புகைச் சீட்டைக் கொடுத்து அவற்றை பெட்டியில் போட்டு அவற்றை முழுமையாக எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தாலும் சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

* ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவதற்கு மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்துவது பற்றியோ, கட்சிகளும் சின்னங்களும் கூடிய ‘பார் கோட்’ பயன்படுத்துவது பற்றியோ தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம்.

* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களைப் பொருத்திய பிறகு அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை 45 நாட்கள் சீல் வைத்து பராமரிக்க வேண்டும்.

* தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 2 மற்றும் 3 ஆகிய இடங்களைப் பிடித்த வேட்பாளர்களின் வேண்டுகோளின் பேரில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட மைக்ரோசிப்புகளை சரிபார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களைத் தயாரித்த நிறுவனத்தின் பொறியாளர்கள் இதனைச் செய்யலாம்.

* தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் வேட்பாளர்கள் பணம் செலுத்தி, மைக்ரோசிப்புகளை சரிபார்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி சரிபார்க்கப்படும் போது இயந்திரத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால், வேட்பாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட வேண்டும்.

- ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள வேட்பாளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண இந்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிராக இதுவரை உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் 40 முறை வழக்குகள் போடப்பட்டதாகவும், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சொல்லி இருந்தார். இதுவரை சந்தேகம் இருந்தது மின்னணு இயந்திரங்களின் மீது மட்டும் தான். ஆனால் இம்முறை தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகமாக இருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய ஒரு குழு, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அதனை மீறி, ஒன்றிய அமைச்சரை உள்ளடக்கிய குழுவாக அதனை மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டிய நிலைமையில் மார்ச் மாதம் 9 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று பதவி விலகினார். 2027 ஆம் ஆண்டு டிசம்பர் வரைக்கும் பதவிக்காலம் இருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டு காலம் அவருக்கு பதவிக் காலம் இருக்கும் நிலையில் அவர் தனது பதவியை விட்டு விலகினார். தேர்தல் ஆணையர் அனுப் பாண்டே, கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்றுவிட்டு போய்விட்டார். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இத்தகைய ஒரு செயல் நடக்காது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரும் புதிய தேர்தல் ஆணையர்களாக கடந்த மார்ச் மாதம் தான் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள் இவர்கள் இருவரும். ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசுகிறார்’ என்று ராகுலுக்கு நேரடியாகவும், இதே குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை மோடிக்கு அனுப்புவதற்கு பதிலாக பா.ஜ.க. தலைமைக்கும் அனுப்பும் அளவுக்குத்தான் தேர்தல் ஆணையம் இங்கே செயல்படுகிறது.

எனவே மின்னணு இயந்திரத்தை விட அதை இயக்கும் மனிதர்கள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறோம்.

banner

Related Stories

Related Stories