முரசொலி தலையங்கம்

“காந்திஜி - நேதாஜி - ரவிஜி : தேசபக்தி நாடகங்கள் போடும் சாவர்க்கரின் வாரிசுகள்” - முரசொலி கடும் விமர்சனம்!

தங்கள் அலுவலகங்களில் அரை நூற்றாண்டுக் காலம் தேசியக் கொடியை ஏற்றவும் இல்லை. இத்தகைய கூட்டம் தேசபக்தி வகுப்பெடுப்பதைப் பார்க்கும் போது குமட்டுகிறது.

“காந்திஜி - நேதாஜி - ரவிஜி : தேசபக்தி நாடகங்கள் போடும் சாவர்க்கரின் வாரிசுகள்” - முரசொலி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காந்திஜி - நேதாஜி - ரவிஜி

"இந்தியாவுக்கு சுதந்திரத்தை காந்திஜி வாங்கித் தரவில்லை, நேதாஜிதான் வாங்கித் தந்தார்" என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் ரவிஜி. ஆளுநர், அன்னாரது பேச்சில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்த பாசம் பொங்கி வழிகிறது. அது நேதாஜி மீதான உண்மையான பாசம் அல்ல. எதையாவது சொல்லி காந்தியடிகளை மட்டுப்படுத்த வேண்டும். அவ்வளவு தான். இந்த நாட்டில் காந்தி பக்தர்கள் யாராவது இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா என்றால் இல்லை!

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை ஆளுநர் ரவிக்கு உண்டா? இவரது இந்து மகாசபைத் தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அந்தக் காலத்தில் நேதாஜியை ஆதரித்ததா? போஸின் இந்திய தேசிய ராணுவத்தை ஆதரித்ததா? பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கட்டமைத்துக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷ் படைகளுக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தவர்தான் இந்து மகாசபைத் தலைவர் சாவர்க்கர். 'இரத்தத்தைத் தாருங்கள், உங்களுக்கு விடுதலையை வாங்கித் தருகிறேன்' என்று நேதாஜி கர்ஜித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் படைகளுக்கு இரத்தம் சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தவர்தான் சாவர்க்கர்.

“காந்திஜி - நேதாஜி - ரவிஜி : தேசபக்தி நாடகங்கள் போடும் சாவர்க்கரின் வாரிசுகள்” - முரசொலி கடும் விமர்சனம்!

இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரை அகற்றுவதற்காக ராணுவ நடவடிக்கைகளை எடுத்த மாவீரன்தான் சுபாஸ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த 1940 ஆம் ஆண்டுகளின் தொடர்ச்சி அவை. அந்நிய நாடுகளின் உதவியைப் பெற்று பிரிட்டிஷ் இந்திய அரசை ராணுவ ரீதியாக வெல்ல நினைத்தார் போஸ். அதற்காக இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அந்த நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் சேவையைச் செய்து வந்தார் சாவர்க்கர். "யுத்தம் நம் கடற்கரைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இந்து மகாசபைகளைச் சேர்ந்தோர் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய படைகளில் சேர வேண்டும். மக்களையும் சேர்க்க வேண்டும். இதனை ஒவ்வொரு கிளையும் மிகத் தீவிரமாகச் செய்ய வேண்டும். ... ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது... இந்துக்கள் பிரிட்டிஷ் ராணுவத்தையும், கப்பல் படையையும், விமானப் படையையும் வெள்ளம் போல் நிரப்பிட வேண்டும்."-- என்று 1941 ஆம் ஆண்டு பகல்பூர் இந்து மகாசபையின் 23 ஆவது மாநாட்டில் பேசியவர் சாவர்க்கர்.

உயிரைப் பணயம் வைத்துப் படைகட்டி, பிரிட்டிஷாருக்கு எதிராக போஸ் போராடிக் கொண்டிருந்தபோது, அவரின் இந்திய தேசிய ராணுவத்துக்கு எதிராகப் படைவீரர்களைத் திரட்டிய சாவர்க்கரின் வாரிசுதான் ரவிஜி, இன்று நேதாஜியைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார்.

“காந்திஜி - நேதாஜி - ரவிஜி : தேசபக்தி நாடகங்கள் போடும் சாவர்க்கரின் வாரிசுகள்” - முரசொலி கடும் விமர்சனம்!

அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியை ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் துணையோடு நடத்தியது நேதாஜி மட்டும்தான். மதுராவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய சாவர்க்கர், 'இன்றைய நிலைமையில் எந்தவிதமான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடவடிக்கையிலும் நாம் நம்மைக் கட்டாயமாக உட்படுத்திக் கொள்ளக் கூடாது' என்றார்.

பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு சிறந்த வழி நமக்கு இருக்க முடியாது என்றும் பேசியவர் அவர். 'பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்துச் செயல்படுவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமாக இருப்பதால் அவ்வாறு தவிர்க்க முடியாத விதத்தில் ஒத்துழைப்பு நல்கி, அதனை உன்னுடைய நாட்டுக்கு லாபமானதாக மாற்றிடுக' என்று கட்டளையிட்டவர் சாவர்க்கர். இவரது வாரிசுகள்தான் இன்று தேசபக்த நாடகங்கள் போடுகிறார்கள்.

போரை காங்கிரசு கட்சி ஆதரிக்க வேண்டும் என்றது பிரிட்டிஷ் அரசு. 'இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுங்கள். அதன்பிறகு ஆதரிக்கிறோம்' என்று நிபந்தனை விதித்தது காங்கிரசு. இதெல்லாம் ஆளுநர் அறிவாரா? "காந்திஜியா? நேதாஜியா? யாரால் கிடைத்தது இந்திய சுதந்திரம்” என்ற பட்டிமன்றம் பிறகு நடத்தலாம். இந்திய சுதந்திரத்துக்கு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். பிதாமகர்கள் ஆற்றிய தொண்டு என்ன? சட்டமறுப்பு இயக்கத்தில், உப்பு சத்தியாகிரகத்தில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவர்களது பங்களிப்பு என்ன?

பிரிட்டிஷாருக்கு எதிராக 'இந்தியர்கள்' அனைவரும் போராட வேண்டும் என்ற உணர்வை காங்கிரசும் காந்தியும் உருவாக்கி வந்தபோது, அதைச் சிதைக்கும் வகையில் ‘இந்து தேசியம்' என்ற உணர்வை விதைத்தவர்கள்தான் இவர்கள். 'இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள்' என்ற நாட்டு எல்லை தேசியத்தை காங்கிரசு முன்வைத்தபோது, 'இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்' என்ற கலாச்சார தேசியத்தை விதைத்தவர்கள்தான் இவர்கள். இந்திய தேசிய உணர்ச்சி எழுந்துவிடாமல் தடுப்பணை போட்டவர்கள் இவர்கள்.

“காந்திஜி - நேதாஜி - ரவிஜி : தேசபக்தி நாடகங்கள் போடும் சாவர்க்கரின் வாரிசுகள்” - முரசொலி கடும் விமர்சனம்!

‘சுதந்திரப் போராட்டம் என்பது வெறும் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் ஆகிவிட்டது. பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது தேச பக்தியாகவும், தேசிய உணர்வாகவும் கருதப்படுவதே பிற்போக்கானதாகும்' என்று சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர். சட்டமறுப்பு இயக்கத்தை காங்கிரசு தொடங்கிய போது, '1942 க்குப் பிறகு சட்டத்தை மதிக்கவே தேவையில்லை என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்' என்று விமர்சித்தவர் கோல்வால்கர். அவருக்கு முன்னால் தலைவராக இருந்த ஹெட்கேவர், "சிறைக்குச் செல்வது மட்டுமே தேசபக்தி அல்ல” என்று கிண்டலடித்தார்.

இவர்கள் அனைவரையும் "பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள்" என்று அப்போதே குற்றம் சாட்டியவர் ஜவஹர்லால் நேரு. - 1933 ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் பேசும் போது நேரு இப்படிக் குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அறிமுகம் செய்யப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றவர்கள் அல்ல ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். அதனைக் கண்டித்தும் எழுதினார்கள். தங்கள் அலுவலகங்களில் அரை நூற்றாண்டுக் காலம் தேசியக் கொடியை ஏற்றவும் இல்லை. இத்தகைய கூட்டம் தேசபக்தி வகுப்பெடுப்பதைப் பார்க்கும் போது குமட்டுகிறது.

- முரசொலி தலையங்கம்.

banner

Related Stories

Related Stories