முரசொலி தலையங்கம்

நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் பொய்யுரையை வாசித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் - முரசொலி விமர்சனம் !

நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் பொய்யுரையை வாசித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் - முரசொலி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (3.2.2024)

பொய்யுரை

மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பொய்யுரை ஆற்றி, நாடாளுமன்றத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்தப் புதிய கட்டடம் திறக்கப்பட்டதாகவும், இந்த புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புவதாகவும் குடியரசுத் தலைவர் சொல்லியிருக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு இல்லை. அது அவர் மனதுக்குள் வந்து போயிருக்கும்!

இந்தப் புதிய நாடாளுமன்றத்தில்தான் புகைக் குண்டு வீசப்பட்டது. அந்தப் ‘பெருமை’யும் அவர் மனதுக்குள் வந்து போயிருக்கும்! ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல நூற்றாண்டுகளின் கனவாக இருந்ததாம். அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறதாம். அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கும் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. அதுவும் அவர் மனதுக்குள் வந்து போயிருக்கும். பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் எப்போது நடந்துள்ளது? பா.ஜ.க. பதில் சொல்லியாக வேண்டிய எதுபற்றியும் விவாதிப்பதே இல்லை. ரபேல் ஊழல் குறித்து விவாதிக்கவில்லை. அதானி பற்றி விவாதிக்கவில்லை. குஜராத் படுகொலை குறித்து விவாதிக்கவில்லை. மணிப்பூர் குறித்து விவாதிப்பது இல்லை. இந்தியாவில் உள்ள முக்கியப் பிரமுகர்களது செல்போனை ஒட்டுக் கேட்டது பற்றி விவாதிக்கவில்லை. எனவே எந்த அமிர்த காலத்தில் இது கட்டப்பட்டாலும் அந்திம காலத்தில் பயன்படுத்துவதைப் போலத்தான் பயன்படுத்துகிறது பா.ஜ.க.

நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் பொய்யுரையை வாசித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் - முரசொலி விமர்சனம் !

பா.ஜ.க. அரசாங்கத்தின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த பத்து ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் சொல்லி இருக்கிறார். ‘வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை குழந்தைப் பருவம் முதல் இந்தியா கேட்கிறது’ என்றும், ‘உண்மையில் தற்போதுதான் வறுமை நம் வாழ்வில் ஒழிக்கப்படுவதைக் காண்கிறோம்’ என்றும் குடியரசுத் தலைவர் சொல்லி இருக்கிறார்.

கடந்த ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில் இந்தியாவில் பட்டினி அதிகரித்துள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. உலகப் பட்டினிக் குறியீட்டில் ( Global Hunger Index) இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான இடத்தை அடைந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 125 நாடுகளில் 111 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது ‘மோடி’யின் இந்தியா.

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும், வடகிழக்கில் பிரிவினைவாதச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார் குடியரசுத் தலைவர். அவர் இந்தியாவில்தான் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது. மணிப்பூரில் நடப்பது குடியரசுத் தலைவருக்குத் தெரியுமா?

2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி அன்று தொடங்கியது மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை. சில மாதங்களுக்கு முன்னால் லேசாக அடங்கி இருந்தது. 2024 ஆம் ஆண்டும் தொடங்கிவிட்டது.

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி காலையில் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தில் ஜூபி எனும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதியன்றும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டார்கள். ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.

இப்படி எட்டு மாதங்களாக எரிகிறது மணிப்பூர். எட்டு மாதங்களில் ஒரே ஒருநாள் கூட பிரதமர் நரேந்திரமோடி, மணிப்பூர் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 180 பேர் இறந்துள்ளார்கள். எவரொருவர் வீட்டுக்கும் பிரதமர் செல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்றே மூன்று நாட்கள் வந்து போனதோடு சரி. இதுதான் பழங்குடி மக்களுக்கான பாதுகாப்பா?

நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் பொய்யுரையை வாசித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் - முரசொலி விமர்சனம் !

குடியரசுத் தலைவர் சொன்னதில் மாபெரும் பொய் என்பது, “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது” என்பது ஆகும். முப்பது ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு நிறைவேறிவிட்டதாம். ஒரு பெண்ணை வைத்தே, பெண்களை ஏமாற்ற பொய் சொல்ல வைத்திருக்கிறார்கள். நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே 33 விழுக்காடு தரப்படும் என்று பா.ஜ.க. அரசு சொல்லவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு –- என்ற இரண்டு மாபெரும் தடுப்புச் சுவர்களை எழுப்பி இருக்கிறார். இதுதான் பெண்களுக்கு எதிரான சதிச் செயல் ஆகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பும் –- தொகுதி வரையறையும் முடிந்த பிறகு என்றால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைக்கும். 2029ஆம் ஆண்டு -– அதாவது இன்னும் 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறப்போகும் சட்டத்தை –- இன்று நிறைவேற்றி விட்டதாகக் கணக்குக் காட்டி -– கண்கட்டி வித்தை காட்டியது பா.ஜ.க. அதைத்தான் ‘சாதனை’ என்கிறார் குடியரசுத் தலைவர்.வரி செலுத்துவோர் அதிகமாகிவிட்டார்கள் -– டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்று சொல்லிக் கொள்வது மட்டும்தான் இவர்களது ஒரே சாதனை ஆகும்.

வரி செலுத்துவோர் அதிகமானதால் பலன் அடைவது ஒன்றிய அரசு மட்டும்தான். அந்தப் பணம் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் போய்ச் சேர்கிறது. மாநிலங்கள் கையேந்திக் கொண்டுதான் இருக்கின்றன. மாநிலங்களிடம் இருந்த நிதி உரிமையைப் பறித்ததுதான் ஜி.எஸ்.டி.யின் சாதனையாகும். மொத்தத்தில் பொய்யுரையை வாசித்திருக்கிறார் குடியரசுத் தலைவர்.

banner

Related Stories

Related Stories