முரசொலி தலையங்கம்

திருவள்ளுவருக்கு கலைஞர் செய்த தனிச்சிறப்புகள் எந்தப் புலவர்க்கும் செய்யப் படவில்லை - முரசொலி !

திருவள்ளுவருக்கு கலைஞர் செய்த தனிச்சிறப்புகள் எந்தப் புலவர்க்கும் செய்யப் படவில்லை - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலைங்கம் (19.1.2024)

குறளும் குதர்க்கவாதிகளும் – 2

பரிமேலழகர் உரை அவருக்கு உடன்பாடானதாக இல்லை. எனவே வள்ளுவர் கருத்துக்கு இணங்க உரை செய்ய வேண்டும் என்றார். அதற்காக குழு அமைத்தார். “நம் நாட்டின் அரசியல் முதல் மக்களின் ஒழுக்கம் வரை சீர்பட வேண்டுமானால் குறளைப் படியுங்கள்” என்று பிரச்சாரம் செய்தார் பெரியார். “நமக்கு ஒரு வேத நூல், மூல நூல், நெறி நூல், வழிகாட்டி நூல் ஒன்று இருக்கிறதென்றால் அது திருக்குறளேயாகும். அதை நமது மக்கள் படிக்க வேண்டும். மாணவர்களும், புலவர்களும் ஓய்வு நேரங்களில் திருக்குறள் பிரச்சாரம் செய்ய வேண்டும். நீங்கள் என்ன மதத்தினர் என்று கேட்டால், ‘வள்ளுவர் மதம்’ என்று சொல்லுங்கள். உங்கள் நெறியென்னவென்றால், ‘குறள் நெறி’ என்று சொல்லுங்கள்” என்று சொன்னார். திருக்குறள் எழுச்சி தொடங்கியதும்தான் கம்பராமாயணத்தை தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பியது.

முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு, குறளாசானைப் போற்றும் அரசாக மாறியது. இது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியது. திருவள்ளுவர் பிறந்த காலத்தை கி.மு.31 என்று கணித்தார் மறைமலையடிகள். அதனை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன்படி பார்த்தால் இன்று 2024 என்பதுடன் 31 ஐ கூட்டினால் 2055 என்று வரும். இதுதான் திருவள்ளுவர் ஆண்டு. தமிழறிஞர்களின் இந்த ஆண்டுக் கணக்கை முதல்வர் கலைஞர் 1971 இல் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசின் அரசாணையாக வெளியிட்டார். அதுவே இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருவள்ளுவர் படத்தை வைக்க காரணமானவர் கலைஞர். தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும், குறளையும் எழுதி வைக்க உத்தரவிட்டார் பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர். மயிலை திருவள்ளுவர் கோவிலை சீரமைத்தார் கலைஞர். தலைநகர் சென்னையில் வள்ளுவருக்கு மாபெரும் கோட்டம் கட்டினார் கலைஞர். 1956 ஆம் ஆண்டுமுதல் ‘முரசொலி’யில் ‘குறளோவியம்’ தீட்டத் தொடங்கினார். திருக்குறளுக்கு உரை எழுதினார் கலைஞர். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கன்னியாகுமரியில் 133 அடி சிலை வைத்தார் கலைஞர். இத்தகைய தனிச்சிறப்புகள் எந்தப் புலவர்க்கும், தனி நூலுக்கும் செய்யப் படவில்லை. இன்று உலகின் அடையாளமாக திருக்குறள் மாற இவைதான் காரணம் ஆகும்.

திருவள்ளுவருக்கு கலைஞர் செய்த தனிச்சிறப்புகள் எந்தப் புலவர்க்கும் செய்யப் படவில்லை - முரசொலி !

குறளின் பெருமையை ஆரிய கும்பலால் குறைக்க முடியவில்லை. உடனே, ‘மனுவில் உள்ளதுதான் குறளில் இருக்கிறது’ என்று கிளம்பினார்கள். “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி?” என்று பாடியவர் மனோன்மணியம் சுந்தரனார். திருக்குறளை நன்கு உணர்ந்தவர்கள், மனுவை போற்றுவார்களா? என்று கேட்டுவிட்டு, போற்றமாட்டார்கள் என்று சீறியவர் சுந்தரனார். மனு விதைத்தது அறம் அல்ல. இரத்த வேற்றுமை, சாதி உயர்வு, ஆரியர் மேலாண்மை. ஆனால் குறளாசான் சொன்னது, ‘பிறப்பொக்கும்’ என்பதாகும். ‘வேதத்தில் இருப்பதுதான் திருக்குறளில் இருக்கிறது’ என்று நாகசாமி என்பவர் புத்தகம் எழுதினார். அதற்கு உடனடியாக மறுப்பை பதிவு செய்தார், குறளோவியம் தீட்டிய கலைஞரின் கொள்கை வாரிசு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“வள்ளுவரை சிறுமைப்படுத்தி, திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ‘குடியரசுத் தலைவர் விருதுகளை’ தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவருக்கு கலைஞர் செய்த தனிச்சிறப்புகள் எந்தப் புலவர்க்கும் செய்யப் படவில்லை - முரசொலி !

தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து பா.ஜ.க. மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கெனவே பத்மவிபூஷண் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது” என்று அந்த அறிக்கையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். நாகசாமியின் கருத்தை முழுமையாக மறுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், ஆய்வாளர் மஞ்சை வசந்தனும் தனித்தனியாக நூல்களே எழுதினார்கள். இத்தகைய அறிவியக்கத் தாக்குதலில் ஆரியத்தின் பொய்முகம் கிழிந்தது. அதனால்தான் இறுதியாக அவர்கள் ஆர்.என். ரவியை பிடித்துக் கொண்டுள்ளார்கள்.

ஆளுநர், அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. அவர் வாங்கித் தரும் கெட்டபெயர்களும் பா.ஜ.க. கணக்கில்தான் போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ரத்தபேதம் இல்லை என்கிறது வள்ளுவம். ஒழுக்கம் உள்ளவன் உயர்குடி, ஒழுக்கம் இல்லாதவன் தாழ்ந்தகுடி என்று பிறப்பை மறுத்து ஒழுக்கத்தை வலியுறுத்திய அறநூல் அது. ஆனால் குலநிலை ஒழுக்கம் பேசுகிறது மனு. உழவே உலகத்தார்க்குத் தலை என்கிறது வள்ளுவம். ஆனால், உழவுத் தொழில் இழிவானது என்கிறது மனு. இரும்பை உடைய கலப்பையையும் மண்வெட்டியையும் வைத்து நிலத்தை வெட்டக் கூடாது என்கிறது மனு. பெண்ணை உடமைப் பொருளாகச் சொல்கிறது மனு. வாழ்க்கைத் துணை என்றார் வள்ளுவர். எனவே அது வேறு, இது வேறு. இது படிக்கத் தெரிந்தவர்கள் அனைவர்க்கும் தெரியும். ஆர்.என்.ரவி வேறு வேலையைப் பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories