முரசொலி தலையங்கம்

”பண்பாட்டுச் சின்னமானது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” : முரசொலி தலையங்கம்

தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்துள்ளது.

”பண்பாட்டுச் சின்னமானது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” : முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (26-10-2024)

மதுரையில் பண்பாட்டுச் சின்னம்

மதுரையில் மாபெரும் பண்பாட்டுச் சின்னத்தைத் திறந்து வைத்திருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு உள்ளளவும் நின்று நிலைபெறக் கூடிய சின்னமாக அது அமைந்துள்ளது.

தைத் திங்கள் பிறப்பதையொட்டி பொங்கல் நாள், மாட்டுப் பொங்கல் நாள், காணும் பொங்கல் நாள், திருவள்ளுவர் நாள் ஆகிய அனைத்தையும் இணைத்து தமிழர் திருநாளாகப், பெருநாளாகக் கொண்டாடி வருகிறோம். இது ஒன்று தான் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள் ஆகும். ‘இந்த விழாவுக்குத்தான் கற்பனைக் கதைகள் இல்லை’ என்பார் தந்தை பெரியார். ‘இதற்கு இணையான விழா ஏதுமில்லை’ என்பார் பேரறிஞர் அண்ணா. இப்பொங்கல் காலத்தில்தான் ஏறுதழுவுதல் என்ற விளையாட்டுப் போட்டிகளும் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. அவை பண்பாட்டின் அடையாளங்களாகவும், பண்பாட்டின் நீட்சியாகவும் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பண்பாட்டு விளையாட்டை நடத்துவதற்காக மதுரையில், ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

ஏறுதழுவுதலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பதைப் போலவே, இந்த அரங்கத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது மாதிரி கம்பீரமாக அமைந்துள்ளது. ஏறுதழுவுதல் நடக்க, அதைச் சுற்றிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்க்க, வீரக்காட்சிகளானது, சங்க இலக்கியக் காட்சிகளாக நம் கண்முன் அமைந்திருக்கின்றன.

சிந்துச் சமவெளி முத்திரைகளில் திமில் காளைகள் இருக்கின்றன. ஹரப்பாவும் அலங்காநல்லூரும் ஒரே மாதிரியான காளைகளைக்

கொண்ட இடங்களாக இருக்கின்றன. கீழடியிலும் காளைகள் இருந்ததற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. ஏறுதழுவுதலைப் பாடாத இலக்கியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த விளையாட்டாக அது அமைந்துள்ளது. மாடுகள் எப்படி மனிதக்கூட்டத்தோடு கலந்தவையோ அதைப் போலவே, மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டும் மனிதர்களோடு கலந்தவை ஆகும்.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு சில சக்திகள் தடை எழுப்பியபோது 2006 ஆம் ஆண்டு தொடங்கி –- இறுதி வெற்றியை உச்சநீதிமன்றத்தில் பெற்ற 2023 வரை போராடியும் வாதாடியும் வந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆகும். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறைச் சட்டத்தையே 2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடையில்லை என்ற இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெறும் அளவுக்கு வாதாடியது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆகும்.

”பண்பாட்டுச் சின்னமானது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” : முரசொலி தலையங்கம்

“ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டிப் பந்தயம், ஜல்லிக்கட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. ‘கேலோ இந்தியா’ உள்பட எந்தத் திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை

ஊக்குவிக்கும் ‘கேலோ இந்தியா’ உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை” என்று தெரிவித்தவர், ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் அனுராக் தாக்கூர். உச்சநீதிமன்றத்தில் கையை விரித்து விட்டது பா.ஜ.க. அரசு. ஆனால், ‘இது உழவர்களின் பண்பாட்டுடன் கலந்தது’ என்று வாதிட்டது தி.மு.க. அரசு ஆகும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ அமைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். ஆசியாவிலேயே மாடு பிடிவிளையாட்டுக்கான முதல் அரங்கமாக இது கம்பீரமாக நிற்கிறது. இதற்கான அரசாணை 3.2.2023 அன்று போடப் பட்டது. 24.1.2024 அன்று கட்டி முடித்துவிட்டார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள். 66.80 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் 16 ஏக்கரில் அரங்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4,500 பேர் உள்ளே அமர்ந்து பார்க்கலாம். 62.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

பார்வையாளர் மாடம், பிரமுகர்கள் மாடம், வாடிவாசல், ஓய்வு அறை, காளைகள் காத்திருப்புக் கூடம், காளைகள் தயார்நிலைக் கூடம், அருங்காட்சியகம், நிர்வாக அலுவலகம், ஊடகவியலாளர் கூடம், விற்பனைக் கூடம், மாடுபிடி வீரர்கள் தங்கும் அறை, மருத்துவமனை என அனைத்துமே இங்கே உள்ளது. ஒரு பண்பாட்டு விளையாட்டுக்கு என தனியாக இத்தனை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் எங்குமே இருக்காது.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் இங்கே அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. காளைகள், ஏறுதழுவுதல் ஆகிய தகவல்களைக் கொண்டதாக மட்டுமே இந்த அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. காளை மாடுகள், பசுக்கள், எருமைகள் ஆகிய கன்றுகாலிகளைப் பற்றி படிப்பதற்காக மட்டுமே இது அமைந்துள்ளது. துறை சார்ந்த நூலகமாக இது அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்கள் இங்கே இருக்கின்றன. 1881 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கிருஷி சாஸ்திரம், மாட்டு வாகடமும் மாட்டு அங்க அடையாளமும் ஆகிய புத்தகங்கள் இங்கு உள்ளன. ஓலைச் சுவடிகள் உள்ளன. அந்தக் காலத்து பொங்கல், மாட்டுவண்டிப் புகைப்படங்களும் ஓவியங்களும் உள்ளன. கோட்டையில் பொங்கல் அன்று குண்டுகள் முழங்கி வணங்க வேண்டும் என்று ஆளுநர் வில்லியம் பெண்டிங் போட்ட உத்தரவு (1806) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பேர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் வழியில் -– தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பாதையில் -செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சியானது. தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளமாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை அமைத்துள்ளது.” என்று பெருமை பொங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருப்பது மிகமிகப் பெருமைக்கு உரியது ஆகும்.

ஜாதி, மத பிளவுகள் இல்லாமல் ‘தமிழர்’ என்ற ஒற்றுமை உணர்வுடன் ஏறுதழுவுதல் கொண்டாடப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள். பண்பாட்டுச் சின்னமானது பண்பாடு காக்கும் சின்னமாகவே திகழும்!

banner

Related Stories

Related Stories