முரசொலி தலையங்கம்

“ஆளத் தகுதியற்றவர்களால் பத்தாண்டுகளாக இந்தியா ஆளப்பட்டுள்ளது” - முரசொலி தாக்கு !

வேலைவாய்ப்பின்மையை மத்திய அரசால் தீர்க்க முடியாது என்று ஆலோசகர் சொல்கிறார். ஆனால், ‘அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது’ என்று பிரதமர் இதுவரை சொல்லி வந்தாரே! அதற்கு என்ன பொருள்?

“ஆளத் தகுதியற்றவர்களால் பத்தாண்டுகளாக இந்தியா ஆளப்பட்டுள்ளது” - முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

வேலைவாய்ப்பு - கைவிரிப்பு

“வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையை மத்திய அரசு தீர்க்க முடியாது” - என்று பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் சொல்லி இருக்கிறார். அதாவது வேலையில்லாத் திண்டாட்டத்தை பா.ஜ.க. அரசு தீர்க்கவில்லை என்பதே அவர் சொல்ல வருவது ஆகும்.

‘வேலைவாய்ப்பின்மையை மத்திய அரசால் தீர்க்க முடியாது’ என்றால், ஆளத் தகுதியற்றவர்களால் பத்தாண்டுகளாக இந்தியா ஆளப்பட்டுள்ளது என்று பொருள்!

பிரதமர் ஆவதற்கு முன்னால் மோடி சொன்னது என்ன? ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்’ என்பது ஆகும். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம் பெற்றது. போகுமிடமெல்லாம் இதனைத்தான் மோடியும் சொன்னார். மோடிக்கு ஆதரவாக இளைஞர்கள் திரண்டதும் இதனால்தான். குஜராத் மாநிலத்தை அவர் ஏதோ தேனாறும் பாலாறும் ஓடும் மாநிலமாக ஆக்கிவிட்டதைப் போலவும், அதே போல் இந்தியாவை ஆக்கப் போவதாகவும் இளைஞர்களை நம்ப வைத்தார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கிறார் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்.

வேலைவாய்ப்பின்மையை மத்திய அரசால் தீர்க்க முடியாது என்று இப்போது ஆலோசகர் சொல்கிறார். ஆனால், ‘வேலைவாய்ப்பின்மையே இந்தியாவில் இல்லை, அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது’ என்று பிரதமர் இதுவரை சொல்லி வந்தாரே! அதற்கு என்ன பொருள்?

“ஆளத் தகுதியற்றவர்களால் பத்தாண்டுகளாக இந்தியா ஆளப்பட்டுள்ளது” - முரசொலி தாக்கு !

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (ஐ.ஹெச்.டி.) ஆகியவை இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளன. ‘இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை - 2024’ என்று இதற்குப் பெயர். அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

« 2012ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இன்று வேலைவாய்ப்பின்மை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

« 2000 ஆம் ஆண்டில் கல்வித் தகுதிபெற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 35.2 விழுக்காடாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் 65.7 விழுக்காடாக உள்ளது.

« இந்தியாவில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப் பட்டவர்களில் இளைஞர்கள் 83 விழுக்காடு

« கிராமப்புற இளைஞர்களில் 17.5 விழுக்காடு இளைஞர்கள் மட்டுமே நிரந்தர வேலையைப் பெற்றுள்ளார்கள்.

« தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டிலிருந்து 26 விழுக்காடாகவே இருக்கிறது.

« நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பணியாற்றும் இளைஞர்களின் விழுக்காடு 2012 இல் 42 ஆக இருந்து, இப்போது 37 ஆக குறைந்துவிட்டது. - இப்படி பல்வேறு தரவுகள் அந்த அறிக்கையில் உள்ளன.

‘இந்த அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்று மேடைதோறும் முழங்குகிறார் பிரதமர் மோடி. ஆனால் உண்மை இதுதான். ‘ரோஜ்கர் மேளா’ என்பதை கடந்த ஆண்டு நடத்தினார் பிரதமர். வரும் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகச் சொன்னார். செய்து தரப்பட்டதா பத்து லட்சம் வேலை வாய்ப்புகள்?

‘இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்’ வெளியிட்ட அறிக்கைப்படி 2023ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விழுக்காடு அதிகம் ஆகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு மட்டும் வேலையின்மை காரணமாக இந்தியாவில் 3 ஆயிரத்து 548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

“சிறு குறு நிறுவனங்களைப் புறக்கணித்ததால்தான் வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட்டது” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கருத்துத் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசு முதலாளித்துவ நோக்கில் முதலீடுகளை ஈட்டி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களைப் புறந்தள்ளுவது, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஒருபோதும் துணை நிற்காது. வேலை வாய்ப்பில் ஏற்பட்டுள்ள இப்பின்னடைவுக்கு மனித வளர்ச்சியில் ஒன்றிய அரசு கவனம் செலுத்தாததுதான் முக்கியக் காரணம் ஆகும்” என்று தெளிவாக விளக்கி உள்ளார்.

“ஆளத் தகுதியற்றவர்களால் பத்தாண்டுகளாக இந்தியா ஆளப்பட்டுள்ளது” - முரசொலி தாக்கு !

பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் இவற்றுக்கெல்லாம் முழுமுதல் காரணம். பெருந்தொழில்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதும், பெரும் முதலீடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதும் இதற்குக் காரணம். பெரும் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் போது அதில் வேலைவாய்ப்புகளும் உருவாகும் தன்மையை வலியுறுத்துவது இல்லை பா.ஜ.க. அரசு. பெருந்தொழில் நிறுவனங்களை விட சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும். ஆனால் அதனை ஊக்குவிப்பது இல்லை.

இன்று வரை மர்மமாக இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுத் தடையும் - மிகப்பெரிய அளவில் கொடூரமாக அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் அமைப்புசாராத் தொழில்களையும் பாதிக்கு மேல் அழித்துவிட்டதும் வேலைவாய்ப்பின்மைக்கு மிக முக்கியக் காரணம் ஆகும். கொரோனாவால் முடக்கப்பட்ட தொழில்களும், அதனால் பறிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளும் அதிகம். அவை இரண்டில் இருந்தும் மீட்பதற்கான எந்தத் திட்டத்தையும் மோடி அரசு கொண்டு வரவில்லை. அது பற்றிச் சிந்திக்கவுமில்லை.

நமக்குக் கிடைக்கும் புள்ளிவிபரங்கள் அனைத்தும் வேலை தேடுபவர்களின் புள்ளிவிபரங்கள்தான். படித்து முடித்துவிட்டு வேலை தேடாதவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இன்னும் அதிகம் ஆகும். இவை எதைப் பற்றியும் அக்கறை இல்லை பா.ஜ.க. அரசுக்கு என்பதைத்தான் பொருளாதார ஆலோசகரின் கூற்று மெய்ப்பிக்கிறது.

இன்னொன்றையும் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சொல்லி இருக்கிறார். “சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் மத்திய அரசால் தீர்வு காண முடியாது” என்கிறார். அப்படியானால் ஆட்சி, அதிகாரம் எதற்கு? கொடியேற்றவும், வெளிநாடு செல்லவும்தானா? அதிகாரத்தை அனுபவிப்பதற்கு மட்டும்தானா? சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்துவிட்டதாகச் சொன்னதும் நாடகம் தானே? இந்திய இளைஞர்களின் கனவைச் சிதைத்த இவர்களுக்கு வாக்களிக்கலாமா?

- முரசொலி தலையங்கம்

29.03.2024

banner

Related Stories

Related Stories