முரசொலி தலையங்கம்

போதை மருந்துக்கு தலைநகரே மோடியின் குஜராத் மாநிலம்தான் : ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய முரசொலி !

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து போதைப் பொருள் விற்கும் அளவுக்கு ‘பாதுகாப்பான’ மாநிலமாக குஜராத் இருக்கிறது.

போதை மருந்துக்கு தலைநகரே மோடியின் குஜராத் மாநிலம்தான் : ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (08.03.2024)

போதையின் தலைநகர் குஜராத்

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் தேடப்படும் நபர் ஒருவர் கட்சியில் இருந்தார். இதனை அறிந்ததும் அவர் நீக்கப்பட்டு விட்டார். தவறான நபர் என்று புகார் வந்ததும் அவரைக் கட்சியை விட்டு நீக்குவதற்கு தி.மு.க. தயங்கவில்லை. உடனே, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகி விட்டதாக பொய்ப் புகார்களைக் கிளப்புகிறார்கள். இதையே பிரதமர் மோடியும் சொல்லி இருக்கிறார்.

“ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆதரவில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது என் மனதை வருத்தமடையச் செய்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என்பதே மோடியின் உத்தரவாதம்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நாட்டிலேயே அதிகமான போதைப் பொருள் விற்பனையாகும் மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மாநிலங்களவையில் வைக்கப்பட்ட அறிக்கையில் இது இருக்கிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ராஜஸ்தானில்தான் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது பா.ஜ.க. ஆளும் மாநிலம் ஆகும்.

« ராஜஸ்தான்

« பஞ்சாப்

« மத்தியப்பிரதேசம்

« ஜார்கண்ட்

« மணிப்பூர்

« குஜராத்

« அரியானா

« பீகார்

« மேற்கு வங்கம்

« உத்திரப்பிரதேசம் --– ஆகிய பத்து மாநிலங்களில்தான் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏழு மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும், ஆளும் கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள். பிரதமர் மோடியின் உத்தரவாதம் ஏன் அங்கு செயல்படுத்தப்படவில்லை? அந்த மாநிலத்தில் போய் போதை மருந்து ஒழிப்பு பற்றி பேசுகிறாரா பிரதமர்?

போதை மருந்துக்கு தலைநகரே குஜராத் மாநிலம்தான். இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலின் தலைநகராக இருப்பது குஜராத் மாநிலம்தான். கடந்த 1ஆம் தேதியன்று குஜராத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறிய வகை கப்பலில் கொண்டு வந்துள்ளார்கள். 3,300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இவை. ஐந்து பேரைக் கைது செய்தது காவல் துறை. இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து போதைப் பொருள் விற்கும் அளவுக்கு ‘பாதுகாப்பான’ மாநிலமாக குஜராத் இருக்கிறது.

போதை மருந்துக்கு தலைநகரே மோடியின் குஜராத் மாநிலம்தான் : ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய முரசொலி !

கடந்த செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகருக்கு அருகில் உள்ள மிதி ரோகர் என்ற கிராமத்தில் ஒரு கிலோ எடையில் 80 பாக்கெட்டுகள் கிடந்தன. பொதுமக்கள் பார்த்து போலீஸுக்கு சொன்னார்கள். 2022, 23 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் இருந்து ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்திருப்பதாக அந்த மாநில அரசே சொல்லி இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்டதே இவ்வளவு என்றால் – - புழக்கத்தில் விடப்பட்டது எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்?

2017 –- 21 ஆகிய ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹார்ஸ் சங்வி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 3 போதை மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. போதை மருந்துகள் அதிகம் வந்து இறங்குவது முந்த்ரா துறைமுகத்தில் என்று செய்திகள் வருகின்றன. குஜராத் மாநில கடற்பகுதியில், ஒரு கப்பலில் இருந்து 1,500 கிலோ ஹெராயினை இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு கைப்பற்றினார்கள். ஒரு வணிக கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ஹெராயினின் மதிப்பு கிட்டத்தட்ட 550 மில்லியன் டாலர் இருக்கும் என கடலோரக் காவல்படை அறிக்கையே வெளியிட்டது. “இவ்வளவு போதைப் பொருள்கள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை” என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா சொன்னார்.

ஹெராயினின் முக்கிய மூலப்பொருளாக ஓபியம் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளர்களால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் குஜராத் வழியாக வருகிறது. ஆப்கானிஸ்தானில் தயாராகும் ஹெராயின்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்குக் கடத்தப்படுவதாக ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் கூறுகிறது. வட மாநிலமான பஞ்சாப், ஹெராயினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

2021 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் வந்து இறங்கியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய போதைப் புதையலை குஜராத் காவல்துறையினர் பிடித்தார்கள். அவர்கள் நடத்திய சோதனையில் குஜராத் கடற்கரைக்கு அருகே கடத்தல் படகு பிடிபட்டது. அதில், சாக்குப் பைகளில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா, மெத்தாம்பிடமைன் மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் 760 கிலோ கண்டுபிடிக்கப்பட்டன. இதன் சர்வதேச மார்க்கெட் விலை ரூ.2,000 கோடி. அண்டை நாட்டில் இருந்து செயல்படும் போதை கடத்தல் கும்பல், இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு கடல் மார்க்கமாக போதைப் பொருட்களை சப்ளை செய்து வருகின்றன என்று அறியப்பட்டது.

சமீப காலமாக குஜராத் துறைமுகங்களைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “குஜராத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் அங்கு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன, கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? இந்த மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்?” என அப்போதே கேள்வி எழுப்பினார். ஆனால் பதில் சொல்வதற்குத்தான் யாரும் இல்லை!இப்படிப்பட்ட செய்திகளை மறந்து விட்டுத்தான் பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். குஜராத் முந்திரா துறைமுகத் தகவல்கள் ஏன் அவரை வருத்தமடைய வைக்கவில்லை?

banner

Related Stories

Related Stories