உணர்வோசை

சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை: இறந்து 55 ஆண்டுகள்.. ஆனால் இன்றும் ஆள்கிறார் ‘அண்ணா’- சிறப்புக் கட்டுரை!

இந்தியா ஒன்றியங்களின் அரசு என்று குறிப்பிடுகிறது என்றால், அண்ணா இறந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அண்ணா தான் ஆண்டு கொண்டிருக்கிறார் என்று தானே பொருள்!

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

I belongs to dravidian stock. தற்போது தமிழ்நாட்டைத் தாண்டி தென்னிந்திய மாநிலங்களிலும் பரவலாகப்பேசப்படும் வாசகம். இந்த வாசகத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறதென்றால் அதைச் சொன்னவர் அவ்வளவு முக்கியமானவர். இன்னும் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தேவையாகவும் இருப்பவர். வேறு யாருமல்ல, பண்ணையார்களின் ஆட்சி என்று சொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியினரின் ஆட்சிக்கு நிரந்தரமாக முடிவுகட்டி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் திராவிடக் கட்சிகளுக்கு தமிழ்நாட்டை ஆள அடித்தளத்தைப் போட்ட சி.என்.அண்ணாதுரை என்கிற அண்ணா தான்.

ஒடுக்கப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டு மக்களை தனது தெளிவான கொள்கைகளாலும், மக்களுக்கான அரசியலை செய்தும் கோடிக்கணக்கான இதயங்களை நேரடியாகப் போய்ச் சேர்ந்தவர் அண்ணாதுரை தான். ‘அண்ணா’ என்ற பெயருக்கு அவ்வளவு வலிமை இருந்தது. அதனால் தான் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது தனது கட்சியின் பெயரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வைத்தார். அ.தி.மு.க.வின் கொள்கை என்னவென்று கேட்டபோது ‘அண்ணாயிசம்’ என்று அவரால் தைரியமாக சொல்ல முடிந்தது. அது தான் அண்ணாவின் வலிமை.

அண்ணா மாநிலங்களவையில் முதல் முறையாகப் பேசுகிறார். அவையில் நேரு உள்ளிட்ட பலர் இருக்க, தனது கன்னி உரையை ஆரம்பிக்கிறார். “நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன். சுய நிர்ணய உரிமையே எங்களின் தேவை. இந்த அவையின் உறுப்பினர்கள் காட்டிய அன்பை பல நேரங்களில் பார்த்தேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. சில ஹிந்தி மொழி பேசும் உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை அந்த அன்பு மறக்கடிக்க வைக்கிறது.

உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசைவேறு, யதார்த்தம் வேறு” என்று தொடர்ந்து அண்ணா பேச, நேரு உள்பட மொத்த அவையும் ரசித்துக் கேட்டது. இடையில் மற்ற உறுப்பினர்கள் இடையிடையே குறுக்கிட்டனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் அண்ணாவின் கன்னிப் பேச்சில் குறுக்கீடுகள் இருந்தது போல, வேறு யாருக்கும் இருந்ததில்லை ஏனென்றால் கன்னிப் பேச்சில் குறுக்கீடுகள் செய்யக் கூடாது என்பது அவை மரபு. தனது முதல் உரை பாராளுமன்றத்தில் ஒரு தத்துவவிவாதத்தை உருவாக்கும். அதில் குறுக்கீடுகளும் கேள்விகளும் இருந்தால் தனது கொள்கையை இன்னும் விரிவாக விவாதிக்க முடியும் என்று தெரிந்தால்தான், 'இது என் கன்னிப்பேச்சு தான். ஆனால் குறுக்கீடுகளைக் கண்டு நான் கூச்சப்படுபவன் அல்ல. குறுக்கீடுகளை விரும்புகிறவன்' என்று அண்ணா பேசினார்.

அண்ணா ஒரு தேர்ந்த ஜனநாயகவாதி என்பதற்கு இதைவிடச் சான்று வேறு எதுவும் தேவையிருக்காது. தான் பின்பற்றிய கொள்கை இறைமறுப்புதான் என்றாலும், தான் கட்சி ஆரம்பித்த போது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறியதோடு, ‘பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்’ என்று கூறி அனைத்து மக்களையும் தனது பக்கம் ஈர்த்துக்கொண்டவர் அண்ணாதுரை தான்.

அதனால்தான் அவர் பின்னால் கோடிக்கணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். கையைக் காட்டினால் பாயும் அளவிற்கான கொள்கை மறவர்கள் இருந்தாலும் அவர்களை கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு என்ற மூன்று வார்த்தைகளால் கட்டிப்போட்டதோடு, அவர்களை நல்வழிப்படுத்தவும் செய்தார்.

தமிழ்நாடு தற்போது இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்ட அண்ணா தான் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் விமர்சகர்களும், சுயமரியாதை, மாநில சுய ஆட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட எவற்றையும் அண்ணா பேசியதைப் போன்று வேறு யாராலும் பேச முடியாது. திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்திய அவர் இந்தியாவிற்கு ஆபத்து வந்தபோது அந்தகோரிக்கையை கைவிடவும் தயங்கவில்லை. ஆனால், “திராவிடநாடு கோரிக்கைக்கான தேவை இன்னும் அப்படியே தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

நாட்டிற்கு ஆபத்து வந்தபோது தனது கோரிக்கையை விட்டுக்கொடுத்த அண்ணாவிற்கு இருந்த நாட்டுப்பற்றை விட வேறு யாருக்கு இருக்க முடியும். முதலமைச்சராக இருந்தது இரண்டு ஆண்டுகளே என்றாலும் அண்ணா செய்ய வேண்டிய மிக முக்கிய செயல்களை செய்துவிட்டார். சுயமரியாதை திருமணத்துக்குச் சட்டஅங்கீகாரம் கொடுத்தது, மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டியது, இருமொழிக்கொள்கையை அறிவித்தது தான் அண்ணா செய்த முக்கிய செயல்கள்.

இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராகப் பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார். அவர் புற்று நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோதிலும், அவர் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டார். அவருக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்ததால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைய செய்தது.

அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு ‘கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்' இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.

ஒன்று, - சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம்.

*இரண்டு,- தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம்.

மூன்று, - தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு.

இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா?

ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்’ என்று பேசியிருக்கிறார்.

மும்மொழிக் கொள்கை, மாநில சுயாட்சிக்கு குந்தகம், மதவாதம் ஆகிய பேச்சுகளின் போதெல்லாம் மக்கள் வெகுண்டெழுந்து இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், நாடே மதவாதத்தின் பின்னால் போக தயாராகும் போது இன்னும் ஒரு மாநிலம் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசுகிறது என்றால், மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசு என்று கூறும் நிலையில் தமிழ்நாடு மட்டும் அண்ணாவைப் போலவே இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு; இந்தியா ஒன்றியங்களின் அரசு என்று குறிப்பிடுகிறது என்றால், அண்ணா இறந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அண்ணா தான் ஆண்டு கொண்டிருக்கிறார் என்று தானே பொருள்!

banner

Related Stories

Related Stories