முரசொலி தலையங்கம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : “இந்தியாவுக்கான திராவிட மாடல்...” - முரசொலி புகழாரம் !

‘மாநிலங்களை மதிக்கும் பிரதமர் வருவார்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருவதையே உறுதி செய்கிறது காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : “இந்தியாவுக்கான திராவிட மாடல்...” - முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவுக்கான திராவிட மாடல் !

பல்வேறு முற்போக்கு கருத்துகளை - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையானது பதிவு செய்தது. இதனை வெளியிட்ட போது, ‘பெரும்பாலும் ஒன்றிய அரசு செய்ய வேண்டிய வாக்குறுதிகளாக இருக்கிறதே?’ என்று ஒரு நிருபர், கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்டார்.

“ஆமா! நாங்க தானே ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போகிறோம். அதனால் தான் அதைப் பற்றி அதிகமாகச் சொல்லி இருக்கிறோம்” என்று பதிலளித்தார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘தி.மு.க.வின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா?’ , ‘இவர்களது வாக்குறுதிகளுக்கும் அகில இந்திய கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’, ‘தி.மு.க.வின் வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகள்தான்’ - என்றெல்லாம் தேர்தல் களத்தில் பலராலும் கிண்டலடிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை.

* நீட் தேர்வு கட்டாயமில்லை.

* பா.ஜ.க. வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

* திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

* பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு செய்யப்படும்.

* செஸ் வரி வசூலில் மாநில அரசுகளை ஏமாற்றும் பா.ஜ.க.வின் சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

* தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும்.

* விவசாய இடுபொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது.

* ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* சாதி வாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.

* ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது.

* பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப் பட்டோருக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.

* புதுச்சேரிக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் மாநில அந்தஸ்து தரப்படும்.

* 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.

* மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : “இந்தியாவுக்கான திராவிட மாடல்...” - முரசொலி புகழாரம் !

* விவசாயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் தரப்படும்.

* மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்.

* பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டு வரப்படும்.

* ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் தரப்படும்.

* மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம் வழங்கப்படும்.

* தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகளின் ஆலோசனைப்படி திருத்தி அமைப்போம்.

* அனைத்து விசாரணை அமைப்புகளும் நாடாளுமன்ற சட்டமன்றக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

- ஆகிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதாவது, திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் மூலமாக இந்தியா முழுமைக்குமான திராவிட மாடல் ஆட்சியை அமைப்பதற்கான வரைபடமாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.

இந்தியா கூட்டணி அமையுமானால் அது கூட்டாட்சியை மதிக்கும் ஜனநாயக மக்களாட்சியாக அமையும் என்பதை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. இது தான் மிகமிக முக்கியமானது.

“இந்திய அரசியலமைப்பு இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பை அழிக்க எதையும் செய்வார்கள். அனைத்துப் பிரச்சினைகளையும் மிகக் கவனமாகப் பரிசீலித்து, இந்தியாவை ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக நிலைநிறுத்துவதில் தி.மு.க. உறுதி கொண்டுள்ளது. எனவே, பாசிச வெறிபிடித்த, மத ஆதிக்கவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்திட அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைத் தேர்தல் அறிக்கையில் இணைத்து வலியுறுத்துகிறது.

மாநிலங்களை வலுவிழக்கச் செய்யவும், அவற்றின் பங்கைக் குறைக்கவும் அனைத்து முயற்சிகளும் பா.ஜ.க அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நன் மதிப்பினைக் குறைக்கும் கருவியாக ஆளுநர், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை போன்ற ஒன்றிய அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலங்களில் நிதி மேலாண்மையில் தலையிடுவதுடன் உரிய நியாயமான நிதிப் பகிர்வை வழங்குவதில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : “இந்தியாவுக்கான திராவிட மாடல்...” - முரசொலி புகழாரம் !

மாநில சுயாட்சி மற்றும் மாநில உறவுகள் குறித்து ஆராய இதுவரை அமைக்கப்பட்ட நான்கு குழுக்களின் பரிந்துரைகளையும் முழுமையான விவாதங்களுக்கு உட்படுத்தி மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு.கழகம் ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும்.” -என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வலியுறுத்தியது. இக்கவலைகளை சரிசெய்யும் முறையீடுகளில் கவனம் செலுத்தி இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை.

மாநிலங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது ஜி.எஸ்.டி. வரியாகும். இதனைச் சரி செய்வதும், நீட் தேர்வு குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்பதும், மாநில அரசுகளுடன் ஆலோசித்து கல்விக்கொள்கையில் திருத்தம் செய்யப்படும் என்பதும், பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்கள் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு நடத்தப்படும் - ஆகிய கருத்துகள் மிகமிக முக்கியமானவை.

மாநிலங்களின் கோரிக்கையை - பலதரப்பட்டவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆட்சி நடத்தினாலே அந்த ஆட்சி மீது விமர்சனங்கள் குறைந்துவிடும். ஆனால் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி என்பது ஒற்றை மனிதர் - ஒற்றைத் தத்துவத்தின் ஆட்சியாக அமைந்திருப்பதால் யாரையும் திருப்திப்படுத்தவில்லை. கூட்டாட்சி அரசை அமைத்துவிட்டால், அதுவே அனைவர்க்குமான அரசாக, மிகச்சிறந்த அரசாக மாறிவிடும்.

‘மாநிலங்களை மதிக்கும் பிரதமர் வருவார்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருவதையே உறுதி செய்கிறது காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை.

- முரசொலி தலையங்கம்

08.04.2024

banner

Related Stories

Related Stories